பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர்
Dear Lord and Father of Mankind
Tune : Rest
‘அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று’. 1 இராஜாக்கள் 19 : 12
கிறிஸ்தவர்களாகிய நாம் நமது ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் பல வித்தியாசமான முறைகளை அனுசரித்து வருகிறோம். சில கிறிஸ்தவ வழிபாடுகளில் பாடப்படும் பாடல்களும், ஏறெடுக்கப்படும் ஜெபங்களும் மிகவும் அமைதியான முறையில் செய்யப்படுகின்றன. சிலரது வழிபாடுகளில் கொட்டு முழக்கங்களும், கைதட்டுகளும் ஒலிக்கின்றன. இன்னும் சில பகுதியினர் ஜெபம் செய்யும்போது இடையிடையே ‘ஆமென்’, ‘அல்லேலூயா’ என உரத்த சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர். வேறு சில பிரிவினர் தங்கள் ஆராதனைகளில், பரிசுத்த ஆவியைப் பெற்று வேறு மொழிகளில் பேசுவதாக நம்பி, பலவிதமான சத்தங்களை உண்டுபண்ணுகின்றனர். ஆனால் 1 இராஜாக்கள் 19:11,12 வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல, பர்வதங்களைப் பிளக்கிறதும், கன்மலைகளை உடைக்கிறதுமான பெருங்காற்றிலும், காற்றுக்குப்பின் உண்டான பூமியதிர்ச்சியிலும், அதற்குப்பின் உண்டான அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை. அக்கினிக்குப் பின் உண்டான அமர்ந்த மெல்லிய சத்தத்திலேயே கர்த்தர் காணப்பட்டார். ஆகவே நமது ஆராதனைகள் அமைதியானதாகவும், ஆரவாரங்களில்லாமலும் இருப்பதே சிறந்தது.
![]() |
John Greenleaf Whittier |
இப்பாடலை எழுதிய ஜான் கிரீன்லீப் விட்டியர் (John Greenleaf Whittier), 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஹேவர்ஹில் (Haverhill, Massachusetts) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை, ‘உவேக்கர்’ பிரிவைச் சேர்ந்த ஒரு விவசாயி. விட்டியர் இளவயதில் கடுமையான வேலை செய்யவேண்டியிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் குன்றியது. ஓய்வு நேரங்களில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொண்டு, பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார். பத்தொன்பதாவது வயதில் அவ்வூரிலுள்ள ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகள் கல்வி கற்றார். இங்கிருக்கையில் ஆங்கிலக்கவிஞரான, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ என்பவரின் செய்யுள்களால் கவரப்பட்டுத், தாமும் பல செய்யுள்கள் எழுதினார். மேலும், அடிமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து அதைக்குறித்துப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதினார். சில ஆண்டுகள் தமது சொந்த மாகாணத்தில் சட்டசபை அங்கத்தினராகவும் பணியாற்றினார்.
விட்டியர் சங்கீதத் திறமையில்லாதவராதலால், தமது செய்யுள்களை அவர் பாடல்களாகக் கருதவில்லை. ஆனால் 1893ல் சிக்காகோ நகரில் நடந்த மதசம்பந்தமான மாநாட்டில் (Parliament of Religions) எல்லா மதத்தினரும் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட பாட்டுப் புத்தகத்தில், விட்டியர் எழுதிய அநேக செய்யுள்கள் பாடல்களாகச் சேர்க்கப்பட்டன. இவற்றில், ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலும் ஒன்று.
விட்டியர் 1802ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹாம்ப்டன் பால்ஸ் என்னுமிடத்தில் தமது 85வது வயதில் மறுமைக்குட்பட்டார்.
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட
2. நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே.
3. மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.
4. உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.
5. அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.
No comments:
Post a Comment