பாமாலை 366 – அருள் நிறைந்தவர்,
பூரண இரட்சகர்
(My faith looks up to
Thee)
Tune : Olivet
‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருந்தேன்’
கலாத் 2 : 20
நமது ஆராதனைகளில் பாடப்படும்
பாடல்கள், கிறிஸ்தவ ஜீவியத்தைக் குறித்த வெவ்வேறு பொருள்களின் பேரில் எழுதப்பட்டவை. ‘அருள் நிறைந்தவர்’ என்னும் இப்பாடல், ‘பிரார்த்தனை’
என்னும் பொருளில் எழுதப்பட்டது. முதல் மூன்று
கவிகளில் ஆண்டவரின் சகாயத்தை வாழ்நாள் முழுவதும் அளிக்க ஜெபித்து, கடைசிக்கவியில்,
மரிக்கும் காலத்தில் ஆறுதல் தந்து, மோட்சத்தில் சேர்க்கும்படி மன்றாடிப் பாடும் பாடலாகும்
இது.
இதை எழுதிய ரே பாமர் (Ray
Palmer) போதகர் அமெரிக்காவில் ரோட் ஐலண்டு மாகாணத்தில், காம்ப்ட்டன் நகரில், 1808ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை ஒரு நீதிபதி. தமது இளவயதில் பாஸ்டன் நகரில் வளர்ந்து, பின் அங்குள்ள
ஒரு மளிகைக் கடையில் கணக்கராக வேலைபார்த்தார். பின்பு யேல் பல்கலைக்கழகத்தில் மூன்று
ஆண்டுகள் கற்றுத் தேறிப் பட்டமும்பெற்று, நியூயார்க் நகரில் ஒரு பெண் பாடசாலையில் ஆசிரியராக
அமர்ந்தார். வேலை பார்க்கும்போதே சுயமாக வேதசாஸ்திரம்
கற்று, 1830ல் குருப்பட்டம் பெற்றார். பின்பு
முப்பது ஆண்டுகள் இரு சபைகளில் போதகராக ஊழியம் செய்தார்.
ரே பாமர் குருப்பட்டம் பெற்றுப்
போதகரானபின், அவருக்கு கிறிஸ்தவப் பாடல்கள் எழுத ஆவல் உண்டாயிற்று. ஒருநாள் மாலையில் தமது அறையில் உட்கார்ந்து, ஏதாவது
பாடல் எழுத ஆவல்கொண்டு, தமது முதல் பாடலாக, ‘அருள் நிறைந்தவர்’ என்னும் பாடலை ஆறு கவிகளுடன்
எழுதி, தன் சட்டைப்பையில் வைத்துவிட்டு, இரண்டு ஆண்டுகளாக அதை மறந்துவிட்டார். 1832ல் பாஸ்டன் நகரில் அவரது நண்பரான லவல் மேசன்
பண்டிதரைச் சந்தித்தார். அப்போது மேசன் பண்டிதர்,
‘சமுதாய வழிபாடுகளில் பாடுவதற்கேற்ற ஆவிக்குரிய பாடல்கள்’ என்னும் ஒரு பாட்டுப் புத்தகத்தைத்
தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். இப்புத்தகத்தில்
சேர்த்துக்கொள்ளத்தக்க பாடல்கள் தம்மிடம் உண்டா என மேசன் பண்டிதர் பாமர் போதகரைக் கேட்க,
அவர் இரு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு, தமது சட்டைப் பையிலிருந்த, ’அருள் நிறைந்தவர்’
என்னும் பாடலைக் கொடுத்தார். பண்டிதர் இதை ஒரு சிறந்த பாடலாகக் கருதி, தாமே அதற்கு,
‘Olivet’ என்ற ஒரு இராகத்தையும் எழுதினார்.
மேலும் அவர் போதகரை நோக்கி, ‘நீங்கள் அநேக ஆண்டுகள் உயிருடன் இருந்து மக்களுக்கு
அநேக நற்காரியங்களைச் செய்யக்கூடும். ஆனால்
பின் சந்ததியார் இந்த ஒரே பாடலின் மூலமாகத்தான் உங்களை அறிந்துகொள்வார்கள்’ என்று போற்றியுள்ளார்.
இப்பாடல்தா பாமர் போதகர் தமது
வாழ்க்கையில் எழுதிய முதல் பாடல். இதன் இறுதி
அடிகளை எழுதும்போது, அதிக உணர்ச்சியால் பரவசமடைந்து, கண்களில் நீர் ததும்பியதாக அவரே
கூறியுள்ளார். நமதாண்டவர் அருள் நிறைந்தவராகவும்,
பூரண இரட்சகராகவும் இருப்பதைத் தமது உள்ளத்தில் உணர்ந்து, எவ்வகைக் கலக்கம் நேரிடினும்
அவரே தகுந்த சகாயமும், ஆறுதல் செய்ய வல்லவர் என்பதை இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார். இப்பாடல் முதல்முறையாக இங்கிலாந்தில் பிரசுரமானபோது,
‘பரிசுத்தவான்கள் உலக வாழ்க்கையை நீத்து, விண்ணுலகம் செல்லும்போது பாட, அல்லது பாடக்கேட்க
விரும்பும் பாட்டு’ என்று போற்றப்பட்டது. பாமர்
போதகர் இப்பாடலுக்கு ஆறு கவிகள் எழுதினார்.
ஆனால் நமது புத்தகங்களில் நான்கு கவிகள்தான் உள்ளன.
தமது வாழ்க்கையில் அநேக பாடல்கள்
எழுதியதுடன், லத்தீன் மொழியிலிருந்தும் பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆனால் இவற்றிற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார்; அவர்
எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.
Unison
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர்
தேவரீரே
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.
2. சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து
பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர், இயேசுவே;
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.
3. பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும்
வருகினும்
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.
4. மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில்,
சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.