Wednesday, June 4, 2014

பாமாலை 254 - களிப்புடன் கூடுவோம் (Monkland)

பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம்
(Let us with a gladsome mind)
Tune : Monkland

‘கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது’. சங் 36:1

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், யூத ஜனங்களின் தெய்வ வழிபாடுகளில் சங்கீதங்களே பாடல்களாக உபயோகிக்கப்பட்டுவந்தன.  ஒவ்வொரு வசனமும் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சபையாரின் ஒரு பகுதியினர் முதல் பாகத்தையும் மற்ற பகுதியினர் இரண்டாம் பாகத்தையும் வாத்தியக் கருவிகளுடன் பாடிவந்தனர்.  120ம் சங்கீதம் முதல் பல சங்கீதங்கள் ‘ஆரோகண சங்கீதம்’ என்னும் தலைப்பைக் கொண்டவை. இவை யூத ஜனங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பிவரும்போதும், தேவாலயப் பிரகாரங்களில் செல்லும்போதும், பண்டிகைக்காலங்களில் எருசலேமுக்குச் செல்லும்போதும் பாடிக்கொண்டுபோவதற்காக எழுதப்பட்டவை.  கிறிஸ்தவ வழிபாடுகளிலும் முதலில் சங்கீதங்களே பாடப்பட்டுவந்தன. நமது பாட்டுப்புத்தகங்களிலும், சங்கீதங்களைத் தழுவி எழுதப்பட்ட அனேக பாடல்களைக் காணலாம்.  136ம் சங்கீதமானது, கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, பார்வோனுடைய சேனைகளை சிவந்த சமுத்திரத்தில் அழித்து, கானான் தேசத்திலுள்ள பல ராஜாக்களை அழித்து, அத்தேசத்தை அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்ததற்காகவும் அவரைத் துதித்துப் பாடப்பட்டிருக்கிறது.

John Milton
1623ம் ஆண்டு, ஜான் மில்ட்டன் (John Milton) என்னும் பிரபல ஆங்கிலக்கவிஞர் தனது திருமறையைப் படித்துக்கொண்டிருக்கையில், சங்கீத புத்தகத்திலுள்ள பல சங்கீதங்கள் பாடல் ரூபத்தில் அமையக்கூடியதாக இருப்பதைக் கண்டார்.  அவற்றில் 136ம் சங்கீதத்தில் ஒவ்வொரு வசனமும் ‘அவர் கிருபை என்றுமுள்ளது’ என்னும் பல்லவியோடு முடிவடைவதைப் பார்த்தவுடன், அதேவிதமான பல்லவியோடு முடிவடையும் ஒரு பாடல் எழுத ஆவல் கொண்டார். ஆகவே, 26 வசனங்கள் கொண்ட அந்த சங்கீதத்தை 24 கவிகள் கொண்ட ஒரு பாடலாக எழுதி முடித்தார். இப்பாடலே ‘களிப்புடன் கூடுவோம்’ என்னும் பாடலாகும்.  இதிலுள்ள எல்லா கவிகளும் மிகச் சிறந்ததாயிருப்பினும், பாட்டுப்புத்தகத் தொகுப்பாளர்கள் நான்கு அல்லது ஐந்து கவிகளை மட்டும் சேர்த்துக்கொண்டனர். இப்பாடல் கிறிஸ்தவ மாநாடுகளில் ஒரு துதிப்பாடலாகவும், அன்பின் விருந்துகளில் நன்றிகூறும் பாடலாகவும் பாடப்பட்டு வருகின்றது.

இப்பாடலை எழுதிய ஜான் மில்ட்டன் 1608ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். இவரது தந்தை ஓர் எழுத்தாளர். இளம் வயதிலேயே மகனுடைய சிறந்த திறமையையுணர்ந்து, நல்ல கல்வி பயில வசதியளித்தார்.  முதலில் தூய பவுல் பள்ளியிலும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.  அவரது சிறந்த ஒழுக்கத்தையும், நேர்மையான நடத்தையையும் கவனித்த அவரது உடன் மாணவர் அவரை, ‘கிறிஸ்துவின் மனையாட்டி’ (Lady of Christ’s) என அழைத்தனர். தமது வாழ்க்கையில் அவர் கவிஞராகவும், கட்டுரையாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.  சிறிது காலம் அவர் அரசாங்கத் துறையில் லத்தீன் மொழி மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார்.  மில்ட்டன் 1652 முதல் கண்பார்வையை இழந்தபோதிலும், கவிகள் எழுதுவதைக் கைவிடவில்லை.  அவர் கவிகளைச் சொல்லும்போது, அவரது மகள்கள் அவற்றை எழுதி வைத்தனர்.  அவர் எழுதிய கவிகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது 1667ல் அவர் வெளியிட்ட, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியமாகும்.  ஆங்கிலக் கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் என்பவருக்கு அடுத்தபடியாக ஜான் மில்ட்டன் வைக்கப்பட்டுள்ளார்.


Milton Memorial
ஜான் மில்ட்டன் 1674ம் ஆண்டு, நவம்பர் மாதம், 8ம் தேதி தமது 66வது வயதில் மறுமைக்குட்பட்டார். அவரது உடல் தூய ஜைல்ஸ் (St. Giles) ஆலயத்தில் அடக்கம் பண்ணப்பட்டது.  அவரது ஞாபகார்த்தமாக லண்டன் மாநகரிலுள்ள, ‘வெஸ்ட் மின்ஸ்டர் அபே (Westminster Abbey)’ என்னும் பேராலயத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2.    ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3.    இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4.    வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.
Let us with a Gladsome mind

Post Comment

No comments:

Post a Comment