Tuesday, September 18, 2018

I surrender All (இயேசுவுக்காய் ஒப்புவித்தேன்)

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
(All to Jesus I Surrender – I Surrender All)

பண்டிதர் பில்லி கிரஹாம் (Billy Graham), இப்பாடலாசிரியரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘என்னுடைய ஆரம்ப கால பிரசங்க முறைகளை வழிநடத்திய நற்செய்தியாளர்களுள் போதகர் J.W. வான்டே வென்டர் (J.W Van De Venter) ஒருவராவார்.  இவர் ‘ஒப்புவிக்கிறேன்’ என்ற அருமையான பாடலை இயற்றிய பாடலாசிரியரும் கூட.  1936 முதல் 1939 வரையுள்ள ஆண்டுகளில் ஃப்ளோரிடா வேதாகமக் கல்லூரிக்கு (Florida Bible College) அவர் அடிக்கடி வருவதுண்டு.  மாணவர்களாகிய நாங்கள் இந்த அன்பான, ஆவிக்குரிய அனுபவமிக்கவரை நேசித்து ஃப்ளோரிடாவின் தம்பா’வில் (Tampa, Florida) உள்ள அவரது குளிர்கால இல்லத்திற்குச் சென்று, மாலை வேளைகளில் பாடல் பாடி ஐக்கியம் கொள்வதுண்டு.

தாலந்து படைத்தவரான வான்டே வென்டர் தன் வாலிப நாட்களில், இசை வல்லுநராவதா அல்லது நற்செய்திப் பணியின் சவாலை ஏற்பதா என இரண்டு நினைவுகளால் 5 ஆண்டுகளாகத் தடுமாறிக்கொண்டிருந்தார். இது பற்றி அவர் கூறியதாவது:

“சில காலமாக எனது தாலந்துகளைக் கலையுலகில் வளர்ப்பதா அல்லது முழுநேர நற்செய்திப் பணியில் ஈடுபடுவதா, என்ற மனப்போராட்டத்தில் இருந்தேன்.  இறுதியில், என் வாழ்வின் முக்கிய தீர்மானக் கட்டம் வந்தபோது, அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்புவித்தேன். அப்போது என் வாழ்வின் புதிய நாள் உதயமானது. நற்செய்திப் பணியாளரானேன்.

J.W Van De Venter
அப்போது, நான் அதுவரை அறிந்திராத தாலந்து என் ஆத்துமாவின் உள்ளிந்திரியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தேன்.  தேவன் என் உள்ளத்தில் ஒரு பாடலை மறைத்து வைத்து, அவ்வேளையில் என்னில் மென்மையான உள்ளக்கிளர்ச்சியைத் தட்டி எழுப்பி, என்னைப் பாடச் செய்தார்.  பிற்காலத்தில், ஓகியோவின் கிழக்கு பாலஸ்தீனாவில் நான் நற்செய்திக் கூட்டங்கள் நடத்திய நாள்களில், நான் தங்கியிருந்த ஜார்ஜ் செப்ரிங்கின் இல்லத்தில் என்னை முழுமையாக ஆண்டவர் பணிக்கென நான் அர்ப்பணம் செய்த அந்நாளை நினைவு கூர்ந்தேன்.  அப்போது இப்பாடல் என் உள்ளத்தில் உருவானது”.

ஜட்சன் வான் டே வென்டர் 5.12.1855 அன்று மிச்சிகனின் டன்டியருகே உள்ள ஒரு பண்ணையில் பிறந்தார்.  ஹில்ஸ்டேல் கல்லூரியில் (Hillsdale College) பட்டம் பெற்று, ஒரு கலை ஆசிரியரானார்.  பின்னர் பென்சில்வேனியாவின் சாரோன் பொதுப்பள்ளிகளின் கலைக் கண்காணிப்பாளரானார்.  அங்கிருந்த மெதடிஸ்ட் எபிஸ்கோபல் சபையில் உற்சாகமாகத் தன்னார்வ ஊழியம் செய்தார்.

அந்நாட்களில் அவரது திருச்சபையில் நடந்த நற்செய்திக் கூட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார்.  கிறிஸ்தவ சேவையில் சிறந்து விளங்கிய அவரின் திறமையைக் கண்ணுற்ற அவரது நண்பர்கள், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, நற்செய்திப் பணியாளராக மாறும்படி அவரை வற்புறுத்த ஆரம்பித்தனர்.  அடுத்த 5 ஆண்டுகளில்தான், மேற்கூறிய சம்பவங்கள் நடந்து, இறுதியில் அவரது அர்ப்பணத் தீர்மானத்துடன் முடிவு பெற்றன.

Winfield S. Weeden
கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணித்த வான் டே வென்டர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளெங்கும் சுற்றித் திரிந்து நற்செய்திப் பணியாற்றினார்.  இப்பாடலுக்கு ராகம் அமைத்த வின்ஃபீல்டு S வீடென் (Winfield S. Weeden), பல ஆண்டுகளாக இந்நற்செய்திப் பணியில் வென்டருக்கு உறுதுணையாயிருந்தார்.  இவர் 29.3.1847 அன்று ஓகியோனின் மிடில்போர்ட்டில் பிறந்தார். நற்செய்திப் பணியில் முழுமூச்சுடன் இறங்குமுன், வெவ்வேறு இடங்களிலிருந்த இசைப்பள்ளிகளில் பல்லாண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றினார்.  அவர் ஒரு சிறந்த பாடல் குழுத்தலைவராகவும் தாலந்துமிக்க பாடகராகவும் விளங்கினார்.


வீடென் 1908ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.  அவரது கல்லறையில் இப்பாடலின் தலைப்பான ‘ஒப்புவிக்கிறேன்’ என்ற பதம் பொறிக்கப்பட்டுள்ளது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன்! ஒப்புவிக்கிறேன்!
நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

2.    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன்.    - ஒப்புவிக்கிறேன்

3.    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்.         - ஒப்புவிக்கிறேன்

4.    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும்.            - ஒப்புவிக்கிறேன்

5.    இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூர்ண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்ரம் அவர்க்கே       - ஒப்புவிக்கிறேன்



பதிவு தகவல்கள் நன்றி : ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.

Post Comment

No comments:

Post a Comment