Wednesday, October 8, 2014

பாமாலை 353 - இயேசுவின் கைகள் காக்க

பாமாலை 353 – இயேசுவின் கைகள் காக்க
(Safe in the arms of Jesus)

’அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். உபா 33:27

முன்னொரு காலத்தில் ஒரு வாலிபனும் ஓர் இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துத் திருமணம் செய்யத் தீர்மானித்தனர்.  ஆனால் அவர்களது பெற்றோர் இதற்குச் சம்மதம் தர மறுத்தனர்.  அவ்வூருகருக்கில் ஒரு மலையடிவாரத்தில் சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அவ்விருவரும் அச்சிலையினடியில் முழங்காலிட்டு ஜெபித்து வாழ்க்கை ஒப்பந்தம் செய்து, அயல் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.  அநேக ஆண்டுகளுக்குப்பின், அவ்வாலிபன் அப்பெண்ணைக் கைவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டான்.  தனியாக விடப்பட்ட அவள், யாதொரு ஆதரவுமின்றித் தவித்து, மறுபடியும் மலையடிவாரத்திலிருந்த அச்சிலையினடியில் முழங்காலிட்டுத் தன் துயரத்தை ஆண்டவரிடம் கூறினாள்.  உடனே சிலையின் வலதுகரம் ஆணியிலிருந்து கழன்று, அவளை அணைத்து மார்போடு சேர்த்துக்கொண்டது.  அதுமுதல் சிலையின் வலதுகரம் அந்நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது ஒரு கதையாயிருந்தாலும், ஆதரவற்றுத் தவிப்பவர்களுக்கு ஆண்டவரின் கரங்களே ஆதரவு என்னும் உண்மையைப் புகட்டுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்துகொண்டிருந்த ஒரு விழாவில், நகரவாசிகளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.  திடீரென அங்கு ஒரு கலவரம் ஏற்பட, எல்லோரும் பயமடைந்து அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர்.  திகிலடைந்து ஓடிவந்த ஒரு குழந்தையை அதின் தாயார் கையிலெடுத்து, மார்போடு சேர்த்தணைத்து, ‘அம்மாவின் கையிலிருப்பதால் பயப்படாதே’ என தைரியமூட்டினாள். 
Fanny Crosby
இதைக்கண்ட ஓர் அம்மையார் இச்சம்பவத்தைப் ஃபானி கிராஸ்பி
(Fanny Crosby) என்னும் தனது நண்பருக்குச் சொன்னார்கள்.  இளம் பிராயத்திலிருந்தே கண் பார்வையை இழந்த கிராஸ்பி அம்மையார், கிறிஸ்தவப் பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.  இச்சம்பவத்தைக் கேட்டவுடன் அந்த அம்மையார் இயேசுவின் கரங்களில் நாம் இருக்கும்போது எவ்வித ஆபத்துகளிலும் பத்திரமாகக் காக்கப்படுவோம் என்பதை உணர்ந்து, இதை ஒரு பாடலாக வெளியிட ஆவல் கொண்டார்.  சில தினங்களுக்குப் பின் அவரது நண்பரான வில்லியம் டோன் போதகர் (William Howard Doane), சின்சினாட்டி நகரில் ஓய்வுநாட்பாடசாலை சம்பந்தமான ஒரு மாநாட்டுக்குச் செல்லும் பாதையில் ஃபானி கிராஸ்பி அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மாநாட்டில் பாடப்படுவதற்காகப் புதிதாக அவர் எழுதியிருந்த ராகத்துக்கேற்ற ஒரு பாடலை எழுதித்தருமாறு அம்மையாரைக் கேட்டார். 
William Howard Doane
போதகர் புகைவண்டி ஏறுவதற்கு 35 நிமிடங்களே இருந்தன. உடனே அம்மையார் அவரைப் பியானோவில் ராகத்தை வாசிக்கச் செய்து ‘இந்த ராகம் ‘இயேசுவின் கைகள் காக்க, மார்பினில் சாருவேன்’ என்னும் பாடலை என் மனதில் பிறப்பிக்கிறது’ எனக்கூறி, சுமார் 25 நிமிடங்களுக்குள் இப்பாடலை எழுதி முடித்துப் போதகரிடம் கொடுத்தார்.  அவரும் அதை ஒருமுறை பாடிப்பார்த்து வெகுவாகப் பாராட்டி, குறிப்பிட்ட நேரத்தில் சின்சினாட்டி நகரையடைந்தார்.  இம்மாநாட்டில்தான் இப்பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது.  இப்போது இப்பாடல் கிறிஸ்தவ உலகமெங்கும் தமக்கு அருமையானவர்களை இழந்து துக்கக்கடலில் மூழ்கியிருப்பவர்களுக்கு ஆறுதலும், மனசாந்தியும், நம்பிக்கையும் அளித்து வருகிறது.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1820ம் ஆண்டு மார்ச் மாதம், 24ம் தேதி, நியூயார்க் நகரில் பிறந்தார்.  ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போதே தவறான மருத்துவ சிகிச்சையால் கண் பார்வையை இழந்தார்.  பன்னிரெண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரில் பார்வை இழந்தோர் பள்ளியில் பயின்று 1847 முதல் 1858 வரை அப்பள்ளியிலேயே ஆசிரியையாயிருந்தார்.  1858ல் அவர் அலக்ஸாண்டர் ஆல்ஸ்டைன் என்னும் பார்வை இழந்த சங்கீத நிபுணரை மணந்தார்.  இளம் பிராயத்திலேயே கவித்திறமையுடையவராயிருந்து, பல செய்யுள்களும் பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எட்டு வயதாயிருக்கையில் தனது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்றவர் இவரே.  தமது வாழ்க்கையில் எட்டாயிரத்துக்கதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள், ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப்புத்தகத்தில் காணலாம்.  ‘போற்றும் போற்றும் புண்ணியநாதரைப் போற்றும்’ (பாமாலை 267), ‘இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்’ (பாமாலை 333) என்னும் பாடல்களும் இவர் எழுதியவையே.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12ம் தேதி தமது 95ஆம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும்

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்

2.    இயேசுவின் கைகள் காக்க
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக்கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் தோஷம்
விரைவில் தீருமே.

3.    இயேசு என் இன்பக் கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே
நித்திய கன்மலை,
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.

Safe in the Arms of Jesus

Post Comment

No comments:

Post a Comment