பாமாலை 22 – தூய, தூய, தூயா!
(Holy, Holy, Holy, Lord God Almighty)
Tune: NICAEA
‘இருந்தவரும்,
இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்,
பரிசுத்தர்’. வெளி 4 : 8
திரித்துவத்
திருநாளன்றும், பரிசுத்த ஆவியின் பண்டிகை அன்றும், மற்றும் தெய்வ ஸ்துதிப் பாடலாகவும்
பாடப்படும் இப்பாடலானது, மேலே சொல்லப்பட்ட வசனத்தைத் தழுவி எழுதப்பட்டது. நமது பாட்டுப்புத்தகங்களிலுள்ள பல பாடல்கள் குறிப்பிட்ட
திருநாட்களுக்காக எழுதப்பட்டவை.
Reginald Heber |
1819ம்
ஆண்டு ஹாட்நெட் நகரத்தில் (Hodnet), பரிசுத்த ஆவி பண்டிகைக்கு முந்தின சனிக்கிழமையன்று
ரெஜினால்டு ஹீபர் (Reginald Heber) போதகரை, தூய அசாப் ஆலயத்தின் (St. Asaph
Cathedral) குருவாக இருந்த அவரது மாமனாரான
ஷிப்லீ பண்டிதர், மறுநாள் ஆராதனையில் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுதித் தரும்படி கேட்டார். உடனே ஹீபர் போதகர் அவ்வறையின் ஒருபுறமாகச்சென்று,
சில மணி நேரத்தில், இப்பாடலை எழுதிக் கொடுத்தார்.
மறுநாள் ஆராதனையில் இப்பாடல் முதலாவதாகப் பாடப்பட்டது. இப்போது இது கிறிஸ்தவ உலகின் எல்லாப் பாகங்களிலும்
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பாடப்பட்டு வருகிறது. மற்றெந்தப் பாடலையும்விட இந்தப் பாடல்தான் அதிகமான
பாட்டுப்புத்தகங்களில் காணப்படுகிறது.
இதை எழுதிய
ரெஜினால்டு ஹீபர் 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் தேதி இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில்,
மால்பாஸ் (Malpas, Cheshire) என்னுமிடத்தில்
பிறந்தார். அவரது ஏழாம் வயதுவரை அவரது தந்தையால்
கல்வி கற்பிக்கப்பட்டு, பதினேழு வயதுவரை அவரது ஊரிலேயே கிராமப்பள்ளியில் கல்வி கற்றார். பின்பு ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்தில் பிரேஸ்னாஸ்
கல்லூரியில் (Brasenose College) பட்டப்படிப்பு
பெற்றார். இங்கு கல்வி கற்கையில், கவிகள் எழுதுவதிலும்,
கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்த திறமை காட்டியதால் அநேக பரிசுகள் பெற்றார். கல்லூரியை விட்டபின்னர், 1806, 1807ம் ஆண்டுகளில்
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார். தாய்நாடு
திரும்பியதும் 1807ல் குருப்பட்டம்பெற்று, பதினாறு ஆண்டுகள் ஹாட்நெட் நகரில் திருப்பணியாற்றினார். இக்காலத்தில் அவர் அநேக பாடல்கள் எழுதினார். ‘தூய, தூய, தூயா’ என்ற பாடல் முன்கூறப்பட்ட சந்தர்ப்பத்தில்
1819ம் ஆண்டு எழுதப்பட்டது.
அவர்
போதகராகப் பணியாற்றும்போது, கிறிஸ்துவையறியாத அயல்நாடுகளைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதுண்டு. இந்தியா தேசப்படத்தைக் கையில் வைத்து, சுவிசேஷத்தைப்
போதிப்பதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்வதாகக் கனவு கண்டார். கடைசியாக 1823ம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா அத்தியட்சராக
(Bishop of Calcutta) நியமனம்பெற்று, அவ்வாண்டு அக்டோபர் மாதம், 11ம் தேதி கல்கத்தாவில்
வந்திறங்கித் தமது பணியை ஆரம்பித்தார். அவர்
ஊழியத்தில் அதிகமாகப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடஇந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து, இலங்கைக்கும்
சென்று, 1825ல் கல்கத்தா திரும்பினார். மறு
ஆண்டு அவர் சென்னை மாகாணத்தில் பிரயாணம் செய்து, சென்னை, கடலூர், தஞ்சாவூர் சென்று,
கடைசியாகத் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்.
இங்கு பல சபைகளில் திடப்படுத்தல் ஆராதனைகள் நடத்தி, 1826ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
3ம் தேதி திருச்சிக்கோட்டையிலுள்ள ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை முடித்து, பின்பு
குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அதிகக் களைப்பினால் திடீரென மயக்கம் உண்டானதால்
தண்ணீர்த்தொட்டியில் விழுந்து காலமானார். அவர்
கடைசியாக நின்று பிரசங்கம் செய்த மேடையை, திருச்சி கோட்டை ஆலயத்திலுள்ள குருமனையில்
இன்றும் காணலாம். அவரது ஞாபகார்த்தமாக திருச்சியில்
ஒரு முதல்தரக் கல்லூரியும் (Bishop Heber College), இரு உயர்நிலைப் பள்ளிகளும்
(Bishop Heber School, Teppakulam Trichy & Bishop Heber School, Puthur
Trichy), சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் இல்லமும் (Bishop Heber
Hall, Madras Christian College, Chennai) செயல்பட்டு வருகின்றன.
ஹீபர்
அத்தியட்சர், அநேக பாடல்கள் எழுதியுள்ளார்.
அவற்றில் பிரபலமான இதர பாடல்கள்:
‘விடியற்காலத்து வெள்ளியே
தோன்றி’ – பாமாலை 86
‘ஞானநாதா, வானம் பூமி நீர்
படைத்தீர்’ – பாமாலை 37
’விண்கிரீடம் பெறப்போருக்கு’
– பாமாலை 385
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Music from Songs & Solos
1. தூய, தூய, தூயா!
சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான
ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
2. தூய, தூய, தூயா!
அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
3. தூய, தூய, தூயா!
ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக்
காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக்
கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,
4. தூய, தூய, தூயா!
சர்வவல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை
ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான
ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
No comments:
Post a Comment