தட்டி, தட்டி நிற்கிறார்
(Knocking, Knocking, who is there?)
‘இதோ,
வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்’. வெளி 3 : 20
அநேகக் கிறிஸ்தவ வீடுகளில்
ஆண்டவராகிய இயேசுவைக் குறித்த பல படங்கள் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு படத்தில் கிறிஸ்து கதவண்டையில் நின்று தட்டிகொண்டிருப்பதையும்,
ஒரு படத்தில் கிறிஸ்து நல்ல மேய்ப்பனாகவும், இன்னொரு படத்தில் முள்முடியுடன் ஆண்டவர்
சிலுவையில் தொங்குவதையும் காணலாம். ஆகவே, கிறிஸ்துநாதரைக்
குறித்த படம் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறையிலும் கிறிஸ்து இயேசு இருப்பதாகக்
கருதப்படுகிறது. ஆயினும் சுவர்களில் தவிர,
நம் வீடுகளில் ஆண்டவருக்கு இடமிருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம். நமது வீடுகளில் நாம் நடப்பிக்கும் எல்லாக் காரியங்களிலும்
ஆண்டவருக்குப் பங்கு உண்டா? அவர் எப்போதும்
கதவண்டையில் நின்று, உள்ளே வருவதற்காக அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பாடலின் கடைசிக் கவியில் சொல்லப்பட்டிருப்பதுபோல,
’உள்ளே வாரும்! இயேசுவே
எந்தன் நெஞ்சில் தங்குமே’
என்று அவரை நம் உள்ளத்தில்
எப்போதும் வைத்துக்கொள்வோமாக.
Harriet Elizabeth Beecher Stowe |
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
மத்தியில், அமெரிக்காவில் மக்கள், செல்வம் தேடுவதிலேயே அதிகக் கவனம் செலுத்திவந்தனர். அங்குள்ள தென்பகுதிகளில் ஏராளமான பருத்தித் தோட்டங்களுண்டு. இவற்றில் ஆயிரக்கணக்கான கறுப்பின அடிமைகளைப் பலவந்தமாக
உழைக்கச்செய்து, தோட்ட முதலாளிகள் திரண்ட செல்வத்தைச் சம்பாதித்தனர். பெயரளவில் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அவர்களது
வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குச் சிறிதளவும் இடமில்லாதிருந்தது. அவர்கள் மத்தியில் வசித்த ஹாரியட் பீக்கர் ஸ்டோ
அம்மையார் (Harriet
Elizabeth Beecher Stowe) இதைக்கண்டு
மிகவும் மனம்வருந்தி, கடவுளின் அழைப்பு மக்களுக்கு எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது,
என்பதை உணர்த்துவதற்காக, ‘தட்டித் தட்டி நிற்கிறார்” என்னும் பாடலை எழுதினார். இப்பாடல், எழுப்புதல் கூட்டங்களில் ஒரு ‘தெய்வ அழைப்பு’
பாடலாகவும், சிறுவர் பாடலாகவும் வெகுவாகப் பாடப்பட்டு வருகிறது.
ஸ்டோ அம்மையார் இப்பாடலுக்கு
மூன்று கவிகள் மட்டும் எழுதினார். மூன்றாவது கவி,
’நேசப் பார்வையுற்ற மீட்பர்
இன்னும் காத்து நிற்கிறார்’
என முடிவடைகிறது. அநேக ஆண்டுகளுக்குப்பின், அமெரிக்காவில் நடந்த ஒரு
நற்செய்திக் கூட்டத்தின் முடிவில் இப்பாடல் பாடப்பட்டது. அக்கூட்டத்துக்கு ஒரு தாயாரும் அவரது எட்டு வயதுள்ள
பெண்குழந்தையும் சென்றிருந்தனர். கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது, குழந்தை தாயாரைப்
பார்த்து, ‘அம்மா, அந்தப் பாடலின் முடிவு சரியல்ல; ஏனெனில் இரட்சகர் இன்னும் வெளியிலேயே
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்’ என்று கூறினாள். ஆனால் தாயார் அதை முக்கியமாகக் கருதவில்லை. வீடு சேர்ந்தவுடன் குழந்தை தன் அறைக்குச் சென்று,
சிறிது நேரத்துக்குப்பின் தாயாரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து, ‘அம்மா, அப்பாடலுக்கு
இப்படிப்பட்ட ஒரு முடிவு அல்லவா இருக்கவேண்டும்?’ என்று வினவினாள். அக்காகிதத்தில்,
’உள்ளே வாரும்! இயேசுவே!
எந்தன் நெஞ்சில் தங்குமே
திவ்ய அன்பை உணராமல்
முன்னே வாசல் பூட்டினேன்
இப்போதோ! என் நேச நாதா!
உள்ளே வாரும்! வாருமேன்’
என்னும் ஒரு கவியைக் கண்டு,
தாயார் வியப்படைந்தார். பின்னர் அக்கவியையும், அது எழுதப்பட்ட சந்தர்ப்பத்தையும் ஒரு
கிறிஸ்தவப் பத்திரிகைக்குத் தாயார் அனுப்பினார். இதைப் பார்த்த ஹே அட்கின் போதகர்,
அக்கவியையும் தனது சபைப் பாட்டுப் புத்தகத்திலுள்ள ‘தட்டித் தட்டி நிற்கிறார்’ என்னும்
பாடலுடன் சேர்த்துக்கொண்டார். இக்கவி அப்பாடலுகு மிகவும் அவசியமானதென்று எல்லோரும்
பாராட்டினதால் அநேகப் பாட்டுப் புத்தகங்களில் இப்பாடல் இக்கவியுடன் நான்கு கவிகளாகக்
காணப்படுகிறது.
இப்பாடலை எழுதிய ஹாரியட் பீக்கர்
அம்மையார் 1812ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமெரிக்காவில் லிச்பீல்டு நகரில் பிறந்தார். நான்கு வயதாயிருக்கையில் தாயாரை இழந்ததால், தன்
பாட்டியோடு கில்போர்ட் நகரில் வசிக்கலானார்.
சில ஆண்டுகளுக்குப்பின் லிச்பீல்ட் நகருக்குத் திரும்பிவந்து, அங்குள்ள ஒரு
கல்வி நிலையத்தில் கல்வி பயின்றார். இங்கிருக்கும்போது, ஆத்துமாவின் அழியாமையைக் குறித்த
ஒரு கட்டுரை எழுதி, அந்நிலையத்திலுள்ள எல்லாருடைய மதிப்பையும் பெற்றார். 1832ல் அவரது குடும்பத்தினர் யாவரும் சின்சினாட்டி
நகரில் வசிக்கச் சென்றனர். இங்கிருக்கும்போதுதான்
அவர், ‘Uncle Tom’s
Cabin’ என்னும் கதை புத்தகத்தை
எழுதி உலகப்புகழ் பெற்றார். இக்கதை அமெரிக்காவில்
அடிமைகளின் பரிதாப வாழ்க்கையை விவரிப்பதாகும். அவர் அநேக பாடல்களும் எழுதியுள்ளார்.
ஹாரியட் பீக்கர் ஸ்டோ,
1896ம் ஆண்டு, ஜூலை மாதம் 1ம் தேதி, தமது 84வது வயதில் ஹார்ட்ஃபோர்ட் நாரில் மறுமைக்குட்பட்டார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
பரதேசி
போல வந்தும்
ராஜனாய்
இருக்கிறார்
உள்ளமே
இவ்வன்புணர்ந்து
கதவைத்
திறக்கப்பார்!
2. தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
நிலையோரம்
புல்முளைத்துக்
கீலும்
துருப் பட்டது
கதவசையாமல்
தங்கித்
திறவாமற்
போயிற்று!
3. தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
சூட்டப்பட்ட
சிரசுள்ளார்!
காயப்பட்ட
கைகள் பார்!
நேச
பார்வையுற்ற மீட்பர்
இன்னும்
காத்து நிற்கிறார்.
4. உள்ளே வாரும்! யேசுவே
எந்தன்
நெஞ்சில் தங்குமே
திவ்ய
அன்பை உணராமல்
முன்னே
வாசல் பூட்டினேன்
இப்போதோ
என் நேச நாதா
உள்ளே
வாரும்! வாருமேன்!