Wednesday, February 4, 2015

பாமாலை 406 - மின்னும் வெள்ளங்கி பூண்டு

பாமாலை 406 – மின்னும் வெள்ளங்கி பூண்டு
(Ten thousand times ten thousand)

’அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது’ வெளி 5 : 11

புதிய எருசலேமில் ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து, ஆயிரக்கணக்கான தெய்வதூதரும், பரிசுத்தவான்களும் ஓயாமல் பாடிக்கொண்டிருப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கிறது (வெளி 5).  இக்காட்சியை மனக்கண்களினால் கண்ட மேல்நாட்டு சங்கீத நிபுணர்கள் அதைக்குறித்து மிகச்சிறந்த பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  உலகப்புகழ்பெற்ற, ‘Hallelujah Chorus’ என்னும் பாடலை ஜியார்ஜ் ப்ரெட்ரிக் ஹான்டல் என்னும் சங்கீதநிபுணர் எழுதும்போது ‘மோட்சமண்டலம்’ என் கண்முன்னால் திறந்திருப்பதையும், சகல மகிமையுடன் மகத்துவமுள்ள தேவன் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் காண்பதாக எனக்குத் தோன்றியது’ எனக்கூறியுள்ளார்.  ஹான்டல் எழுதிய இப்பாடல், சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக கிறிஸ்து வீற்றிருக்கும்போது தெய்வதூதர் சூழ நின்று பாடிய பாடலாக எழுதப்பட்டது.

Rev. Henry Alford
ஆங்கிலச்சபை ஆலயங்களில், ஆராதனையின் ஆரம்பத்தில் பாடகர் வெண்ணுடை தரித்து, வாசலிலிருந்து பாடிக்கொண்டு பவனியாக பீடத்தண்டையிலிருக்கும் பாடகர் இருப்பிடத்துக்கு செல்லுவது வழக்கம்.  ஆங்கிலத்திருச்சபையின் தலைமையிடமாகக் கருதப்படுவது, இங்கிலாந்தில் உள்ள கன்டர்பரி நகரம் (City of Canterbury).  இங்குள்ள பேராலயம் (Cathedral) மிகவும் அழகு வாய்ந்தது.  இவ்வாலயத்தில் 1867ம் ஆண்டு, ஹென்றி ஆல்ஃபொர்ட் (Rev. Henry Alford) என்பவர் பிரதம குருவாகப் பணியாற்றினார்.   ஓர் ஓய்வுநாள் காலை ஆராதனை சமயத்தில், சபையார் எழுந்து நிற்க, பாடகர்களும், குருவானவர்களும் பாடிக்கொண்டு பவனியாக செல்லும்போது, பவனியின் பின்னணியில் சென்ற ஆல்ஃப்ரெட் போதகர், அவ்வழகிய பேராலயத்தினுள் வெண்ணுடை தரித்துப் பாடகர் பவனி செல்வதைக் கண்டு பரவசமடைந்து, மோட்ச மண்டலத்தில் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்தைச் சூழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் தெய்வதூதர் பாடகர் குழுவை மனக்கண்களில் கண்டார்.  ஆராதனைக்குப்பின், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறியபடி, ஆயிரக்கணக்கான தெய்வதூதர் சிங்காசனத்தை சூழ்ந்து பாடிக்கொண்டிருப்பதை ஆதாரமாகக்கொண்டு ஒரு பவனி கீதம் (Processional Hymn) எழுத எண்ணங்கொண்டார். 
இதன் விளைவாக கிறிஸ்தவ உலகம் பெற்றது ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார்’ என்னும் மோட்ச மகிமையைக் குறித்த பாடல்.  இதை அவர் ஒரு பவனிகீதமாகவே எழுதினார்.  இப்பாடலுக்கு, ஜான் பாக்கஸ் டைக்ஸ் (John Bacchus Dykes) என்னும் சங்கீத நிபுணர் ஓர் அழகிய ராகத்தை அமைத்து அதற்கு, ‘Alford’ எனப்பெயரிட்டார்.  இதுவே நாம் இப்பாடலுக்கு உபயோகிக்கும் ராகம்.  இப்பாடல் முதன்முதலாகக் கன்டர்பரி பேராலயத்தில்தான் பாடப்பட்டது.

இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபொர்ட் என்பவர் 1810ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் பிறந்தார்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரித்துவக்கல்லூரியில் திறமையுடன் பயின்று, உயர்பட்டங்கள் பெற்றார்.  ஆங்கிலத்திருச்சபையில் பல இடங்களில் திருப்பணியாற்றியபின், 1857 முதல் 1871 வரை கன்டர்பரி பேராலயத்தின் பிரதமகுரு (Dean) ஆகப் பணியாற்றினார்.  இச்சமயத்தில்தான் அவர், ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு’ முதலிய பல பாடல்கள் எழுதினார்.  மேலும், ஐம்பது கிறிஸ்தவ நூல்களும், கிரேக்கமொழியில் புதிய ஏற்பாட்டைக்குறித்த நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.  சிறந்த கவித்திறனும், சங்கீதத்திறனும் ஓவியத்திறனும் பெற்றவர்.  திருமறையின் ஆழ்ந்த கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான பல விளக்க நூல்களும் எழுதினார்.  அவரது கடுமையான உழைப்பின் விளைவாக, 1870ல் அவர் உடல்நிலை மிகக்குன்றி, 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி காலமானார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ‘நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை’ (பாமாலை 180)


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.

2.    முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும்,
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம் பேரின்பமே.

3.    அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும் சேர்ந்திடும்

4.    சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர்
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.
Ten Thousand Times Ten Thousand

Post Comment

No comments:

Post a Comment