Friday, October 6, 2017

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே
(Our blest Redeemer ere He breathed)

’பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து.. உங்களுக்கு நினைப்பூட்டுவார்’. யோவான் 14:26

ஆண்டவராகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்களாகப் பூலோகத்தில் சஞ்சரித்துப் பலமுறை தமது சீஷருக்குக் காணப்பட்டார்.  ஆயினும் அவர்கள் உயிர்த்தெழுதலின் மகத்துவத்தையும், அதின் முக்கியத்துவத்தையும் இன்னும் உணரவில்லை.  அவரது சீஷரில் தோமா அவர் உயிர்த்தெழுந்ததை விசுவாசிக்கச் சிறிது தயங்கினான்.  மற்ற சீஷரும் மீன் பிடித்தல் முதலிய தங்கள் பழைய தொழில்களுக்குத் திரும்ப எத்தனித்தனர்.  இதை முன்னறிந்த ஆண்டவர், ‘பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்’ அவர்களை பலப்படுத்தி, அவர்கள் எருசலேமை விட்டுப்போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருக்கும்படிக் கட்டளையிட்டார்.  அந்தப்படியே, பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு, ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.  அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அமர்ந்தன. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள்.  இந்த சம்பவத்தை நினைவுகூர, திருச்சபையில் பரிசுத்த ஆவியின் திருநாள் ஆசரிக்கப்படுகிறது.

1829ம் ஆண்டு, பரிசுத்த ஆவியின் திருநாளன்று, காலை ஆலய ஆராதனைக்குப்பின், இங்கிலாந்தில் ஹோடெஸ்டன் நகரில், 56 வயதுள்ள ஒரு அம்மையார் தன் படுக்கையறையின் ஜன்னலுக்கருகில் உட்கார்ந்து, அன்றையத்தினம் ஆராதனையில் ஆற்றப்பட்ட அருளுரையைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானார்.  அவர் மனதில் ஆண்டவர் பரத்துக்கேறின காட்சியும், பெந்தெகோஸ்தே நாளில் சீஷர்கள் கூடியிருக்கும்போது அக்கினிமயமான நாவுகள் ரூபத்தில் பரிசுத்த ஆவி சீஷர்மேல் இறங்கின காட்சியும் உண்டானது. 
John B. Dykes
இவ்விதமாக அவர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஒரு பாடல் அவர் மனதில் வரிவரியாக உருவானது.  எழுதுவதற்குக் காகிதமோ, பென்சிலோ பக்கத்தில் இல்லாததால், அவர் தமது விரலில் கிடந்த வைர மோதிரத்தினால் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலில் அப்பாடலின் ஏழு கவிகளை எழுதினார்.  அந்த அம்மையார் இறந்தபின்னர் அந்தக் கண்ணாடி திருடிக்கொண்டு போகப்பட்டது.  இப்பாடலின் ஐந்து கவிகள் மட்டுமே நமது பாட்டுப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.  இப்பாடல், அருள்திரு. ஜான் டைக்ஸ் 
(John B. Dykes) என்பவர் எழுதிய St. Cuthbert என்னும் ராகத்தில் கிறிஸ்தவ உலகமெங்கும் பல மொழிகளில் பரிசுத்த ஆவியின் திருநாளன்று பாடப்படுகிறது.

இப்பாடலை எழுதியவர் ஹாரியட் ஆபர் அம்மையார்
(Harriet Auber). 
Harriet Auber
இவர் 1773ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஹெர்ட்போர்ட்ஷயர் மாகாணத்திலுள்ள ஹோடெஸ்டன் நகரில் பிறந்தார் (Hoddesdon, Hertfordshire).  நல்ல கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, அவ்வூரிலுள்ள எல்லா கிறிஸ்தவத் தொண்டுகளிலும் பங்குகொண்டார்.  ஆலய ஆராதனைகளுக்கு ஒழுங்காகச் சென்று, வீடு திரும்பியவுடன், ஆராதனையில் ஆற்றப்பட்ட அருளுரையைக் குறித்து வெகுநேரம் சிந்தனை செய்வார்.  அவற்றை அடிப்படையாகக் கொண்ட அநேக பாடல்கள் எழுதியுள்ளார். ஆயினும் அவர் எழுதிய ‘பரத்துக்கேறுமுன்னமே’ என்னும் ஒரே பாடலின் மூலமே அவர் நினைவுகூரப்படுகிறார்.

ஹாரியட் ஆபர் அம்மையார் 1862ம் ஆண்டு, தமது 80வது வயதில் மறுமைக்குட்பட்டார்.


புகைப்படங்கள் நன்றி: www.hertfordshiremercury.co.uk & hymntime.com
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்

2.    விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேருவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்

3.    அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்

4.    நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்

5.    ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே
நீர் தங்கிடும்
Our blest Redeemer ere He breathed

Post Comment

No comments:

Post a Comment