Wednesday, May 15, 2013

பாமாலை 206 - கர்த்தர்தாம் எங்கள்

பாமாலை 206 – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
(A safe stronghold our God is still)

’கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர்’ 2 சாமு 22 : 2

Martin Luther
கிறிஸ்தவ உலகத்தில் மார்ட்டின் லூதர் (Martin Luther) என்னும் சீர்திருத்தவாதியைக் குறித்துக் கேள்விப்படாதவர் இல்லை.  பதினாறாம் நூற்றாண்டில் இவர், என்றும் அழியாத ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார்.  அக்காலத்தில் பாப்பரசர் தலைமையில் செயல்பட்டுவந்த ரோமச்சபையின் ஒழுங்கீனங்களையும், திருமறையின் போதனைக்கு மாறாக ஏற்பட்டிருந்த பழக்கவழக்கங்களையும் லூதர் பலமாகக் கண்டித்ததால், அவரைப் பிடித்துக்கொலை செய்ய ரோமச் சபைத் தலைவர்கள் திட்டமிட்டு, அவரைப் பல நீதிமன்றங்களுக்கு அழைத்து, அவரது கொள்கைகளை விட்டுவிடும்படி வற்புறுத்தினர்.  ஆனால் லூதர் மறுத்துவிட்டார்.  கடைசியில் ஸ்பயர்ஸ் என்னுமிடத்தில், லூதரின் கொள்கைகளை ஆதரித்த பல ஜெர்மனி நாட்டு சிற்றரசர்கள் கூடி ரோமச் சபையின் தவறான கொள்கைகளை எதிர்த்து ஒரு பிரகடனம் (Protest of Spires) வகுத்தனர்.  இதனால் ஜெர்மன் மக்களிடையே ஏற்பட்ட மதப்பிரிவுகளைச் சீர்படுத்த, ஆக்ஸ்பர்க் நகரத்தில், ஜெர்மன் சக்கரவர்த்தியான ஐந்தாம் சார்ல்ஸ் ஒரு நீதிமன்றத்தைக் கூட்டி, லூதரை ஆதரித்த ஜெர்மன் சிற்றரசர்களை அழைத்தார்.  லூதர் இம்மன்றத்துகு அனுமதிக்கப்படவில்லை.  ஆனால் மன்றத்துக்குச் சென்ற பிரபுக்களுடன் பாதிவழி சென்று, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, பிரயாணத்தின்போதே, ‘கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்’ என்ற பாடலை எழுதி, அதற்கேற்ற ராகத்தையும் அமைத்துப் பாடினார்.  மிகவும் ஆபத்தான அந்நிலையிலிருந்த அவரது நண்பர்களுக்கு இப்பாடல் மிகுந்த தைரியத்தையும், மன உறுதியையும் அளித்தது. இப்பாடலை நாம் வாசிக்கும்போது, அவர் எத்தகைய ஆபத்துகளுக்குட்பட்டிருந்தார் என்பதையும், கடவுளின் பாதுகாப்பை எவ்வளவாக நம்பியிருந்தார் என்பதையும் காண்போம்.

மார்ட்டின் லூதர் ஜெர்மனி நாட்டில் எய்லிபென் (Eisleben) நகரத்தில் 1483ம் ஆண்டு, நவம்பர் மாதம், 10ம் தேதி, பரி. மார்ட்டின் திருநாளன்று பிறந்தார்.  அவரது தந்தை ஒரு எளிய சுரங்கத் தொழிலாளி.  ஆயினும், மகனுடைய கல்வியை முக்கியமாகக் கருதி, அதற்கேற்ற வசதிகள் செய்துகொடுத்தார்.  மகன் ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்று தந்தை ஆவல் கொண்டாலும், கடவுள் ஊழியத்திற்கென்றே தம்மைத் தத்தம் செய்தார்.  அவர் எர்பர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து (University of Erfurt), 1505’ல் எம்.ஏ. பட்டம் பெற்றார்.  பின் அந்நகரிலுள்ள ஒரு துறவி மடத்தில் சேர்ந்து, 1507ல் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார்.  மறு ஆண்டில் விற்றன்பர்க் பல்கலைக்கழகத்துக்கு (University of Wittenberg) மாற்றப்பட்டு, பேராசிரியராகப் பணியாற்றினார்.  அங்குள்ள நூலகத்தில் ஒரு லத்தீன் வேதபுத்தகத்தைக் கண்டு, அதை வாசிக்கும்போது, ரோமச் சபையின் சித்தாந்தங்கள் திருமறையின் போதனைகளுக்கு முற்றிலும் மாறாக இருப்பதைக் கண்டு வியப்புற்றார்.  ஒருமுறை அவர் ரோம் நகருக்குச் செல்ல நேர்ந்தது.  அங்குள்ள துறவிகளும் மதத்தலைவர்களும் நடத்திய வாழ்க்கையைக் கண்டு, ரோம் நகரமே நரகத்தின் மையம் என்னும் எண்ணத்தோடு விற்றன்பர்க் திரும்பினார்.

இக்காலத்தில்தான் ரோம் நகரில் பரி. பேதுரு பேராலயம் கட்டத் திரளான பணம் தேவைப்பட்டது.  இதற்காகப் பாப்பரசர் உத்தரவுப்படி ஏராளமான பாவமன்னிப்புச் சீட்டுகள் (Indulgences) தயாரிக்கப்பட்டுப் பல இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டன.  லூதர் இதை பலமாக கண்டித்து, விற்றன்பர்க் ஆலயத்தின் கதவில் 95 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு காகிதத்தை ஒட்டிவைத்தார்.  அப்போது, அங்கு ஒரு பண்டிகைக் காலமாயிருந்ததால், ஏராளமானபேர் அதைப் படித்து, அதின் உண்மையை ஒத்துக்கொண்டனர்.  இது பாப்பரசர் கவனத்துக்கு வரவே, லூதர் ஆஸ்பர்க் நகரத்துக்கு வரவழைக்கப்பட்டு, பாப்பரசரின் பிரதிநிதியால் விசாரணை செய்யப்பட்டார்.  இவ்விசாரணையில் அவரது கொள்கைகளைக் குறித்துப் பேசவிடாமல், அவற்றைக் கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டது.  ஆனால் லூதர் தன் கொள்கைகளை திருமறையின் ஆதாரமாகக் கொண்டதால் அவற்றைக் கைவிடமறுத்துவிட்டார்.  அன்றிரவே அவரது நண்பர்கள் அவரை இரகசியமாக விற்றன்பர்குக்கு அனுப்பிவிட்டனர். இதைக் கேட்ட பாப்பரசர் அவரைச் சபைக்குப் புறம்பாக்கினார்.

லூதரின் சீர்திருத்தக் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதற்காக, ஜெர்மன் சக்கரவர்த்தியான சார்ல்ஸ் என்பவர் வெர்ம்ஸ் நகரில் ஒரு நீதிமன்றத்தைக் கூட்டினார்.  இதிலும் அவர் தன் கொள்கைகளைக் கைவிட இயலாது என உறுதியாகக் கூறினார்.  ஜெர்மனியிலுள்ள பல சிற்றரசர்களும், பிரபுக்களும் அவரை ஆதரித்ததால், யாதொரு ஆபத்துமின்றி லூதர் விற்றன்பர்க் திரும்பினார்.  ஆயினும், லூதர் இன்னமும் மிகுந்த ஆபத்திலிருந்ததால், அவரது நண்பர்கள் அவரை வார்ட்பர்க் என்னும் மலைக்கோட்டையில் (Wartburg Castle) ரகசியமாக ஒளித்து வைத்தனர்.  இதையறியாத ரோமச் சபையினர், லூதர் இறந்தார் என மகிழ்ச்சியடைந்தனர்.  கோட்டையினுள்ளிருந்து அவர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.  ஓராண்டுக்குப் பின் அவர் வெளிவந்து தமது ஊழியத்தைத் தொடர்ந்தார்.

1529ல் சார்ல்ஸ் மன்னர் ஜெர்மனியில் லூதரை ஆதரித்த பிரபுக்களை ஸ்பயர்ஸ் என்னுமிடத்தில் ஒரு நீதிமன்றத்துக்கு அழைத்தார்.  இதில் அவர்கள் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரித்து ஒரு பிரகடனம் வகுத்தனர்.  இப்பிரகடனம், ‘Protest of Spires’ என்றும், அதை ஆதரித்தவர்கள், ‘Protestants’ என்றும் அழைக்கப்பட்டனர்.  இதற்குப்பின் சீர்திருத்தக் கொள்கைகள் காட்டுத்தீபோல் உலகமெங்கும் பரவி, சீர்திருத்தச் சபைகள் உருவாகின.

மார்ட்டின் லூதர் ஆரம்பத்தில் ரோமச்சபையின் ஒழுங்கீனங்களைச் சுட்டிக்காட்டும்போது, அச்சபையை விட்டுப் பிரியும் நோக்கமே கிடையாது.  ஆனால் அச்சபையினரின் பிடிவாதமான போக்கினால் சீர்திருத்தச் சபை உண்டாயிற்று.  அவரது பிற்கால வாழ்க்கை, திருமறையை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பதிலும், பாடல்கள், ராகங்கள் எழுதுவதிலும் செலவிடப்பட்டது.  அவர் ஒரு சிறந்த சங்கீத நிபுணர்.

மார்ட்டின் லூதர் எய்லிபென் நகரத்தில், 1546ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18ம் தேதி மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும் –
நிகர் புவியில் இல்லை.

2.    எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸ்துதான்;
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.

3.    விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.

4.    பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ;
இராஜ்ஜியமல்லோ

எங்களுக்கே யிருக்கும்.
A safe stronghold our God is still

Post Comment

No comments:

Post a Comment