பாமாலை 316 – இயேசு நாதா!
காக்கிறீர்
(Jesus, Saviour pilot me)
’கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும்
……… என்றைக்குங் காப்பார்’. சங் 121:8
மனித
வாழ்க்கை ஒரு கடல் யாத்திரையை ஒத்திருக்கிறது.
முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பிரயாணம் செய்பவர்கள், புயலினாலும், கடல்
கொந்தளிப்பினாலும், கப்பல் பாறைகளில் மோதினதாலும், யாத்திரையில் பல இன்னல்களை அனுபவித்தனர். சரியான கருவிகளின்றிக் கப்பல் அடிக்கடி வழிதவறிச்
செல்வதுமுண்டு. இதைப்போலவே, மனித வாழ்க்கையிலும்,
அடிக்கடிப் புயல்போன்ற இன்னல்களும், இன்னது செய்வதென்று தெரியாத திகைப்பும் குறுக்கிடுகின்றன. இயேசுபெருமானே எல்லாவித வாழ்க்கைப் புயல்களிலும்
உறுதியான வழிகாட்டியாயிருந்து, இறுதியில் மோட்சக்கரை சேர்க்கிறார் என்பதை இப்பாடல்
உணர்த்துகிறது.
Edward Hopper |
அமெரிக்காவில்
நியூயார்க் நகரின் கடற்கரையில், ‘Church
of Sea and Land’ என்னும் பெயர்கொண்ட
ஓர் ஆலயம் உண்டு. கப்பலோட்டிகளும், கப்பல்
வேலையில் ஈடுபட்ட வேலையாட்களும் வெகுவாக இவ்வாலய ஆராதனைகளில் பங்கு கொள்வார்கள். அவர்கள் கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும்முன்னரும்,
பிரயாணம் முடித்துத் துறைமுகம் வந்து சேர்ந்தவுடனும், தவறாமல் இவ்வாலய ஆராதனைக்கு வருவதுண்டு. 1871ம் ஆண்டு முதல் இவ்வாலயத்தில் எட்வர்ட் ஹாப்பர்
(Edward Hopper) என்னும் போதகர், திருப்பணியாற்றிவந்தார். அவரது சபையாரில் அதிகமானபேர் கப்பல் வேலையாளரானதால்,
ஆராதனையில் வாசிக்கப்படும் திருமறைப்பகுதிகள், பாடப்படும் பாடல்கள், போதகர் ஆற்றும்
அருளுரைகள், எல்லாம் கடல் யாத்திரையைக் குறித்தவையாகவும், கிறிஸ்துவே நிலையான வழிகாட்டி
என்பதை உணர்த்துவதாகவும் இருந்தன. கடல் யாத்திரையில்
தங்களுக்கு நேரிட்ட பல ஆபத்துகளையும், கவலையான நிலைமைகளையும், கப்பலோட்டிகள் அடிக்கடி
ஹாப்பர் போதகரிடம் சொல்வதுண்டு. ஆதலால், பிரயாணத்தின்போது
அவர்கள் எப்போதும் பாடி ஆறுதல் பெறக்கூடிய ஒரு பாடல் எழுதப் போதகர் ஆவல்கொண்டு, ‘இயேசுநாதா
காக்கிறீர்’ என்னும் பாடலை எழுதலானார். இப்பாடலை
ஆங்கிலத்தில் பாடும்போது அதின் தாளம் (Rhythm), கப்பல் கடலில் மேலும் கீழும் ஆடிச் செல்வதையும்,
குழந்தையைத் தொட்டிலில் தாய் ஆட்டுவதையும் ஒத்திருக்கும். இப்பாடலை சபையார் வெகுவாகப் பாராட்டினர். அநேகருக்கு இப்பாடல் மனப்பாடமாகி, பிரயாணத்தில்
எப்போதும் பாடிக்கொண்டிருந்தனர். முதல்முறையாக
இப்பாடல் 1871ம் ஆண்டு, கப்பல் தொழிளாலருக்கான ஒரு மாதாந்திரப் பத்திரிகையில் (Sailor’s Magazine) பிரசுரிக்கப்பட்டு, அதே ஆண்டில் பாப்ட்டிஸ்ட்
சபையாரின் பாட்டுப் புத்தகத்தில் (The
Baptist Hymnal) சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இப்பாடலை எழுதிய எட்வர்ட் ஹாப்பர், 1816ம் ஆண்டு,
பிப்ரவரி மாதம், 17ம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து
ஐக்கியத் திருமறைக் கல்லூரியில் ஆயர் பயிற்சி பெற்றார். நியூயார்க் வட்டாரத்தில் கிரீன்வில் (Greenville), சாக்ஹார்பர் (Sag Harbour) என்னுமிடங்களில் பதினோரு ஆண்டுகள் திருப்பணியாற்றியபின்,
1871 முதல் கப்பல் தொழிலாளருக்கான Church
of Sea and Land என்னும் ஆலயத்தில்
பணியாற்றினார். இங்கிருக்கும்போதுதான், ‘இயேசுநாதா
காக்கிறீர்’ முதலிய பல பாடல்களை எழுதினார்.
அவர் எழுதிய பாடல்களைத் தன் பெயரில்லாமலேயே பிரசுரித்தார். அவரது அரிய சேவையைப் பாராட்டி, 1871ல் லாபாயட் கல்லூரி
அவருக்குப் பண்டிதர் பட்டத்தை (Doctor
of Divinity) வழங்கியது. ஹாப்பர் போதகர் 1888ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம்
தேதி, ஒரு பாடல் எழுதிக்கொண்டிருக்கும்போது, திடீரென மாரடைப்பால் காலமானார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. இயேசு நாதா! காக்கிறீர்,
இளைப்பாறச் செய்கிறீர்;
மோசம் நேரிடாமலும்,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர்,
நேச நாதா! காக்கிறீர்.
2. வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்
சூறைக் காற்று மோதினும்
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர்;
நேச நாதா காக்கிறீர்.
3. சற்றுத் தூரம் செல்லவே,
மோட்ச கரை தோன்றுமே!
துன்பம் நீங்கி வாழுவேன்;
இன்பம் பெற்று போற்றுவேன்;
அதுமட்டும் தாங்குவீர்;
நேச நாதா! காக்கிறீர்.
Jesus Savior Pilot me
No comments:
Post a Comment