Sunday, July 6, 2014

பாமாலை 24 - மா மாட்சி கர்த்தர் (Hanover)

பாமாலை 24 – மா மாட்சி கர்த்தர்
(O worship the King all glorious above)
Tune : Hanover

’கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்’. சங் 145:10

நமது ஆலய ஆராதனைகளில் முதல்பகுதியைப் பொதுவாகத் தெய்வதுதியாக ஆசரிக்கிறோம்.  ஆராதனை ஆரம்பத்தில் பாடுகிற பாடல்கள், வாசிக்கிற வேதபகுதிகள், ஏறெடுக்கிற ஜெபங்கள் முதலியன ஆண்டவரின் துதியாகவே இருக்கின்றன.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதி தெய்வதுதிப் பாடல்களாகவே இருக்கின்றன. சங்கீதப் புத்தகத்தில் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற அநேக சங்கீதங்களுண்டு.  சங்கீதங்கள் 95-107, 145-150, இதற்கு உதாரணங்களாகும்.  ’மாமாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்’ என்னும் பாடல் 104ம் சங்கீதத்தைத் தழுவி, தெய்வதுதிப்பாடலாக எழுதப்பட்டது.  இச்சங்கீதத்தில் கடவுளின் மகிமை வானத்திலும் பூமியிலும் நிரம்பியிருத்தல் போற்றப்படுகிறது.

Sir Robert Grant
1834ம் ஆண்டு, பம்பாய் நகரத்தில் ஸர் ராபர்ட் கிரான்ட் (Sir Robert Grant) என்பவர் கவர்னராயிருந்தார்.  இவர் திருமறையை நுட்பமாகப் படிப்பதிலும், திருமறையின் பல மொழிபெயர்ப்புகளை ஒத்துப்பார்ப்பதிலும் தனது ஓய்வு நேரத்தை செலவு செய்தார்.  ஒருநாள் அவர், வில்லியம் கீத் என்பவரால் 1561ல் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சங்கீதக் கோர்வையை (Psalter) படித்துக்கொண்டிருக்கும்போது, 104ம் சங்கீதத்தின் மொழிபெயர்ப்பு அவரை அதிகமாகக் கவர்ந்தது.  அவர் மூலமொழியில் இச்சங்கீதத்தைப் படித்துக் கடவுளின் சர்வ வல்லமையையும், சர்வ மகிமையையும் விவரிக்கும் ஓர் ஆங்கிலக் கவி எழுத விரும்பி, உடனே எழுத ஆரம்பித்தார்.  இதன் விளைவாகக் கிறிஸ்தவ உலகம் பெற்றதுதான், ‘மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்’ என்னும் பாடலாகும்.  இப்பாடல் முதலாவதாக, ‘கிறிஸ்தவ சங்கீதப் பாடல்கள்’ என்னும் புத்தகத்தில் பிக்கர்ஸ்தெத் என்பவரால் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்டது.  முதலில் இப்பாடல் புகழ்பெற்ற சங்கீத நிபுணரான ஜோகான் ஹேய்டன் என்பவரால் அமைக்கப்பட்ட ‘Lyons’ என்னும் ராகத்தில் பாடப்பட்டது.  ஆனால் நாம் இப்போது வில்லியம் கிராய்ட் என்பவர் எழுதிய ‘Hanover’ என்னும் ராகத்தை இதற்கு உபயோகிக்கிறோம் (இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகம்).

இப்பாடலை எழுதிய ராபர்ட் கிரான்ட், 1779ம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர்.  இவரது தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.  அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அங்கத்தினராக இந்தியாவுக்கு வந்து, கம்பெனியின் வர்த்தக வாரியத்தின் (Board of Trade) செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.  இந்தியாவில் ஏராளமான பணம் சம்பாதித்தபின், தனது சொந்த நாடாகிய ஸ்காட்லாண்டுக்குத் திரும்பினார்.  அங்கு சென்றபின் தனது புதல்வரான ராபர்ட் கிரான்ட் என்பவரைக் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள மாக்டலீன் கல்லூரியில் கல்வி பயிலச் செய்தார், 1806’ல் ராபர்ட் கிரான்ட் சட்டக் கல்விப்பட்டம் பெற்று, மறு ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  1826ல் அவர் இங்கிலாந்திலுள்ள பாராளுமன்றத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1834ல் அவர் ‘ஸர்’ என்னும் உயர்பட்டம் பெற்று, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கீழ், பம்பாய் மாகாணத்தின் கவர்னாரகப் பதவியேற்று, ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.  1835’ல் அவர் எழுதிய பல பாடல்கள் புத்தக ரூபமாக வெளியிடப்பட்டன.  அவர் எழுதிய எல்லாக் கவிகளும், மற்றும் பல இலக்கியங்களும், அவர் இறந்தபின், அவரது தமையனாரான கிரென்லக் பிரபுவால் வெளியிடப்பட்டன.

ஸர் ராபர்ட் கிரான்ட் மிகவும் உதாரகுணம் படைத்தவர்.  தர்ம காரியங்களுக்கு ஏராளமான பொருளுதவி செய்துவந்தார்.  பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டினார்.  அவர் கவர்னர் பதவியிலிருக்கும்போதே, 1838ம் ஆண்டு, ஜூலை மாதம், 9’ம் தேதி, தமது 59ம் வயதில் பம்பாய் நகரில் காலமானார்.  அவர் ஞாபகார்த்தமாக பம்பாயில் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டிருக்கிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர்.

2.    சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின் மேகம் கோப ரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே.

3.    மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே.

4.    ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்.

O Worship the King all glorious above

Post Comment

No comments:

Post a Comment