பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே
(Alleluya! O Sons and Daughters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE
இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.
John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர். அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர். ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார். திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது. அவர் ஒரு சிறந்த கல்விமான். ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார். திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார். அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.
SATB
1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!
2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.
3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.
4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!
5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.
6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.
7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.
8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.
9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!