Tuesday, July 7, 2015

ஜோதி தோன்றும் (In the sweet by and by)

ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
(In the sweet by and by)

’நாளடைவில் இன்பமாக முடியும்”

‘ஒரு நல்ல பாடலுக்கு இது ஒரு அருமையான தலைப்பாக  விளங்குமல்லவா?”

இரு நண்பர்களின் இந்த வார்த்தைப் பரிமாற்றம் 30 நிமிடங்களுக்குள் ஓர் அருமையான பாடலின் வார்த்தைகளையும் ராகத்தையும் உருவாக்கிற்று என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதல்லவா?

நட்புறவின் சிறந்த அடையாளமாக விளங்கும் இப்பாடல் எழுதப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை, பல தேவ மனிதர்களுக்கு ஆறுதலளிக்கும் அடக்க ஆராதனைப் பாடலாகவும், உள்ளத்தைத் தொடும் எளிய நற்செய்திப் பாடலாகவும் விரும்பிப் பாடப்பட்டுவருகிறது.

Sanford Fillmore Bennett
அமெரிக்க உள்நாட்டுப் போரின் முடிவில் இப்பாடலை இயற்றிய ஸான்ஃபோர்ட் பென்னட் (Sanford Fillmore Bennett) விஸ்கான்சினின் எல்க்கார்னுக்குத் திரும்பி வந்து (Elkhorn, Wisconsin), ஒரு மருந்துக்கடையை ஆரம்பித்து நடத்தினார்.  அத்துடன் தனது மருத்துவக் கல்வியையும் தொடர்ந்தார்.

Joseph P Webster
ஜோஸப் வெப்ஸ்ட்டர் (Joseph P Webster) ஓர் இசை ஆசிரியர்.  அவர் அப்பட்டணத்தில் சிறந்த இசை மேதையாக அனைவராலும் மதிக்கப்பட்டார்.  இவரும் பென்னட்டும் ஆருயிர் நண்பர்கள்.  இவர்கள் இருவரும் பென்னட்டின் மருந்துக்கடையில் அடிக்கடி சந்தித்து, நட்புடன் அளவளாவுவதுண்டு.

பனிக்காலத்தில் ஒருநாள் மதிய வேளை தனது வயலினைக் கையிலேந்தியவாறு வெப்ஸ்டர் பென்னட்டின் கடைக்குள் நுழைந்தார்.  பின்னர் நடந்த சம்பவத்தை பென்னட் இவ்வாறு விவரிக்கிறார்.

‘எல்லா இசைக் கலைஞர்களையும் போலவே வெப்ஸ்ட்டரும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.  அடிக்கடி மனச்சோர்வு கொள்வார்.  இவ்வேளைகளில் வாழ்வின் நிகழ்வுகளின் இருண்ட பகுதிகளைக் காண்பார்.  அவருடைய வினோத சுபாவங்களை நான் நன்கு அறிவேன்.  எனவே அவருடைய சோர்வு நிலையை எளிதில் புரிந்துகொண்டு ஒரு புதிய பாடலைக் கொடுத்து, இசையமைக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவேன்.

அன்று என் கடைக்கு வந்த வெப்ஸ்ட்டர் கனல் நெருப்பண்டை சென்று தனது பின்புறத்தை எனக்குக் காட்டியவாறு நின்றார்.  மேஜையில் எழுதிக்கொண்டிருந்த நான் அவரை நோக்கி ‘ வெப்ஸ்ட்டர் என்ன விஷயம்?” என வினாவினேன்.  ‘ஒன்றுமில்லை.  நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்” என்று பதிலளித்தார்.

சூரிய ஒளி பளிச்சிடுவது போல, உடனே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘நாளடைவில் இன்பமாக முடியும்’ ஒரு நல்ல பாடலுக்கு இது ஒரு அருமையான தலைப்பு அல்லவா?” என்றேன்.  ‘ஒருவேளை இருக்கலாம்’ என உணர்ச்சியற்ற குரலில் வெப்ஸ்ட்டர் பதிலளித்தார்.

என்னுடைய மேஜைக்குத் திரும்பிச் சென்று, என்னால் முடிந்தவரை வேகமாகப் பேனாவால் எழுதினேன். முடிந்ததை வெப்ஸ்ட்டரிடம் கொடுத்தேன். அவரும் பார்த்தவுடன், கண்களில் நம்பிக்கையின் ஒளி வீச அப்பாடலுக்கு இசை எழுத ஆரம்பித்தார்.  பின்னர் தொடர்ந்து அப்பாடலின் பல்லவியின் ராகத்தையும் எழுதி முடித்தார்.  இப்பாடலை நான் எழுத ஆரம்பித்து 30 நிமிடங்கள் கூடத் தாண்டவில்லை.  அதற்குள் நண்பர்களாகிய நாங்கள் இருவரும் சேர்ந்து அதை உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்தோம்.

ஸான்ஃபோர்ட் பில்மோர் பென்னட் நியூயார்க்கிலுள்ள ஈடெனில் 21.6.1936 அன்று பிறந்தார்.  சிறு வயதிலிருந்தே இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.  14 வயதில் அவர் இயற்றிய ‘ஆரம்பக் கவிதைகள்’ வாக்கிகன் கெஸட்டில் வெளிவந்தன.  ஒரு மெதடிஸ்ட்டு நற்செய்தி கூட்டத்தில் ரட்சிப்பின் அனுபவம் பெற்றார்.  பென்னட் 12.6.1898 அன்று மரித்தார்.

ஜோசப் பில்பிரிக் வெப்ஸ்டர் அவரது காலத்தில் ஒரு தாலந்து படைத்த இசை வல்லுனரெனப் புகழ் பெற்றிருந்தார்.  மாசாசூசெட்டின் பாஸ்டனில் உள்ள லோவல் மேசனில் இசைக்கல்வி பெற்று, நியூயார்க்கிலும், கனெக்டிகட்டிலும் பல்லாண்டுகள் இசை ஆசிரியராகவும், இசைக்கச்சேரிகள் நடத்தியும் பணியாற்றினார்.  புல்லாங்குழல் வயலின் பியானோ ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.  அடிமைத்தனத்திற்கு எதிராக வைராக்கியம் கொண்டிருந்தார்.  எனவே, போர் மூளுவதற்கு முன்பு விஸ்கான்சினின் எல்க்கார்னுக்கு மாறிச் சென்றார்.  ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனது 56வது வயதில் 18.1.1875 அன்று நித்திரையடைந்தார்.

பாடல் பிறந்த கதை - தகவல்கள் நன்றி: ”131 பாடல் பிறந்த கதை”, அமைதிநேர ஊழிய வெளியீடு.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2.    அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம்

3.    நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம்.

4.    அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம்.

5.    சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம்.

6.    அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்.

7.    தூதர் சூழ்ந்து நின்று பாடுவார்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும்

8.    என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்

9.    ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்.


IN THE SWEET BY AND BY

Post Comment

No comments:

Post a Comment