Sunday, January 18, 2015

பாமாலை 400 - எருசலேம் என் ஆலயம்

பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்
(Jerusalem my happy home)

ஒரு புதிய வருடத்தைத் துவக்கும்போது நம் ஆலயங்களில் கண்டிப்பாக ‘இன்னோர் ஆண்டு முற்றுமாய்’ பாமாலை இடம்பெறும்.  அதன் மூன்றாவது சரணத்தில்,

“யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே”.

என்று பாடியே நாம் வருடத்தைத் துவக்குகிறோம்.  நித்திய வாழ்வின் நம்பிக்கை மனதில் வேரூன்றப்பட்டு இருந்ததன் காரணமாகவே நம் முற்பிதாக்களால் மரணத்தைப் பற்றிய எந்த அச்சமுமின்றி, ஒரு வருடத்துவக்கத்திற்கான பாடலிலும் கூட, இத்தனை அழகிய வரிகளை உறுதியுடனும் மகிழ்வுடனும் எழுதமுடிந்தது.

‘திருமணம்’ எனும் பந்தம் இவ்வுலகவாழ்வில் ஒரு மகிழ்விற்குரிய, ‘மங்கல’ நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கிறிஸ்துவைப் பற்றி அறிந்திராத நம் பிற சமய சகோதரரின் திருமணங்களில் யாரேனும் ‘தும்மல்’ போட்டுவிட்டால் கூட அது ஒரு ‘அமங்கல’க் குறியீடாகவே கருதப்பட்டு வருகிறது. இப்படியிருக்க, நம் கிறிஸ்தவ திருமண ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் வாக்குறுதிகளை ஆண்டவர் சந்நிதியில் பரிமாறிக்கொள்ளும்போது, ‘வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று கூறித் தம் இல்லற வாழ்வைத் துவக்குகின்றனர்.  திருமணம் போன்ற ஒரு ‘மங்கல’ நிகழ்வின் ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவக்கும் தருணத்தில் ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று வாக்குறுதி அமைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு ’மரணம்’ என்ற சொல் எவ்வித அச்சத்தையும் தருவதில்லை என்பதை எத்தனை அழகாய்க் காட்டுகிறது!

மரணத்தை ஜெயமாக விழுங்கிய ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்ளும் நாம், ‘மரணம்’ என்ற சொல்லைக்கண்டு அஞ்சுவதோ, ‘பரம வாழ்வின்’ மகத்துவத்தை தியானிக்கவோ, நித்திய வாழ்வின் உறுதியைப் பாடலாகப் பாடத் தயங்குவதோ எத்தனை பெரிய அறியாமை!

நம் திருச்சபையின் திடப்படுத்தல் ஆராதனை முறைமையிலும் பேராயர் திடப்படுத்தல் பெறுபவரின் தலையில் கைவைத்து ‘கர்த்தாவே, இந்த உம்முடைய பிள்ளை என்றைக்கும் உம்முடையவனா(ளா)ய் இருக்கவும், உமது நித்திய ராஜ்ஜியத்தில் சேருமளவும் நாள்தோறும் உம்முடைய பரிசுத்த ஆவியில் வளர்ந்தேறவும், உமது பரம கிருபைகளால் இவனை(ளை)க் காத்தருளும்” என்றே ஜெபித்து திடப்படுத்தல் செய்து வைக்கிறார்.

நம் ஞானஸ்நான ஆராதனை முறையிலும், ‘… .. பாவத்துக்கு மரித்து, நீதிக்குப் பிழைத்து, கிறிஸ்துவின் மரணத்துக்குள் அவருடனேகூட அடக்கப்பண்ணப்பட்டிருக்கிற இவன், தன்னிலுள்ள பழைய மனுஷனைச் சிலுவையில் அறைந்து, பாவசரீரத்தை முற்றிலும் அழிக்கவும், இவன் உம்முடைய குமாரனின் மரணத்திற்குப் பங்குள்ளவனாய் இருக்கிறதுபோல, அவர் உயிர்த்தெழுதலுக்கும் பங்குள்ளவனாய் இருக்கவும், கடைசியிலே மற்றுமுள்ள உம்முடைய பரிசுத்த சபையார்களோடுகூட உமது நித்திய ராஜ்ஜியத்துக்குச் சுதந்தரவாளியாகவும் தேவரீர் கிருபை செய்யவேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டுத் தாழ்மையாய் வேண்டிக்கொள்ளுகிறோம்” என்ற அர்த்தமுள்ள ஜெபம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘..மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன்’ என்ற வரிகளை உச்சரிக்க ஒவ்வொருமுறை நாம் விசுவாசப்பிரமாணம் சொல்லும்போதும் பயப்படுகிறோமா?

இப்படி ‘மரணம்’ என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் / நிகழ்விலும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ‘நித்திய வாழ்வின்’ நிச்சயத்தை உணர்த்தும் அநேக பாமாலைகள்/பாடல்கள், தமிழ் கிறிஸ்தவர்களால் தொடர்ந்து மறுதலிக்கப்படுவது / புறக்கணிக்கப்படுவது, மோட்சத்தைக் குறித்த அப்பாடல்கள் ‘மரணப் பாடல்கள்’ என்று வகைப்படுத்தப்படுவது எத்தனை வேதனைக்குரிய காரியம்?

‘Some Glad Morning’ என்ற Jim Reeves பாடிய Cassette / CD ஒலித்திராத நம் கிறிஸ்தவ இல்லங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். “Some glad morning when this life is o’er, I’ll fly away’ என்று எவ்வளவு மகிழ்வுடன் அவர் பாடுகிறார்! அவ்வளவு உற்சாகத்துடன் அவர் அப்படிப் பாட, பரம வாழ்வைக் குறித்த நிச்சயம் எத்தனை ஆழமாய் அவர் மனதில் பதிந்திருக்க வேண்டும்!

ஆண்டவரின் இரண்டாம் வருகையை சந்திக்க எந்நேரத்திலும், எந்நிலையிலும் ஆயத்தமாய் இருக்கும் நிலையை நம்மால் அடைய முடிந்தால்,  ‘மோட்சத்தை / நித்திய வாழ்வைக் குறித்த பாடல்களைப் பாட பயமோ தயக்கமோ எப்படி ஏற்படும்?

இப்படி புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு அழகான பாடலே ‘பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்’. அப்பாடலினால் தொடப்பட்ட ஒரு வாலிபனைக் குறித்து சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘131 பாடல் பிறந்த கதை’ புத்தகத்திலிருந்து அது அப்படியே கீழே.

”நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பாடலாக இதைப் பாடி வந்தாள். வேதனைகளும் பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும் இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது.  அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிகொண்டு வீடு திரும்பும்போது, வீட்டிலிருந்து அவன் தாய் பாடும் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும்.

நாளடைவில் அவன் தாய் வியாதிப்பட்டு பெலவீனமடைந்தபோதும் இப்பாடலை மெல்லிய குரலில் அவள் பாட, அவன் கேட்பதுண்டு.  சில நாட்களுக்குப் பின் அவன் தாய் மரித்தாள். தாயின் பாடல் ஒலியும் மறைந்துபோனது.  அன்பற்று கடுமையாய் நடத்திய தன் தகப்பனின் செயலைப் பொறுக்க முடியாமல், அவன் தன் உடைமைகளையும் தன் தாயின் பொக்கிஷமான வேத புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு பட்டணத்திற்கு ஓடிப்போனான்.  அங்கு தீய நண்பர்களோடு பழகி, தன் வாழ்க்கையையும் உடலையும் கெடுத்து வியாதிப்பட்டான்.

ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த அவனைச் சந்திக்க, மிஷினரி ஒருவர் வந்தார். ஆண்டவரின் அன்பைப்பற்றி அவர் பலமுறை எடுத்துக்கூறியும், அவன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். இம்முயற்சியில் தோல்வியுற்று மனமுடைந்த மிஷினரி, மரிக்கும் அந்த வாலிபனை விட்டு சற்றே விலகி, ஜன்னலருகே சென்று, இப்பாடலை சோர்வுடன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். “இது என் தாய் விரும்பிப் பாடும் பாட்டல்லவா?” என்று எண்ணிய அவன் மனக்கண்கள் முன், தாயின் அன்பும், அவளது ஜெபங்களும், பக்தி நிறைந்த வாழ்க்கையும் தோன்றின.  ’என் தந்தையின் கொடூர நடத்தையால் நான் வீட்டைவிட்டு வெளியேறினபோதெல்லாம் என்னை அன்போடு தடுத்தது, என் தாயின் இந்தப் பாடல்தானே? எத்தனை ஆண்டுகள் இதை மறந்துபோனேன்?” என்று கதறினான். 

அந்நிலையில் தாயின் அன்புக்கும் மேலான இயேசுவின் அன்பை மிஷினரி மீண்டும் அவனுக்கு எடுத்துரைத்தார்.  அவன் அந்நேரமே இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான். அமைதியாக விளங்கிய அவன் முகத்தை நோக்கியவண்ணம் மிஷினரி கூறினார்.. “அந்தத் தாயின் பாடல்! தூர இடங்களில் அலைந்து திரிந்த அவளது மகனைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, ஆண்டவர் இப்பாடலையல்லவா உபயோகித்தார்.”

இந்த அருமையான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.  “F.B.P” என்ற கையெழுத்தை மட்டும் விட்டுச்சென்றுள்ள இப்பாடலை எழுதியவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியாராக இருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.

பரலோகத்தைப் பற்றி, நானூறு வார்த்தைகளடங்கிய கட்டுரையாக இது முதலில் உருவெடுத்தது.  வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு, ஆசிரியரின் உணர்வு மிக்க படைப்பாக இப்பாடல் உருவானது. முதலில் அநேக எழுத்துப் பிழைகளுடன் 26 சரணங்களைக் கொண்டிருந்த இப்பாடலில் 7 சரணங்களே இப்போது உபயோகத்திலுள்ளன.  இப்பாடலின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றவர் பலர்.


இந்நாட்களில் மரித்தோர் வீடுகளிலும் மற்றும் அடக்க ஆராதனைகளிலும் மட்டுமே இப்பாடல் பாடப்படுகிறது. தன் மரணத்தையோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையையோ சந்திக்க ஆயத்தமில்லாத, பல கிறிஸ்தவ மக்களுக்கு மரண பயத்தையும், திகிலையும் ஊட்டும் சாவுப்பாடலாக இது மாறியிருப்பது வேதனைக்குரிய காரியம்.  ஆனால் பரலோகத்தை அழகாகச் சித்தரிக்கும் இப்பாடல் இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களுக்கு, நித்திய வாழ்வின் நம்பிக்கையூட்டுவதாக விளங்குகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.    பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.    எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.    நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.    எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

Post Comment

No comments:

Post a Comment