Monday, July 21, 2014

பாமாலை 103 - என் அருள் நாதா (Rockingham)

பாமாலை 103 – என் அருள்நாதா, இயேசுவே
(When I survey the wondrous cross)
Tune : Rockingham


‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. கலாத்தியர் 6 : 14

இப்பாடலின் இரண்டாவது வரியாகிய, ‘சிலுவைக் காட்சி பார்க்கையில்’ என்பதில், ‘பார்க்கையில்’ என்பது ஆங்கிலத்தில், Survey என்றிருக்கிறது.  இப்பதம் நிலத்தை அளப்பதைக் குறிக்கும்.  நிலத்தை அளப்பவன், நிலத்தின் இருப்பிடம், வடிவம், பரப்பு, எல்கைகள் முதலியவற்றைத் தன் கண்களினாலும், அளக்கும் கருவிகளினாலும் தன் மனதில் திட்டவட்டமாகக் கணிக்கவேண்டும்.  இதையே இப்பாடலை எழுதியவர் தன் மனதில் எண்ணியிருக்கலாம்.  கிறிஸ்தவர்களாகிய நாம், அருள்நாதர் உயிர்துறந்த கல்வாரிச் சிலுவைக் காட்சியை இவ்விதமாகவே ஆராயவேண்டும்.

சிலுவைக் காட்சியை நாம் நுட்பமாக ஆராயும்போது, நமது வாழ்க்கையிலுள்ள குறைகள் தென்படும்.  நமது சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்ட இடமிராது.  மேலும், சிலுவைக்காட்சி வேதனை கொடுக்கும் ஒரு சின்னமாகத் தோற்றமளிக்கும்.  ஆண்டவரின் முகத்தில் முள்முடியினால் வடிந்த இரத்தம் பாய்ந்தோடுவதையும், கைகளிலும், கால்களிலும், ஆணிகளினால் பாய்ந்த இரத்தத்தையும் காண்கிறோம்.  கல்வாரிச் சிலுவை, ‘பேரன்பும், துன்பும் கலந்தே பாய்ந்தோடும்’ காட்சியையும் அளிக்கிறது.  நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில், அவர் நம்மை நேசித்தார்.  ஆகவே, இச்சிலுவைக் காட்சியின்முன் நாம் தலைகுனிந்து, நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய ஏவப்படுகிறோம்.  சராசரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாய் இருந்தாலும், அவை ஆண்டவரின் அன்புக்கு ஈடாகமாட்டா.

Isaac Watts
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் (Isaac Watts) 1674ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, இங்கிலாந்தில் Southampton நகரில், ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.  அவரது தந்தை ஓர் ஆசிரியர்.  Southampton நகரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் குருவானவர், ஐசக் வாட்சுக்கு லத்தீன், கிரேக்க, எபிரேய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.  1690ல் அவர் சுய ஆளுகைச் சபையைச் சேர்ந்த ஒரு வேதசாஸ்திரப் பயிற்சி நிலையத்தில் பயின்று, 1697ல் தமது இருபத்துநான்காவது வயதில், லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகைச் சபையின் போதகராகத் திருப்பணியாற்ற ஆரம்பித்தார்.  சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவரது உடல் நலம் குன்றியதால், திருப்பணியை விட்டு, 1714 முதல், ஹெர்போர்டுஷயரிலிருந்த தமது நண்பர், ஸர் தாமஸ் அபினியுடன் (Sir Thoma Abney) நிரந்தரமாகத் தங்கியிருக்கவேண்டிவந்தது.

அவர் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, அக்காலத்திலிருந்த கிறிஸ்தவப் பாட்டுப் புத்தகங்களில் காணப்பட்ட பாடல்களில் அதிருப்தியடைந்து, தாமே பல பாடல்கள் எழுதினார்.  இரண்டு ஆண்டுகளாக அவர் எழுதிய பாடல்களை, ‘ஆவிக்குரிய பாடல்களும், ஞானப்பாட்டுகளும்’ (Hymns and Spiritual songs) என்னும் பெயருடன் வெளியிட்டார்.  ‘என் அருள்நாதா இயேசுவே’ என்னும் இப்பாடல் கலாத்தியர் 6:14ம் வசனத்தின்பேரில், 1707ம் ஆண்டு எழுதப்பட்டது.  பிரபல ஆங்கிலக்கவிஞரான மேத்யூ அர்னால்டு, இப்பாடலைப் பார்த்து, ‘ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட பாடல்களில் மிகச்சிறந்த பாடல்’ எனப் போற்றியுள்ளார்.  தனது மரணப் படுக்கையிலும் இதையே கடைசியாகப் பாடி மகிழ்ந்தார்.  

Edward Miller
இப்பாடலுக்கு எட்வார்ட் மில்லர் (Edward Miller) என்பவர் எழுதிய ‘Rockingham’ என்னும் ராகம் மிகவும் அழகாக அமைந்துள்ளது.

ஐசக் வாட்ஸ் பண்டிதர் ஒரு சிறந்த கவிஞர்.  மேலும் அநேக வேதவிளக்கங்களும், சரித்திரம், தத்துவசாஸ்திரம், முதலியனவற்றைக் குறித்த கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  ஆயினும் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலமாகவே அவர் புகழ் பெற்றார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் பிரபலமானவை:


வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் (பாமாலை 168)
பகலோன் கதிர்போலுமே (பாமாலை 212)
கர்த்தாவே யுகயுகமாய் (பாமாலை 253)
நான் உம்மைப்பற்றி ரட்சகா – S.S. 883

Isaac Watts Monument at
Westminister Abbey
அவர் 1748ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ம் தேதி காலமானார், அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரில் வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

Pics Courtesy : Wikipedia



Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.

2.    என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3.    கை, தலை, காலிலும், இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.

4.    சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.

5.    மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

When I survey the Wondrous cross

Post Comment

No comments:

Post a Comment