Thursday, October 25, 2012

பாமாலை 370 - எந்தன் ஆத்ம நேசரே (Hollingside)

பாமாலை 370 – எந்தன் ஆத்ம நேசரே
Tune : Hollingside


‘உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்’. சங்கீதம் 143:9

1861ம் ஆண்டு, அமெரிக்க உள்நாட்டுப்போரில், ஒரு போர்வீரன், இரவில் தனியாக ஒரு காட்டில் காவல் வேலையில் நிற்கும்போது, மனக்கலக்கம் அடைந்து, ‘எந்தன் ஆத்ம நேசரே’ என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். எதிரி ஒருவன் அவன் நிற்பதைக் கண்டு, மெதுவாக அவனை அணுகி, அவனைச் சுட்டுக்கொல்வதற்காகத் தன் துப்பாக்கியை நோக்கினான்.  அவன் பாடுவதைக் கேட்டு அதைக் கவனிக்கலானான்.  இரண்டாவது கவியில், ’ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்’ என்ற வார்த்தைகளைக் கேட்டவன், அவனைச் சுடாமல், சத்தமில்லாமல் திரும்பிப் போய்விட்டான். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், இவர்கள் இருவரும் ஒரு கப்பல் பிரயாணத்தில் சந்திக்க நேரிட்டது.  போர்வீரன் அதிசயமாகக் காக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்தான் ‘வெள்ளம்போன்ற துன்பத்தில் திக்கில்லாமல் தடுமாறிப் போகையில்’ இப்பாடலைப் பாடி ஆறுதலும் பாதுகாப்பும் பெற்றான்.

இதை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரரான சார்ல்ஸ் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகர்.  அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் ஊரில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் என்னுமிடத்திலும், பின்னர் ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று பட்டம் பெற்றார். ஆக்ஸ்வர்டில் பயிலும்போது, ‘ஆக்ஸ்வர்டு மெதடிஸ்டுகள்’ என்னும் ஒரு குழுவை ஸ்தாபித்தார்.  இந்தக் குழுதான், பின்னர் மெதடிஸ்டு சபையாகத் துளிர்த்தது.

சார்ல்ஸ் வெஸ்லி தன்னுடைய வாழ்க்கையில் 6500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.  அப்பாடல்களில் அநேகமாக திருமறையிலுள்ள பதங்களே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘எந்தன் ஆத்ம நேசரே’ என்னும் பாடல் 1740ம் ஆண்டு எழுதப்பட்டது. ‘உலகத்திலுள்ள எல்லா அரசர்களும் பெற்ற கீர்த்தியை விட, இந்தப் பாடலை எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்குமானால், அதையே மேலானதாகக் கருதியிருப்பேன்’ என்று ஹென்ரி பீக்கர் என்னும் போதகர் ஒருமுறை கூறியுள்ளார்.  ஆனால் அதை எழுதிய வெஸ்லி போதகர் அதை ஒரு சிறந்த பாடலாகக் கருதவில்லை.  ஆகையால் அவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது முதல் முறையாக வெளியிடப்பட்டது.  ஆயினும் கிறிஸ்தவ உலகில் இது மிகச் சிறந்த பாடலாகக் கருதப்பட்டு அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இப்பாடல் எழுதப்பட்ட சந்தர்ப்பத்தைக் குறித்து பல அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. வல்லூறினால் துரத்தப்பட்ட பறவை ஒன்று, ஒருமுறை வெஸ்லி போதகரின் அறைக்குள் புகுந்து, அவரது அங்கியில் அடைக்கலம் புகுந்ததைக் கண்டு இப்பாடலை எழுதியதாகவும், கடலில் அலைகள் திரண்டு அவர் பிரயாணமான கப்பலைத் தாக்கியபோது இதை எழுதியதாகவும், ஒரு கூட்டம் வெறியர்கள் அவரைத் தாக்கியதால், அவர் தப்பியோடி மறைந்திருந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாகவும் கூறப்படுகின்றன.  ஆனால் அவர் உண்மையில் அவர் ஆண்டவரின் அன்பைக் குறித்துப் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்றேயொழிய வேறு காரணங்களால் எழுதப்பட்டதென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை.  மெதடிஸ்டு சபை ஆரம்பமான சில மாதங்களில் அவருக்கு ஏற்பட்ட ஆவிக்குரிய மாறுதலின் விளைவாகவே இது எழுதப்பட்டதென்று ஐயமறக் கூறலாம்.

இப்பாடலை எழுதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், 1788ல் சார்ல்ஸ் வெஸ்லி போதகர் லண்டன் மாநகரில் காலமானார். ஆயினும் அவர் எழுதிய ‘எந்தன் ஆத்ம நேசரே’, ‘இன்று கிறிஸ்து எழுந்தார்’, ‘அன்பின் ரூபி மோட்சானன்ந்தம்’, ‘பாவிக்காய் மரித்த இயேசு’, ‘கிறிஸ்துவின் வீரரே’ முதலிய ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாகக் கிறிஸ்து சபை அவரை நன்றியுடன் நினைவுகூருகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்.

2.  வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்

3.  குறை யாவும் நீக்கிட
நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே

4.  பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.

Post Comment

Monday, October 15, 2012

பாமாலை 21 - சேனையின் கர்த்தா

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    சேனையின் கர்த்தா
சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
 
2.    ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
 
3.    சேனையின் கர்த்தா
சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை
 
4.    மன்னா நீர் சூரியன்
என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
 
5.    திரியேக தேவே
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.

Post Comment