Sunday, September 17, 2017

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! (Pass me not, O gentle Savior)

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! கெஞ்சிக் கேட்கிறேன்
(Pass me not, O gentle Savior – S.S. 488)

’கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’. யோவேல் 2:32

கடவுள் நம்மெல்லாருக்கும் பலவிதமான தாலந்துகளை அளித்திருக்கிறார். இவற்றை அவரது சேவையில் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ஆனால் அடிக்கடி இத்தாலந்துகளுடன் சில முட்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இம்முட்களைக் காரணமாகக்கொண்டு நமது தாலந்துகளைப் புதைத்து வைப்பது கடவுளின் ஈவுகளை அசட்டை செய்வதாகும்.  ஜான் மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர், 44 வயதாயிருக்கையில் கண்பார்வையை இழந்து, தன் கவித்திறமையைக் கடவுளின் சேவையில் பயன்படுத்தமுடியாதவராய்த் தவித்து, ‘கடவுள் கண் பார்வையை நீக்கிவிட்டுத் தனது சேவையை எதிர்பார்க்கிறாரா?’ என சந்தேகங்கொண்டார்.  இதை அவரது ‘On his blindness’ என்னும் செய்யுளில் குறிப்பிடுகிறார்.  ஆயினும், தீவிரமாகக் கடவுள் சேவையில் ஈடுபடாமல் அமைதியாகத் தரித்திருப்பவர்களும் அவருக்கு நல்ல சேவை செய்யக்கூடும் என்பதை மேற்கூறிய செய்யுளில், ‘They also serve, who only stand and wait’ என்று எழுதுகிறார்.  உலகப் புகழ்பெற்ற, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியத்தை, மில்ட்டன் கண் பார்வை இழந்தபின்னரே எழுதினார்.  கிறிஸ்துவின் நற்செய்தியை அதிகமாகப் பரவச்செய்த அப்போஸ்தலனான பவுல் தன் உடலில் கொடுக்கப்பட்டிருந்த முள்ளைப் பொருட்படுத்தாமல், மரணம் மட்டும் ஓய்வின்றி ஊழியம் செய்தார்.  உலக சரித்திரத்தைப் பார்க்கும்போது உடலில் குறைபாடுள்ள பலர் அரிய சேவை செய்திருப்பதைக் காணலாம்.

இப்பாடலை எழுதிய பானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் பானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார்.  மற்றவர்கள் தன்னை ஒதுக்கி வைத்ததுபோல கடவுளும் தன்னை ஒதுக்கிவிடக்கூடுமோ என அவர் சந்தேகங்கொண்டு, ‘Pass me not, O gentle Saviour’ என்னும் பாடலை அதிக உணர்ச்சியோடு எழுதினார்.  இப்பாடலின் பல்லவியில், ‘While on others Thou art calling, do not pass me by’ (மற்றவர்களை அழைக்கும்போது, என்னை விட்டுவிடாதேயும்) என எழுதித் தன் மனதிலிருந்த வருத்தத்தைக் காட்டியிருக்கிறார்.

பானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

பானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் (S.S. 873)

பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசு ஸ்வாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

     இயேசு ஸ்வாமி
     கெஞ்சிக் கேட்கிறேன்
     பாவியேனைக் கைவிடாமல்
     சேர்த்துக் கொள்ளுமேன்

2.    கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசர் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3.    தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்.

4.    தூய இரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்.

Pass me not, O gentle Savior 

Post Comment

No comments:

Post a Comment