பாமாலை 349 – நீர் தந்தீர்
எனக்காய் உம் உயிர் ரத்தமும்
(Thy life was
given for me)
‘கர்த்தர் எனக்குச் செய்த
எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?’
1858ம்
ஆண்டு, ஜனவரி மாதம் 10ம் தேதி பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் (Frances Ridley Havergal),
ஜெர்மனி நாட்டில் டஸ்ஸெல்டார்ப் (Düsseldorf,
Germany) நகரில் ஒரு ஜெர்மன்
போதகருடன் தங்க நேரிட்டது. ஒருநாள் வெளியிலிருந்து மிகக் களைப்புடன் போதகரின் அறைக்குள்
அம்மையார் நுழைந்து, அங்கிருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். அவருக்கு எதிராக சுவரில்
ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. இது புகழ்பெற்ற ஓவியச் சிற்பியான ஸ்டென்பர்க் என்பவரால்
தீட்டப்பட்டது (Sternberg’s
painting Ecce Homo).
படத்தில், சிலுவையில் தொங்கும் ஆண்டவரும், அதின் கீழ், ‘உனக்காக இதைச் செய்தேன். நீ
எனக்காகச் செய்தது என்ன?’ (“This
have I done for thee; what has thou done for Me?”) என்னும் எழுத்துகளும் காணப்பட்டன. ஹாவர்கல்
அம்மையார் படத்தை சிறிது நேரம் உற்று நோக்கும்போது இரட்சகரின் கண்பார்வை அவர்மேல் தங்குவதுபோலக்
காணப்பட்டது. உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘I gave my life for thee’ என் ஆரம்பிக்கும் ஐந்து கவிகளடங்கிய ஒரு
பாடலை எழுதினார்கள். பின்னர் அதைப் படித்துப்
பார்க்கும்போது, பாடல் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. உடனே அதைக் கசக்கி, குளிர் காய்வதற்காக எரிந்துகொண்டிருந்த
அனல் அடுப்பினுள் எறிந்தார். ஆனால் அது அடுப்பினுள் விழாமல் வெளியில் விழுந்தது. இது
ஆண்டவருடைய சித்தம் என எண்ணி, அதை எடுத்துப் பத்திரமாக வைத்தார். சிறிது நேரத்துக்குப்பின் அவ்வூரிலிருந்த ஒரு தர்மசாலையில்
வியாதியாய்ப் படுத்திருந்த ஒரு வயோதிப அம்மாளைப் பார்க்கச் சென்றார். இப்பாடலை அவருக்குப் படித்துக்காட்டவே, அவர் அதை
வெகுவாகப் பாராட்டினார்.
சில தினங்களுக்குப்பின், ஹாவர்கல் அம்மையார் தன்
சொந்த நாட்டுக்குத் திரும்பியபின், இப்பாடலைத் தன் தந்தையான கனோன் ஹாவர்கலிடம் காட்டவே,
அவர் அதை மிகவும் புகழ்ந்து, அதற்கேற்ற ‘Baca’ (S.S.621) என்னும் ஓர் ராகத்தையும் அமைத்து, ‘Good Words’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில் வெளியிட்டார். இப்போது இது பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆவிக்குரிய
எழுப்புதல் கூட்டங்களில் பாடப்பட்டு வருகிறது.
ஹாவர்கல் அம்மையார் இப்பாடலை ஆண்டவர் நம்மிடத்தில்
சொல்லுவதாக, “I gave
my life for thee” என ஆரம்பித்து
எழுதினார். ஆனால் பல புத்தகங்களில், நாம் கிறிஸ்துவிடம்
சொல்லுவதாக, ‘Thy
life was given for me’ என
ஆரம்பித்து எழுதப்பட்டிருக்கிறது. அம்மையார்
இதை ஆட்சேபிக்காவிடினும், ஆண்டவர் நம்மிடம் பேசுவதுபோல, தாம் முதலில் எழுதிய வார்த்தைகளையே
விரும்பினார்.
பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு
டிசம்பர் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் ஊரில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில்
பிறந்தார். அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச்
சேர்ந்த ஒரு குருவானவர். நான்கு வயதாயிருக்கும்போதே,
அம்மையார் வேத புத்தகத்தை வாசிக்கப் பழகியிருந்தார். பின்னர், புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின்
சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.
இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் கல்வி பயின்று ஆங்கிலம் தவிர ஐந்து பிறமொழிகள்
கற்றார். சங்கீதத்தில் அதிகத் திறமை பெற்று,
இனிமையாகப் பாடவும், ராகங்கள் எழுதவும், சங்கீதக் கருவிகள் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மேலும், ஓய்வுநாட்பள்ளியில் போதிப்பதிலும், வாசிக்கத்
தெரியாத மக்களுக்கு வேதத்தை வாசித்துக் கொடுப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும்
அதிகமாக ஈடுபட்டிருந்தார். ஹாவர்கல் அம்மையார்
தன் குறுகிய வாழ்க்கையில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில்
சில:
·
’நாதா
உம் வார்த்தை கூறவே’ – பாமாலை 201.
·
‘எந்தன்
ஜீவன் இயேசுவே’ – பாமாலை 302
·
‘அருள்நாதா
நம்பி வந்தேன்’ – பாமாலை 329
·
தெய்வ
சமாதான இன்ப நதியே’ – பாமாலை 357
அவர்,
1879ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி வேல்ஸ் நாட்டில் சுவான்ஸீ (Swansea, Wales) என்னுமிடத்தில்
தமது 42ம் வயதில் காலமானார்.
இப்பாடலின் பிறிதோர் ராகத்தை இங்கே காணலாம். இப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகத்தை (Philip P Bliss) பெரும்பாலும் ‘இரட்சண்ய சேனைத் திருச்சபையினர்’ தங்கள் ஆராதனைகளில் பாடி ஆண்டவரைத் துதிக்கின்றனர்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப்பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்;
நான் யாது தந்திட்டேன்.
2. பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்;
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்?
3. பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்;
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்;
நான் யாதெது விட்டேன்?
4. சொல்லொண்ணா வேதனை
அகோர கஸ்தியும்
சகித்தீர் எனக்காய்
நரகம் தப்பவும்
சகித்தீர் எனக்காய்;
நான் யாது சகித்தேன்?
5. கொணர்ந்தீர் எனக்காய்
விண் வீட்டினின்று,
மீட்பு சமூலமாய்
மன்னிப்பு மா அன்பு
கொணர்ந்தீர் எனக்காய்;
நான் யாது கொணர்ந்தேன்.
6. என் ஜீவன் தருவேன்
பற்றாசை ஒழித்து;
உமக்காய் ஜீவிப்பேன்
யாவுமே சகித்து
நீர் தந்தீர் உம்மையே
நான் தந்தேன் என்னையே.
I gave my life for my thee
No comments:
Post a Comment