Friday, June 7, 2013

பாமாலை 243 - நேர்த்தியானதனைத்தும்

பாமாலை 243 – நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம்
(All things bright and beautiful)

’நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்’. வெளி 4 : 11

’வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது’ என்னும் வார்த்தைகளில் தாவீதரசன் சிருஷ்டி கர்த்தாவின் மகிமையை விவரித்திருக்கிறார்.  உலகம் உண்டானது முதல் இயற்கையின் அழகையும், சிருஷ்டிப்பின் பற்பல வகைகளையும் பார்த்து வியந்து, செய்யுள்களாகவும், பாடல்களாகவும் மனிதன் அவற்றை வர்ணித்திருக்கிறான்.  ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வர்த் (William Wordsworth), இங்கிலாந்தில் ‘ஏரிப் பிரதேசம்’ (Lake District) என்னும் இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்தில் தங்கி அங்குள்ள எழில்மிகு காட்சிகளைப் பல செய்யுள்களில் வர்ணித்திருக்கிறார்.  ஆண்டவரும் சிருஷ்டிப்பின் மகிமையைக் காட்டுவதற்காக, காட்டு புஷ்பங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  இப்பாடலை எழுதியவர் சிருஷ்டி கர்த்தாவின் படைப்புகளான பல அழகிய படைப்புகளைக் குறிப்பிட்டு, இவற்றை நாம் பார்க்கும்போது, சர்வ வல்ல கர்த்தாவைப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம் என ஞாபகப்படுத்துகிறார்.

    
Cecil Frances Alexander
இப்பாடலை எழுதிய செசில் பிரான்ஸஸ் அம்மையார் (Cecil Frances Alexander), அயர்லாந்து நாட்டில் மலைகள், ஆறுகள், ஏரிகள் முதலிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்ததால், சிருஷ்டி கர்த்தாவின் மகிமையைப் பூரணமாக உணர்ந்தவர்.  இவரது கணவரான அருள்திரு. வில்லியம் அலெக்ஸாண்டர், டெறி என்னுமிடத்தில் அத்தியட்சராக இருந்தார்.  ஆதலால் பிரான்ஸஸ் அம்மையார் அநேக குழந்தைகளின் ஞானஸ்நானத்தில் ஞானத்தாயாக இருக்க நேர்ந்தது.  பிள்ளைகள் வளர்ந்துவந்தபோது, ஆங்கிலத் திருச்சபை முறைப்படி அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து, அவர்களைத் திடப்படுத்தலுக்கு ஆயத்தம் செய்யவேண்டியிருந்தது.  ஆனால் ஞானோபதேசத்தின் பற்பல பகுதிகளை மனப்பாடம் பண்ணுவது பிள்ளைகளுக்கு உற்சாகமற்றதாகக் காணப்பட்டது.  இதைவிட சுலபமான பகுதிகளைக் கொடுத்தால் நன்றாக மனப்பாடம் பண்ணலாம் எனப் பிள்ளைகள் கூறவே, அம்மையார் ஞானோபதேசத்திலுள்ள சித்தாந்தங்களைக் குறித்த செய்யுள்கள் எழுத ஆரம்பித்தார்.  ஞானோபதேசத்தில் குறிப்பிட்டுள்ள முதல் விசுவாசம் ‘வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்’ என்பதாகும்.  இதை அடிப்படையாகக் கொண்டு, ‘நேர்த்தியானதனைத்தும்’ என்ற செய்யுளை அவர் எழுதி, சிருஷ்டி கர்த்தாவின் மகிமையைப் பிள்ளைகளுக்குப் போதித்தார்.  பிள்ளைகளும் இதனைப் பிரியமாக மனப்பாடம் செய்தனர்.  பின்னர், இதற்கு ‘மங்க்’ என்பவரால் எழுதப்பட்ட ஓர் அழகிய ராகம் அமைக்கப்பட்டு, இது ஒரு சிறுவர் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.
    
     இப்பாடலை எழுதிய செசில் பிரான்ஸஸ் அம்மையார் 1818ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் பிறந்து, இயற்கை வளம் நிரம்பிய டைரோன், லண்டன்டெரி மாகாணங்களில் இளம்பிராயத்தைக் கழித்தார்.  முப்பத்திரண்டு வயதாயிருக்கையில், அருள்திரு. வில்லியம் அலெக்ஸாண்டரை மணந்தார். போதகர் முதலில் அர்மாக் என்னுமிடத்தில் அத்தியட்சராகவும், பின்னர் அயர்லாந்து நாடு முழுமைக்கும் பிரதம அத்தியட்சராகவும் பணியாற்றினார்.  அவரது ஊழியத்தில் அவரது மனைவி அதிக உதவியாயிருந்து, அநேக நற்பணிகளில் பங்கெடுத்தார்.  சபையிலுள்ள சிறுவர்களைத் திடப்படுத்தலுக்கு ஆயத்தப்படுத்துவதிலும், ஓய்வுநாட்பள்ளியை நடத்துவதிலும் அதிகமாக உழைத்தார்.  மேலும், தவறிப்போன பெண்களுகென ஓர் இல்லம் ஏற்படுத்தி, அதையும் நிர்வகித்தார்.  கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள இவர், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.  இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களே.  அவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:

v  பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
v  பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
v  பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
v  பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய்
v  பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
v  பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
v  பாமாலை 155 – இளமை முதுமையிலும்
v  பாமாலை 202 – நான் மூவரான ஏகரை


செசில் பிரான்ஸஸ் அம்மையார் 1895ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் தேதி, தமது 77வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison
\
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம், விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்.

1.    பற்பல வர்ணத்தோடு
மலரும் புஷ்பமும்,
இனிமையாகப் பாடி
பறக்கும் பட்சியும்.

2.    மேலோர், கீழானோரையும்
தத்தம் ஸ்திதியிலே,
அரணில், குடிசையில்
வசிக்கச் செய்தாரே

3.    இலங்கும் அருவியும்,
மா நீல மலையும்
பொன் நிற உதயமும்
குளிர்ந்த மாலையும்

4.    வசந்த காலத் தென்றல்,
பூங்கனித் தோட்டமும்
காலத்துக்கேற்ற மழை,
வெய்யோனின் காந்தியும்.

5.    மரமடர்ந்த சோலை
பசும் புல் தரையும்,
தண்ணீர்மேல் தாமரைப்பூ,
மற்றெந்த வஸ்துவும்.

6.    ஆம், சர்வவல்ல கர்த்தா
எல்லாம் நன்றாய்ச் செய்தார்
இதை நாம் பார்த்துப் போற்ற
நாவையும் சிஷ்டித்தார்.
All things Bright and Beautiful

Post Comment

No comments:

Post a Comment