Sunday, July 24, 2016

பாமாலை 358 - மெய்ச் சமாதானமா

பாமாலை 358 – மெய்ச் சமாதானமா துர் உலகில்?
(Peace perfect Peace)

‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’. ஏசாயா 26:3

பெத்லகேமில் இயேசு பிறந்தபோது பரமசேனையின் திரள் தோன்றி, ‘பூமியிலே சமாதானம் உண்டாவதாக’ எனப்பாடினர்.  நமதாண்டவர் உயிரோடெழுந்தபின் சீஷருக்குத் தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்றார். வேதபுத்தகத்தில் எத்தனையோ இடங்களில், ‘சமாதானம்’ என்னும் பதம் சொல்லப்பட்டிருக்கிறது.  மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ என்று கூறினார். உலகம் உண்டானது முதல் மனிதன் சமாதானத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறான்.  யுத்தங்களின் முடிவில் சமாதான உடன்படிக்கைகள் செய்யப்படுகின்றன.  முதல் உலகமகா யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.  ஆனால் இந்த உடன்படிக்கையே இரண்டாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாயிருந்தது.  ஆகவே, உண்மையான சமாதானம் இதுவரை உலகத்தில் காணப்படவேயில்லை. ‘மெய்சமாதானமா துர் உலகில்’? என்னும் பாடலில், இயேசுவின் மூலமாகவே நாம் மெய்சமாதானம் அடைய முடியும் எனக்காண்கிறோம்.

Edward Henry Bickersteth, Jr.
(Pic Thanks : Cyberhymnal)
1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஹாம்ஸ்டெட் நகரிலுள்ள கிறிஸ்து ஆலயத்தின் போதகரான பிக்கர்ஸ்டெத் (Edward Henry Bickersteth, Jr.) என்பவர், ஹாரோகேட் (Harrogate, England) நகரில் தம் குடும்பத்தோடு ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்.  ஓய்வுநாளில் ஆலய ஆராதனைக்குச் சென்றார். அவ்வாராதனையில் கிப்பன் என்னும் பிரதமகுரு (Canon Gibbon) ‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’ ஏசா : 26:3 என்னும் வசனத்தில் பிரசங்கம் செய்தார். அதில், மூலமொழியான எபிரேய மொழியில் ‘சமாதானம் சமாதானம்’ என இருமுறை எழுதப்பட்டிருப்பதும், ஆங்கிலத்தில் ‘பூரணசமாதானம்’ என்னும் பொருள் கொண்ட ‘Perfect Peace’ என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் விளக்கினார்.  இதை சிந்தித்துக்கொண்டே போதகர் வீடு வந்து சேர்ந்தார். அன்று மாலையில், மரணப்படுக்கையிலிருந்த தன் இனத்தவரான ஹில் போதகரைப் பார்க்கச் சென்றார். நோயாளி மனசமாதானமின்றி கலக்கமடைந்தவராக காணப்பட்டதால் அருகிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, ‘மெய்சமாதானம் உலகில்” என்னும் பாடலை உடனே எழுதி, நோயாளிக்குப் படித்துக் காண்பிக்கவே, அவர் மிகுந்த ஆறுதல் பெற்றார். பின்பு வீட்டுக்குச் சென்று, மாலை உணவுக்கு அமர்ந்தார்.  ஓய்வுநாள் மாலை உணவின்போதும் அவர் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒரு பாடல் மனப்பாடமாக ஒப்பிக்கச் செய்து, தானும் ஒரு பாடலை ஒப்பிப்பது வழக்கம். அன்று அவர், தான் புதிதாக எழுதிய ‘மெய்சமாதானமா துர் உலகில்?’ என்னும் பாடலையும் படித்துக்காட்டினார். சில தினங்களுக்குப்பின் அவரது சகோதரி, இப்பாடலில் சரீர வேதனையை குறித்த வரிகள் இல்லையே என சுட்டிக்காட்டினார். உடனே போதகர் அங்கு கிடந்த ஒரு காகிதக்கூட்டின் பின்புறம் அதைக்குறித்த ஒரு கவியை எழுதிக்காட்டினார். அது அப்பாடலுக்கு எட்டாவது கவியாகும்.  ஆனால் ஏதோ காரணத்தால் இப்பாடலில் அது சேர்க்கப்படவில்லை.  இப்பாடலின் ஒவ்வொரு கவியிலும் முதல் வரி ஒரு கேள்வியாகவும், இரண்டாம் வரி அதின் பதிலாகவும் அமைந்திருப்பதால் அதின் ராகமும் அதற்கேற்றதாகவே அமைந்திருக்க வேண்டுமெனப் போதகர் விரும்பினார். ஆனால் அத்தகைய ராகம் அமைக்கப்படவில்லை.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் ஹென்றி பிக்கர்ஸ்டெத் 1825ம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். அவரது முன்னோர்கள் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக்கல்லூரியில் பயின்று, பி.ஏ., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றார். 1848ம் ஆண்உ குருத்துவ அபிஷேகம் பெற்று, பானிங்ஹம், நார்டோக், டன்ப்ரிட்ஜ்வெல்ஸ் முதலிய இடங்களில் உதவிக்குருவாக ஊழியம் செய்தார்.  பின்னர், ஹின்டன் மார்ட்டல், ஹாம்ஸ்டெட், கிளஸ்டர் என்னுமிடங்களில் தலைமைக்குருவாகப் (Vicar) பணியாற்றினார்.  1885 முதல் 1900 வரை எக்ஸிட்டர் மாகாணத்தின் அத்தியட்சராக ஊழியம் செய்து ஓய்வு பெற்றார்.  அவரது குருத்துவ வாழ்க்கையில் அவர், பிரசங்கங்கள், பாடல்கள், கிறிஸ்தவ செய்யுள்கள் அடங்கிய பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.

அவர் 1906ம் ஆண்டு, மே மாதம், 16ம் தேதி தமது 81ம் வயதில் லண்டன் மாநகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்

2.    மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.

3.    மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்.

4.    மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்.

5.    மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.

6.    மெய்ச் சமாதானமா சா நிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்.

7.    பூலோக துன்பம் ஒழிந்த பின்னர்.
இயேசு மெய்ச் சமாதானம் அருள்வர்.

Post Comment

No comments:

Post a Comment