பாமாலை 102 – இரத்தம்
காயம் குத்தும்
(O sacred head
sore wounded)
‘நம்முடைய
மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்’.
ஏசாயா 53 : 5
நமதாண்டவர் கல்வாரிச் சிலுவையில் தொங்கும்போது,
அவர் பட்ட
உடல் வேதனையும், வரப்போகும் மரண வேதனையும் அவரை அதிகமாக வியாகுலப்படுத்தின. திருடருக்கு கொலைபாதகருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த
சிலுவையில், இரு பாதகர் நடுவில் தொங்கிய அவமானமும், சிலுவையைச் சுற்றி நின்ற மக்களின்
இகழ்ச்சியும் ஓரளவு அவரை வேதனைப்படுத்தின.
ஆயினும் அவர் தலையிலிருந்த முள்முடியும், கைகளிலும், கால்களிலும் அடிக்கப்பட்டிருந்த
ஆணிகளும், விலாவில் ஈட்டியால் குத்துண்ட காயமும் அவருக்குக் கொடுத்த வேதனையை விட அவருக்கு
அதிக வேதனையைக் கொடுத்தது, பாவமற்ற அவர் சுமந்த நமது அகோர பாவச்சுமையே. அவரது பாடுகளையும், மரணத்தையும் சிந்திக்கும்போது,
இவ்வித அற்புதமான இரட்சகருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களென்பதை
உணருவோம். முள் முடியுடன் சிலுவையில் தொங்கியிருக்கவேண்டியது
நாமே. ஆகையால் நமது இடத்தை எடுத்துக்கொண்ட
இரட்சகர் முன் நன்றியுடன் தாழ் பணிவோமாக.
Bernard of Clairvaux |
பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ்
நாட்டின் மலைப்பகுதியில், கிளர்வோ என்னுமிடத்தில் ஒரு கிறிஸ்தவத் துறவிகள் மடம் இருந்தது. இதில் பெர்னார்டு (Bernard of Clairvaux) என்ற ஒரு துறவி வசித்துவந்தார். அவர் தமது தினசரி அலுவல்கள் முடிந்தபின் ஒரு தனி
அறைக்குச் சென்று, முள் முடியுடன் தொங்கிய ஆண்டவரின் பாடுகளையும் சிலுவையில் அவர் தொங்கிய
காட்சியையும் தியானித்துக்கொண்டிருந்தார்.
ஓராண்டில், லெந்து நாட்களில் ஆண்டவரின் பாடுகளை மிகவும் ஆழ்ந்து தியானித்து,
வேதனை ஞாயிறு (Passion Sunday) நெருங்கியதால், அத்தினத்தன்று பாடுவதற்காக ஒரு பாடலை
எழுத விரும்பி, ‘இரத்தம் காயம் குத்தும்’ என்னும் பாடலை லத்தீன் மொழியில் எழுதினார்.
முதல் முதலாக அவ்வாண்டு வேதனை ஞாயிறு தினத்தன்றுதான் இப்பாடல் கிளர்வோ துறவிமடத்தில்
பாடப்பட்டது.
Paul Gerhardt |
இப்பாடல் பல நூற்றாண்டுகளாக லத்தீன் மொழியிலேயே
ரோமன் கத்தோலிக்கச் சபைகளில் மட்டும் பாடப்பட்டு வந்தது. 1656ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில்
உயிட்டன்பர்க் நகரில் லுத்தரன் சபைப் போதகராயிருந்த பால் கெர்ஹார்ட் (Paul Gerhardt) என்பவர் ஜெர்மன் மொழியில் இப்பாடலை மொழிபெயர்த்தார். இப்பாடலுக்கு உபயோகப்படும், ‘Passion Chorale’ என்னும்
அழகிய ராகம், ஹாஸ்லர் (Hans
Leo Hassler) என்பவரால்
1601ல் எழுதப்பட்டு, செபாஸ்டியன் பாக் (Johann Sebastian Bach) என்னும் சங்கீத நிபுணரால்
இசைப்படுத்தப்பட்டது.
1830ல் ஆங்கிலத் திருச்சபையில்
போதகராயிருந்த ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் (James Waddel Alexander), இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபின்,
உலகத்தில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, லெந்து காலப் பாடலாகப் பாடப்படுகிறது.
Hans Leo Hassler |
இப்பாடலை எழுதிய தூயர் பெர்னார்டு 1091ம் ஆண்டு
பிரான்ஸ் நாட்டில், பாண்டெயின் என்னுமிடத்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் சிறந்த தெய்வபக்தியுள்ளவர்கள். ஒரு பெண் உட்பட அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உண்டு. இவ்வெழுவரையும் கடவுள் ஊழியத்திற்கென்று பெற்றோர்
தத்தம் செய்தனர்.
இளமைக் கல்வி முடித்து பெர்னார்டு
வாலிபப்பிராயமடைந்ததும், திருமறை விளக்கங்களை படித்து, கடவுள் ஊழியத்திற்காகத் தம்மை
ஆயத்தம் செய்தார். தமது வாழ்க்கையைத் துறவறத்திலேயே
கழிக்கத் தீர்மானித்து, முதலில் சிட்டே என்னுமிடத்தில் தூய ஸ்தேவான் என்பவர் நடத்திய
துறவி மடத்தைச் சேர்ந்து, தமது துறவி வாழ்கையை ஆரம்பித்தார். தூயர் ஸ்தேவானுடைய தூய வாழ்க்கை பெர்னார்டுக்குச்
சிறந்த முன்மாதிரியாயிருந்தது. இம்மடத்தில்
இடவசதி குறைவாயிருந்ததால், 1116ல் கிளர்வோ என்னுமிடத்தில் ஒரு பெரிய துறவி மடம் கட்டப்பட்டது.
இதைப் பராமரிக்கும் பொறுப்பை தூயர் பெர்னார்டு ஏற்றுக்கொண்டார். இம்மடத்தில் பெர்னார்டின் சில சகோதரர் உட்பட பன்னிரண்டு
துறவிகளே ஆரம்பத்தில் வசித்தனர். ஒவ்வொரு துறவியும்
தனி அறைகளில் தங்கி, வேதவாசிப்பிலும், தியானத்திலும், ஜெபத்திலும் தரித்திருந்தார். தூயர் பெர்னார்டு மடத்தில் சேர்ந்து மூன்றாண்டுகளுக்குள்,
மடம் மிகவும் முன்னேற்றமடைந்து, ஏராளமான பேர் மடத்தில் சேர்ந்தனர். அவரது பணியைப் பாராட்டி,
அவருக்குப் பல பரிசுகளும் உயர்பதவிகளும் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் மறுத்து, தமது வாழ்க்கை
முழுவதையும் துறவறத்திலேயே கழித்து, 1153ம் ஆண்டு தமது 62ம் வயதில் காலமானார்.
UnisonJohann Sebastian Bach |
James Waddel Alexander |
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட
நீ லச்சை காண்பானேன்?
ஐயோ, வதைந்து நொந்த
உன் முன் பணிகிறேன்.
2. நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம் கர்த்தரே
இதோ, நான் என்றுஞ் சாக
நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்.
3. நீர் என்னை உமதாடாய்
அறியும் மேய்ப்பரே;
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகம் தீர்த்தீரே;
நீர் என்னைப் போதிப்பிக்க
அமிர்தம் உண்டேனே;
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே.
4. உம்மண்டை இங்கே நிற்பேன்
என்மேல் இரங்குமேன்;
விண்ணப்பத்தில் தரிப்பேன்
என் கர்த்தரை விடேன்;
இதோ, நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்;
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்.
5. என் ஏழை மனதுக்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு
பலிக்கும், மீட்பரே
என் ஜீவனே, நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி
மரித்தால் நன்மையே.
6. நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன், இயேசுவே
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க
கடாட்சித்தருளும்.
7. என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து,
தூங்குவேன், இயேசுவே.
Oh Sacred Head Now Wounded