Tuesday, August 2, 2022

பாமாலை 25 - கர்த்தாவே இப்போ உம்மை (National Hymn)

பாமாலை 25 - கர்த்தாவே இப்போ உம்மை 
(Saviour again to Thy dear Name)
Tune : National Hymn

’சமாதானத்தோடே போ’. லூக்கா 8 : 48

உலகரட்சகராகிய இயேசு பெருமான் பெத்லகேமில் பிறந்தபோது, தெய்வதூதரின் சேனைத்திரள் மேய்ப்பர்முன் தோன்றி, ‘பூமியிலே சமாதானம்’ எனப்பாடினர்.  உலகம் உண்டானதுமுதல், மனித இனம் சமாதானத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.  நமதாண்டவரும் மலைப்பிரசங்கத்தில், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ எனப்போதித்தார்.  தன் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகமடைந்த ஸ்திரீயைப் பார்த்து, ‘சமாதானத்தோடே போ’ என்றார்.  அவர் உயிர்த்தெழுந்தபின் சீஷருக்குக் காணப்பட்டு, ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.  ஒவ்வொரு ஆலய ஆராதனையின் முடிவிலும் குருவானவர், ‘சமாதானத்தோடே போகக்கடவோம்’ என்னும் ஆசீர்வாதத்துடன் சபையாரை அனுப்பி வைக்கிறார்.  நாம் எப்போதும் ஆண்டவரிடத்தில் சமாதானத்தைப்பெற ஆவலாயிருக்கிறோம்.

Rev. John Ellerton
Rev. John Ellerton

1866-ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில் ஜான் எல்லர்ட்டன் போதகர் (Rev. John Ellerton) திருப்பணியாற்றி வந்தார்.  அவர் இருந்த ஊரில் ஆண்டுதோறும் ஒரு பாடல் விழா (Hymn Festival) கொண்டாடப்பட்டு வந்தது.  அவ்வாண்டில் நடக்கவிருந்த விழாவுக்கு எல்லர்ட்டன் போதகர் தலைமை தாங்கினார்.  அவ்விழாவின் முடிவில் பாடப்படுவதற்காக ஒரு பாடல், தாமே எழுத போதகர் ஆவல்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானார்.  இதற்காக அவர் மேசையிலிருந்த பல கைப்பிரதிகளைப் புரட்டும்போது, அதற்கு முந்தின வாரம், ‘சமாதானத்தோடே போ’ (லூக் 8:48) என்னும் வசனத்தில் அவர் செய்த அருளுரைக் குறிப்புகள் கையில் கிடைத்தன.  இதைக்குறித்து அவர் ஆழ்ந்து சிந்திக்கவே, ‘கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்’ என்னும் பாடலவர் மனதில் உதித்தது.  உடனே அக்குறிப்பேட்டுக்குப் பின்புறம், அப்பாடலை எழுதி வைத்தார்.  மறுநாள், விழாவின் முடிவில், இப்பாடல் அதற்கேற்ற ஒரு ராகத்தில் முதல்முதலாகப் பாடப்பட்டு, வெகுவாகப் போற்றப்பட்டது.  இப்போது இப்பாடல் பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆராதனைகளில் ஒரு முடிவுப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. 

இப்பாடலை எழுதிய ஜான் எல்லர்ட்டன் என்பவர் 1826ம் ஆண்டு, ஜூன் மாதம், 15ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் நற்செய்திப் பணியில் ஆர்வமுடையவர்கள்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் சேர்ந்து (Trinity College, Cambridge), பி.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்றார்.  1850ல் ஆயர் பட்டம் பெற்று, க்ரூகிரீன் (Crewe Green), ஹின்ஸ்டாக் (Hinstock, Shropshire), ஈஸ்ட்போர்ன் (Eastbourne), ப்றைட்டன் (Brighton) முதலிய பல சபைகளில் திருப்பணியாற்றினார்.  ஊழியத்தில் பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையுள்ளவர், பொது ஜன சேவைக்காக அதிக நேரம் செலவிட்டார்.  அவர் அநேக சிறந்த பாடல்கள் எழுதினாலும், அவற்றிற்குப் பதிப்புரிமை பெற்றுக்கொள்ள மறுத்து, அவை கிறிஸ்து சபைக்கே சொந்தமெனக் கூறினார்.  அவர் கிறிஸ்தவப் பாடல்களை அதிகமாக நேசித்துப் பாடிக்கொண்டிருந்தார்.  அவர் இறப்பதற்க்கு முந்தின ஆண்டில் தூய அல்பான்ஸ் சபையினர் அவருக்குக் கனோன் (Canon) என்னும் உயர்நிலையை அளித்தனர்.  ஆனால் உடல்நிலையின் பொருட்டு, அவ்வுயர் நிலையை அவர் வகிக்க முடியவில்லை.  அவர் 1893ம் ஆண்டு தமது 67ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

‘நீர் தந்த நாளும் ஓய்ந்ததே’ – பாமாலை 38
‘துயருற்ற வேந்தரே’ – பாமாலை 118
‘வாழ்க பாக்கிய காலை’ – பாமாலை 131


SATB (With Trumpet Prelude)
SATB (Without Prelude)
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2.    உம் சமாதானம் தந்து அனுப்பும்,
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3.    உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோ ராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4.    உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Post Comment

No comments:

Post a Comment