Wednesday, March 4, 2015

பாமாலை 336 - உம்மண்டை கர்த்தரே

பாமாலை 336 – உம்மண்டை கர்த்தரே (Nearer my God to Thee)

‘இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது.  அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்”. ஆதி. 28:12

தன் சகோதரனாகிய ஏசாவுக்குப் பயந்து யாக்கோபு தன் பெற்றோரையும் சுய தேசத்தையும் விட்டுத் தனியானாகத் தப்பி ஓடும்போது, இராக்காலத்தில் பெத்தேலில் ஒரு கல்லைத் தலையணையாகக் கொண்டு தூங்குகையில் கண்ட தரிசனம் நமக்குத் தெரியும்.  இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டப் பாடல் இது.

இப்பாடலை எழுதியவர், சாரா பிளவர் ஆடம்ஸ் அம்மையார்.  ஒருநாள் இரவு அம்மையார் பெத்தேலில் யாக்கோபு கண்ட கனவைக் கண்டார். எந்தக் கஷ்டமான நிலையிலும் கடவுள் தமது அடியார்களுக்கு அருள்செய்வார் என்னும் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று.  விழித்தெழும்பியதும், இக்கனவை ஒரு பாடலாக எழுதவேண்டும் என்னும் ஆவல் கொண்டபோது, இப்பாடலின் சில வரிகள் மனதில் உண்டாயின.  சில தினங்களுக்குப் பின், திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளாத யூனிட்டேரியன் சபையைச் சேர்ந்த உல்லியம் பாக்ஸ் போதகர், தமது சபையில் யாக்கோபைக் குறித்துப் பிரசங்கம் செய்யப்போவதாக அம்மையாரிடம் கூறினார்.  அவ்வாராதனையில் பாடுவதற்கு யாக்கோபின் தரிசனத்தைப் பற்றிய பாடல்கள் ஏதாவது உண்டா என அம்மையார் போதகரிடம் கேட்டார்.  பாடல் ஒன்றும் இல்லையெனப் போதகர் கூறவே, ஆடம்ஸ் அம்மையார் உடனே உட்கார்ந்து, ஏற்கெனவே தன் மனதில் உருவான ‘உம்மண்டை கர்த்தரே’ என்னும் பாடலை எழுதி, தன் சகோதரி எலைசாவின் உதவியால் ஓர் இராகத்தையும் அமைத்துக்கொடுத்தார்.  இது இப்போது நாம் பாடும் இராகமல்ல.  அவ்வாராதனையில்தான் இப்பாடல் முதல் முறையாகப் பாடப்பட்டது.  பின்னர், இப்பாடலின் சிறப்பை உணர்ந்த சங்கீத நிபுணரான லவ்வல் மேசன் பண்டிதர், இப்போது நாம் பாடிவரும் ‘Bethany” என்னும் அழகிய இராகத்தை அமைத்தார்.  இவ்வளவு துரிதமாக எழுதப்பட்ட இப்பாடலானது, உலக முழுவதிலும் பாராட்டப்படும் என்று அம்மையார் நினைக்கவேயில்லை.

உலகத்திலேயே மிகப்பெரிய கப்பல் என அக்காலத்தில் கருதப்பட்ட, ‘டைட்டானிக்’ என்னும் பிரிட்டிஷ் கப்பல், 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கப்பலில் 2000க்கும் அதிகமானபேர் இருந்தனர். ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில் மிதந்துவந்த ஒரு பனிமலையில் கப்பல் மோதி, உடைந்து அமிழத் தொடங்கியது. பிரயாணிகளில் மூன்றிலொரு பகுதிக்குத்தான் உயிர்மீட்சிப் படகுகள் (Life boats) இருந்தன.  ஆயினும் பிரயாணிகள் கலக்கமடையவில்லை.  கப்பலின் வாத்தியக்குழுவினர் (Band), ’உம்மண்டை கர்த்தரே’ என்னும் பாடலின் இராகத்தை தொனிக்க, பிரயாணிகள் யாவரும் இப்பாடலை உரத்த சத்தமாய்ப் பாடியவண்ணம் கப்பல் அமிழ்ந்தது. பிரயாணிகளில் சுமார் எழுநூறு பேர் மட்டும் உயிர் தப்பினர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்த உல்லியம் மாக்கின்லே என்பவர் இப்பாடலைப் பெரிதும் பாராட்டி, தாம் மரித்தபின் தமது அடக்க ஆராதனையில் இப்பாடல் பாடப்படவேண்டுமென விரும்பினார்.

இப்பாடலை எழுதிய சாரா பிளவர் அம்மையார் இங்கிலாந்தில் ஹார்லோ நகரில் 1805ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிறந்தார். இளவயதிலேயே தாயார் காசநோயினால் இறந்துபோகவே, சாராவும், சகோதரியாகிய எலைசாவும் தந்தையால் வளர்க்கப்பட்டனர்.  பின் அம்மையார் லண்டன் மாநகர் சென்று உல்லியம் ஆடம்ஸ் என்னும் சிற்பக்கலை நிபுணரை மணந்து, குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். லண்டன் மாநகரில் ஒரு திறமையுள்ள நடிகையாகவும் இருந்தார். ஆனால் சுகவீனத்தினிமித்தம் நாடக மேடையை விட்டு, இலக்கியம் எழுதுவதை மேற்கொண்டார்.  பின்னால், தந்தையாரும் இறந்துபோகவே, சகோதரியாகிய எலைசாவும், சாராவுடைய வீட்டிலேயே வசித்து வந்தார். 1847ம் ஆண்டு, சாரா ஆடம்ஸ் அம்மையார் ஆகஸ்டு மாதம், 11ம்தேதி தமது 43வது வயதில் காலமானார்.


சாரா ஆடம்ஸ் அம்மையார் நூற்றுக்கதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.  இப்பாடல்களுக்குச் சகோதரி எலைசா இராகங்கள் அமைத்து வந்தார். ஆனால், ‘உம்மண்டை கர்த்தரே’ என்னும் ஒரே பாடல்தான் கிறிஸ்தவ உலகில் வெகுவாகப் பாடப்பட்டு வருகிறது. அவரது இதர பாடல்கள் பொதுவாக அமெரிக்காவில், குறிப்பாக யூனிட்டேரின் சபைகளில் பாடப்படுகின்றன.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து
நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வதே.

2.    தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே,
இருப்பேனே.

3.    நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரவே.

4.    விழித்து உம்மையே
நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வேனே.

Nearer my God to Thee

Post Comment

No comments:

Post a Comment