Friday, June 21, 2013

பாமாலை 10 - போற்றிடு ஆன்மமே

பாமாலை 10 – போற்றிடு ஆன்மமே சிருஷ்டி
(Praise to the Lord, the Almighty)

’என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி’. சங்கீதம் 103:1

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும், கடவுளைத் துதித்தல் ஒரு முக்கியமான பகுதியாகும்.  நமது பாடல் புத்தகங்களிலும் தெய்வ ஸ்துதிப் பாடல்களே முதல் பகுதியாக இடம்பெறுகின்றன.  நாம் கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெறும்போது அவரைத் துதித்தல் இயல்பான ஒரு வழக்கம்.  ஆனால் நாம் விரும்பிய காரியங்கள் நடைபெறாதிருக்கும்போது, அவரைத் துதிக்கத் தயங்குகிறோம்.  நாம் சிறிது நேரம் தனித்திருந்து, இதுவரை கடவுளிடமிருந்து பெற்றதும் இப்போது பெற்று வருகிறதுமான நன்மைகளைக் கணக்கிடுவோமானால், அவை எண்ணிக்கைக்கடங்காதாவை எனக் காண்போம்.  தாவீதரசன் தன் வாழ்க்கையில் பலவித நிலைமைகளை அனுபவிக்க நேர்ந்தது.  இவற்றிற்கு உதாரணம், சங்கீதங்கள் 95-104, 145-150.  ‘போற்றிடு ஆன்மமே’ என்னும் பாடல் 103-ஆம், 150-ஆம் சங்கீதங்களை தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

Joachim Neander
     இப்பாடலை இயற்றியவர் யோயாக்கீம் நேயாண்டர் (Joachim Neander) என்பவர்.  இவர் ஜெர்மனி நாட்டில் ப்ரெமன்  (Bremen) நகரில் 1650-ஆம் ஆண்டில் பிறந்தார்.  அந்நகரிலுள்ள ஆசிரியர் பள்ளியிலும், உடற்பயிற்சிப் பள்ளியிலும் பயின்றார்.  மாணவராயிருக்கும்போது மற்ற மாணவருடன் சேர்ந்து முரட்டுத்தனமான வாழ்க்கை நடத்திவந்தார்.  கல்வி முடிந்தபின் சில ஆண்டுகள் பிராங்பர்ட் நகரிலும் ஹுடல்பர்க் நகரிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1674-ல் டூசல்டார்ப் நகரிலுள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உழைத்தார்.  இவர் மார்ட்டின் லூதர் ஆரம்பித்திருந்த சீர்திருத்தச் சபையைச் சேர்ந்து, அதன் உதவிப் போதகராகவும் பணியாற்றினார்.  சிலகாலத்துக்குப் பின் அவருக்கும், பள்ளி நிர்வாகிகளுக்குமிடையே கிறிஸ்தவ சமயக்கொள்கைகளைக் குறித்துக் கடுமையான அபிப்பிராய பேதம் உண்டாயிற்று.  திருச்சபைக்குக் கட்டுப்படாமல், தாமாகவே ஜெபக்கூட்டங்கள் நடத்தியும், ஆலயத்தில் நற்கருணையில் பங்கெடுக்காமலும் இருந்ததால், பள்ளியை நிர்வகித்த சபைத்தலைவர்கள் அவரை ஒரு விசாரணை மன்றத்திற்கு அழைத்துச் சிறிதுகாலம் வேலையிலிருந்து நீக்கினர்.  ஆதலால் அவர் மிகவும் தளர்ச்சியுற்று, டூசல் நதிக்கரையில் தனிமையாக உலாவிக் கொண்டிருக்கையில், அருகில் ஒரு குகையைக் கண்டு, அதனுள் சென்று, ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டார்.  தனது கிறிஸ்தவ அனுபவங்கள், மற்றெல்லாருடைய அனுபவங்களைவிடச் சிறந்தவை என அவர் நம்பினார்.  தனக்கு நேர்ந்த துன்பங்களை நினைத்து வருந்தினார்.  கடவுள் தனக்குச் செய்த ஏராளமான நன்மைகள் ஞாபகத்துக்கு வரவே, அவர் ‘போற்றிடு ஆன்மமே’ என்னும் பாடலை இயற்றினார்.  இப்பாடல் முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டுச் சுமார் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் கேத்ரீன் விங்க்வர்த் (Catherine Winkworth) அம்மையாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

     யோயாக்கீம் நேயாண்டர் ஒரு சிறந்த கல்விமான். திருமறையைக் குறித்த அறிவிலும், சங்கீத ஞானத்திலும், கவித்திறனிலும் அவர் கீர்த்தி வாய்ந்தவர்.  அவர் எழுதிய பல பாடல்கள் அவர் மரணத்துக்குப் பின்புதான் புகழ் பெற்றன.  இவற்றைப் பல ஆண்டுகளுக்குப்பின் கேத்ரீன் விங்க்வர்த் அம்மையார் சேகரித்து, ‘ஜெர்மன் கீதங்கள்’ என்னும் பெயருடன் வெளியிட்டார்.  இவரது இதர பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை.


     யோயாக்கீம் நேயாண்டர் 1680-ஆம் ஆண்டு, காசநோயினால் தமது முப்பதாவது வயதில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    போற்றிடு ஆன்மமே, சிஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2.    போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்

3.    போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4.    போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே
சேர்ந்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.
Praise to the Lord, the Almighty

Post Comment

No comments:

Post a Comment