Wednesday, February 19, 2014

பாமாலை 282 - துக்க பாரத்தால் (Stephanos)

பாமாலை 282 – துக்க பாரத்தால் இளைத்து
(Art thou weary, art thou languid)

‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’. மத்தேயு 11:28

தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் நமது இரட்சகராகிய கிறிஸ்து திருவுளம் பற்றுகிற ஆறுதலான, வார்த்தைகளில் ஒன்று, மேற்கூறிய வசனமாகும். மனித வாழ்க்கையில் நாம் இளைத்து, நொந்துபோகிற சந்தர்ப்பங்களுண்டு.  அந்நிலைகளில் ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன் என ஆண்டவர் அழைக்கிறார். ஆயினும், இப்பாடலின் பின்கவிகளில், அவர் தம் அன்பின் ரூபகாரமாகத் தமது கை, விலாவிலுள்ள காயங்களைக் காண்பிக்கிறார். அவரை அண்டினோருக்குக் கஷ்டம், துன்பம், கண்ணீர் யாவும் இம்மையில் நாம் அனுபவிக்க நேர்ந்தாலும் சாவின்கூரை மாற்ற அவர் வல்லவராயிருக்கிறார்.

John of Damascus
இப்பாடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், எட்டாம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.  ஆதி சபைகளிலும், தற்காலத்தில் ஆங்கிலத் திருச்சபை, ரோம சபை, கிழக்கத்திய சபை, முதலிய சபைகளில் உபயோகிக்கப்படும் ஞானோபதேச வினாவிடை (Catechism) ரூபத்தில், கேள்வியும் பதிலுமாக இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது.  இதை எழுதியவர் தமஸ்கு நகர யோவான் (John of Damascus) என அழைக்கப்பட்ட பக்தனின் மருமகனான ஸ்தேவான் என்பவர். அவர் பலஸ்தீனா நாட்டில் கீதரோன் பள்ளத்தாக்கிலிருந்த மார்சாபா துறவி மடத்தின் பாடகர் குழு தலைவராயிருந்தார்.  இம்மடம் கிழக்கத்திய திருச்சபையைச் சேர்ந்தது.  இவரது ஓயா உழைப்பினால் அக்காலத்தில் இத்துறவிமடம் ஒரு சிறந்த ஆசிரமமாக மட்டுமல்ல புகழ்பெற்ற பாடல் நிலையமாகவும் விளங்கிற்று.  அவர் எழுதிய ஏராளமான பாடல்களில், ‘துக்கபாரத்தால்’ என்னும் பாடலே மிகச்சிறந்ததாக பாராட்டப்படுகிறது.  காலஞ்சென்ற அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் என்பவர் இப்பாடலையே மிகப் பிரியமாகப் பாடி வந்தார்.


John M. Neale (1818-1866)
இப்பாடல் நமது ஆலயங்களில் 1862ம் ஆண்டில்தான் முதன்முதலாகப் பாடப்பட்டது.  இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜான் மேசன் நீல் என்னும் ஆங்கிலச் சபை குருவானவர்.  அவர் 1818ம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்தார்.  பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பக்தி கவிகள் எழுதும் போட்டிகளில் பதினோருமுறை முதல் பரிசு பெற்றார்.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  இருபது மொழிகள் கற்று, பிறமொழிகளிலுள்ள பல நூல்களையும், பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் தாமே பல பாடல்களும் எழுதியுள்ளார்.  ‘துக்க பாரத்தால்’ என்னும் பாடல் அவரது மொழிபெயர்ப்பாயிருந்தாலும், அதின் மிகுதியான பாகம் அவராலேயே எழுதப்பட்டது. 

Stephanos Henry W. Baker
அவரது இறையியல் திறமையைப் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

இப்பாடலுக்கு, Stephanos Henry W. Baker, என்பவர் எழுதிய ராகத்தையே இன்றளவும் நாம் ஆலயங்களில் பாடி வருகிறோம். 

நமது பாமாலைப் புத்தகத்தில் மூன்றாவது கவியில் ‘துன்பம் வருமே’ என்றும் ஆறாவது கவியில் ‘மாட்டேன் என்பாரே’ என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இது தவறான அர்த்தத்தைத் தருகிறது.  பாடலின் பொருளை, எழுதப்பட்ட சூழலை, இக்கவிகளின் முந்தின பிந்தின வரிகளை நோக்கினால், ‘துன்பம் வருமோ?’ என்றும் “மாட்டேன் என்பாரோ” என்பவையே சரியான வரிகள். 

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2.    ”அன்பின் ரூபகாரமாக
என்ன காண்பித்தார்?”
“அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்”.

3.    ”அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?”
“ரத்தினம் பொன்னாலுமல்ல,
முள்ளினால்”.

4.    ”கண்டுபிடித்தண்டினாலும்
துன்பம் வருமோ!”
“கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.”

5.    ”அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?”
“சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?”

6.    ”பாவியேனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரோ!”
“விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!”

7.    ”போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?”
“தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்”.

Post Comment

No comments:

Post a Comment