Sunday, September 26, 2021

பாமாலை 388 - எத்தனை நாவால் பாடுவேன் (Tune | Azmon)

பாமாலை 388 – எத்தனை நாவால் பாடுவேன்
(O for a thousand tongues to sing)

Charles Wesley
’என் நாவு உமது நீதியையும், நாள் முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்’ சங் 35:28

நமது எல்லா அவயவங்களையும் கடவுள் தமது மகிமைக்காக உபயோகிப்பதற்காகவே நமக்கு அருளியிருக்கிறார். நமது குழந்தைகள், ‘ரெண்டு சிறு கண்கள்’ என ஆரம்பிக்கும் பாடல் ஒன்றைப் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். அதில், ‘ஓர் சின்ன நாவு அவர் சத்யம் பேச’ என்னும் ஒரு வரி உண்டு. நமது நாவுகள் கடவுளைத் துதிப்பதற்காகவே அருளப்பட்டிருக்கின்றன. இப்பாடலை எழுதியவர் முதல் கவியில் (ஆங்கிலத்தில்) ஆயிரம் நாவுகள் இருக்க விரும்புகிறார். ஆயினும், நமக்கிருக்கும் ஒரே நாவை நாம் சரியான முறையில் உபயோகிக்கிறோமா? யாக்கோபு நிருபத்தில் மூன்றாம் அதிகாரத்தில் நாவு எவ்வளவு பயங்கரமான செய்கைகளைச் செய்யக்கூடும் என விவரிக்கப்பட்டிருக்கிறது. அது அடக்கமுடியாத ஒரு மிருகத்துக்குச் சமமானது. ஒரே நாவினால் கடவுளைத் துதித்து, அவர் சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதனை சபிக்கிறோம். ‘துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது’ (யாக் 3:10). ஒருவர் ஆயிரம் நாவினால் கடவுளைத் துதிப்பதைவிட ஆயிரம் பேர் தங்கள் ஒவ்வொரு நாவினால் அவருக்கு சேவை செய்வதையே கடவுள் விரும்புகிறார். நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் முன்னால் நிற்கும்போது, அவர் அளித்த நாவை எவ்விதம் பயன்படுத்தினோம் என்னும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர் இரட்சிக்கப்பட்ட நாளின் முதல் ஆண்டு நிறைவு 1738ம் ஆண்டு மே மாதம், 21ம் தேதியாகும். இத்தினத்தின் ஞாபகார்த்தமாக ஒரு துதிப்பாடல் எழுத ஆவல்கொண்டு, பதினெட்டு கவிகளுள்ள ஒரு பாடல் எழுத ஆரம்பித்தார். ஆறு கவிகள் எழுதியவுடன், சில தினங்களுக்கு முன் தனது நண்பரான பீட்டர் போலர் என்பவருடன் செய்த ஒரு சம்பாஷணை அவர் ஞாபகத்துக்கு வந்தது. இருவரும் ’கடவுளைத் துதித்தல்’ என்னும் பொருளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஆயிரம் நாவுகள் எனக்கிருந்தாலும், அவை அத்தனையும் கொண்டு கடவுளையே துதிப்பேன்’ என்று பீட்டர் போலர் சொல்லியிருந்தார். இதை ஆதாரமாகக் கொண்டு, ‘O for a thousand tongues to sing’ என ஏழாவது கவியை ஆரம்பித்து, மீதிக் கவிகளையும் எழுதிப் பாடலை முடித்தார். இப்பாடலைப் பார்த்ததும், சார்ல்ஸ் வெஸ்லியின் மூத்த சகோதரனான ஜான் வெஸ்லி, முதல் ஆறு கவிகளையும் நீக்கிவிட்டு, ஏழாவது கவிமுதல், ஐந்து கவிகளை மட்டும் ஒரு பாடலாக வைத்துக்கொண்டார். மெதடிஸ்டு சபையின் பாட்டுப்புத்தகத்தில் இப்பாடலே முதல் பாடலாக வைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப்பின், இப்பாடலில் சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தனர். இறுதியில், வெஸ்லி முதலில் எழுதிய வார்த்தைகளே வைக்கப்பட்டன.

இப்பாடலை எழுதிய சார்ல்ஸ் வெஸ்லி என்பவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்தவரான ஜான் வெஸ்லியின் இளைய சகோதரன். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகரின் பதினெட்டாவது குழந்தையாக, 1707ம் ஆண்டு டிசம்பர் மாதம், 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் குருடனையில் பிறந்தார். இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்வர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1729ல் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும்போது, சில மாணவர்களுடன் சேர்ந்து, ‘ஆக்ஸ்வர்ட் மெதடிஸ்டுகள்’ என்னும் ஒரு கிறிஸ்தவக் குழுவை ஆரம்பித்தார். இக்குழுவே பிற்காலத்தில் ‘மெதடிஸ்டு சபையாகத் தோன்றியது. அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உழைத்த ஆக்ஸ்தார்ப் என்பவருக்குச் செயலாளராக வெஸ்லி இரு ஆண்டுகள் பணியாற்றியபின் இங்கிலாந்துக்குத் திரும்பி, நற்செய்திப் பணியை மேற்கொண்டார். ஆயினும், பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு, 6500’க்கு அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

அவர் 1788ம் ஆண்டு, மார்ச் மாதம், 29’ம் தேதி தமது 81’வது வயதில் லண்டன் மாநகரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

**************************
Sheet Music in G Major
**************************



1.         எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.
 
2.         பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.
 
3.         உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
 
4.         ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.
 
5.         என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.



Post Comment

No comments:

Post a Comment