Friday, September 1, 2017

மேலோக வரலாறு (I love to tell the Story)

மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
(I love to tell the story)

அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங் 66:16

ஆண்டவர் பரத்துக்கேறுமுன் தமது சீஷருக்குக் கொடுத்த கட்டளை, ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்பதாகும்.  அந்நாள் முதல் கடந்த சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சுவிசேஷகர்கள் உலகமெங்கும் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் அன்பைக் குறித்துப் போதித்ததால், லட்சக்கணக்கான மக்கள் அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.  ஆண்டவரின் அன்பை நமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அதைக்கூறுவதும், வெறுமனே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் வேறு.  ஆண்டவரின் அன்பைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து, அதின் விளைவாக அந்த அன்பைக் கூறி அறிவிக்கிற சுவிசேஷகர்கள் எத்தனைபேர் என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.

Katherine Hankey
இப்பாடலை எழுதிய காத்ரீன் ஹாங்கி (Katherine Hankey), இளவயதிலேயே ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பள்ளியில் மாணவியாக இருக்கும்போதே, சிறுவர்களுக்க்கு ஓய்வுநாட்பள்ளியில் போதிக்க ஆரம்பித்தார்.  இரட்சகரின் அன்பைப் பூரணமாக உணர்ந்திருந்தவராதலால், அதைப் பிறருக்குச் சொல்ல மிகவும் ஆவலாயிருந்தார்.  ஆதலால், முதலில் தான் பிறந்த ஊரிலும், பின்பு இருண்ட கண்டமென அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவிலும், அதன் பின்னர் இங்கிலாந்திலும் ஆண்டவரின் அன்பை ஆவலோடு கூறினார்.  நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அங்கிருந்த நோயாளிகளுக்குப் போதித்தார். 
William G. Fischer
அவர் முப்பத்திரண்டு வயதாயிருக்கையில் வாழ்க்கையில் தனக்கிருந்த ஒரே ஆவலை, ‘மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்’ என்னும் பாடலாக எழுதினார். இப்பாடல் முழுவதிலும் அவரது ஒரே ஆவலை மீண்டும் மீண்டும் கூறி, ‘என் ஆசை, ஆவல் இதே, வேறொன்றும் ஆசியேன்’ என்று எழுதுகிறார். (சில மொழிபெயர்ப்புகளில் ”மேலோக தெய்வ செய்தி ஆவலாய் கூறுவேன்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது).
William G. Fischer (1835-1912) என்பவர் இப்பாடலுக்கான ராகத்தை இயற்றினார்.

காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1834ம் ஆண்டு இங்கிலாந்தில் கிலாபம் என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தை செல்வந்தரான ஒரு வங்கி முதலாளி.  அவர், ‘கிலாபம் நற்செய்திக் குழு’ என்னும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த நற்பணியாளர்.  தன் மகளை இளவயதிலேயே கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பயில அனுப்பி, நல்ல ஆவிக்குரிய அனுபவம் பெறச் செய்தார்.  பள்ளியில் மாணவியாயிருக்கும் காலத்திலேயே இளஞ்சிறுவர்களுக்கான ஓய்வுநாட் பள்ளிகளில் போதித்தார்.  மேலும், தன் உடன் மாணவிகளிடையே வேதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து வேத ஆராய்ச்சிக்குழு ஒன்றை ஏற்படுத்தினார்.  தன் ஊரில் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு வேதம் போதிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.  ஒருமுறை, நோய்வாய்ப்பட்ட தன் சகோதரனை அழைத்து வருவதற்காக ஆப்பிரிக்கா செல்ல நேரிட்டது.  அங்கிருந்த மக்களின் பரிதாபமான ஆத்தும நிலையைக் கண்டவுடன் அம்மையாருக்கிருந்த சுவிசேஷ வாஞ்சை பன்மடங்கு அதிகரித்தது.  சிலகாலம் அங்கேயே உழைத்தபின், தன் தாய்நாடு திரும்பி, மிகவும் ஆர்வத்தோடு ஆண்டவரின் அன்பைக் கூறி அறிவித்தார்.  மேலும், பல பாடல்களும், கிறிஸ்தவ நூல்களும் எழுதி, அவற்றின்மூலம் கிடைத்த வருமானத்தை சுவிசேஷ ஊழியத்துக்காகவே செலவிட்டார்.  தன் வாழ்க்கையின் இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு ஆண்டவரின் அன்பைக் கூறினார்.


காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1911ம் ஆண்டு, தனது 77வது வயதில் லண்டன் மாநகரில் மறுமைக்குட்பட்டார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
இயேசுவும் மகிமையும் கிறிஸ்துவும் உள்ளன்பும்
மெய்யென்று அறிவேன் நான் சொல்ல ஆசிக்கின்றேன்
என் ஆவல் பூர்த்தியாகும் நேசர் மா அன்பினால்

     மண்ணில் என் வாஞ்சை இயேசு, வரலாறு சொல்வதே
     விண்ணில் இயேசுவும் அன்பும், பாடும் பொருள் என்றும்

2.    அற்புத தெய்வ செய்தி சொல்ல வாஞ்சிக்கிறேன்
கனவு நினைவிற்கும் எட்டா அதிசயம்
நான் பெற்ற நன்மை பல, சொல்ல ஆசிக்கின்றேன்
இந்த நன்மைக்காகவே, இதொன்றே உன் தேவை.

3.    சொல்ல சொல்ல இன்பமே, தெவிட்டாத வாஞ்சை,
சொல்லும் போதெல்லாம் இன்பம் அதிசய அன்பு;
ஆத்ம ரட்சிப்பின் செய்தி பலர் கேட்டதில்லை
வேத தூய சத்தியம் சொல்ல வாஞ்சிக்கிறேன்

I love to tell the Story

Post Comment

No comments:

Post a Comment