Saturday, July 7, 2012

பாமாலை 295 - அருள் மாரி எங்குமாக (SS 700)

பாமாலை 295 – அருள்மாரி எங்குமாக
(Lord I hear of showers)

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 10

1861ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் ஆவிக்குரிய சிறப்பு தியானக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அத்தேசமெங்கும் உயிர்மீட்சி அலை எதிரொலித்தது.  அந்நாட்களில் வெஸ்டன் சூப்பர்மரே என்ற கிராமத்தில் (Weston-super-Mare), ’டீச்சர்! டீச்சர்!” என்ற தன் மாணவ மாணவியரின் ஆரவார சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் எலிசபெத் காட்னர் (Elizabeth Codner)

‘என்ன ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்?’

‘நாங்கள் லண்டனுக்கு விடுமுறை நாட்களைக் கழிக்கச் சென்றோமல்லவா டீச்சர்?

‘ஓ அங்கே எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியா?”

‘இல்லை டீச்சர் நாங்கள் அங்கே நடைபெற்ற தியானப் பயிற்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டோம்.  ஆண்டவரை எங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டோம்.  அவர் எங்கள் உள்ளத்தில் சந்தோஷத்தையும் ஆசீர்வாதமாகப் பொழிந்துவிட்டார்”.

தன்னிடம் கல்வி கற்கும் மாணவரின் ஆவிக்குரிய வாழ்க்கையைப்பற்றியும் மிகுந்த அக்கறை கொண்ட எலிசபெத் காட்னரின் காதுகளில் இச்செய்தி தேனாக ஒலித்தது.  ஆயினும், அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம். ‘என்னிடம் கற்கும் மாணவர்கள் பலர் உண்டே? லண்டனுக்குச் சென்ற ஒருசில மாணவர்கள் மட்டுமே இந்த சிறந்த அனுபவத்தைப் பெற்றார்களே. மற்றெல்லா மாணவரும்கூட இதைப் பெற வேண்டுமே”.

இந்த வாஞ்சையே இப்பாடலை எழுத காட்னரைத் தூண்டியது.

‘ஆண்டவரே, உம் அருள்மாரி எங்கும் பெய்கிறதெனக் கேள்விப்படுகிறேனே. அது இங்கேயும் பொழியட்டுமே’ என்ற இப்பாடலின் வார்த்தைகள் அவளது இதய வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.  தன் மாணவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கென காட்னர் எழுதிய இப்பாடலை, சிறந்த நற்செய்திப் பாடகரான சாங்கி, மூடிப் பிரசங்கியாரின் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார்.  அக்கூட்டங்களில் இப்பாடல் அநேக ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தது.

பல ஆண்டுகளுக்குப் பின், அருள்திரு. கனோன் ஹேய் ஐட்கென் என்ற பிரபல மிஷனரி (Canon Hay Aitken), லண்டனின் மேற்குப்பகுதியில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்.  உல்லாச வாழ்க்கை நடத்தும் நாகரீக இளம்பெண்ணொருத்தி, மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டாள்.  பிரசங்கியாரின் உருக்கமான வேண்டுதல்களும், அழைப்பும், அவள் உள்ளத்தை சிறிதளவும் அசைக்கவில்லை.

(Elizabeth Codner)
செய்தி முடிந்தவுடன், ஆராதனை முடிவின் கலந்துரையாடலில் பங்கேற்க அவள் விரும்பவில்லை.  எனவே, ஆலயத்திலிருந்து வெளியேற எழுந்தாள்.  ஆனால், ஆலயம் நிரம்பி வழிந்து, நடைபாதையிலும் மக்கள் கூட்டமாக நிறைந்திருந்ததால், வாயிலை நோக்கி அவளது நடை மிகவும் மெதுவாகவே முன்னேறியது.  அதற்குள் பாடகர்குழுவினர் இப்பாடலைப் பாட ஆரம்பித்ததனர்.  மெதுவாகப் போய்க்கொண்டிருந்த அந்தப்பெண்ணை, இப்பாடல் மிகவும் கவர்ந்தது.  திரும்பத்திரும்ப வந்த “என்னையும்” என்ற வார்த்தை அவள் உள்ளத்தைத் தொட்டது.

இப்பாடல் அவளுக்குப் புதிதாக இருந்ததால், அப்பாடலின் வரிகளைத் தன் கையிலிருந்த பாடல் புத்தகத்தில் வாசித்துக்கொண்டே வந்தாள்.  ஆலய வாசலை அவள் நெருங்கும்போது பாடலின் கடைசி சரணத்தைப் பாடகர் குழுவினர் பாடினர்.  திடீரென்று பாடலில் கூறப்பட்டுள்ள காணாமற்போன நபர் தான்தானே என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் எழுந்தது.  போகும் வழியெல்லாம் அவள் வீடு செல்லும்வரை, ‘திக்கில்லா இவ்வேழையேனை, கைவிடாமல்’ என்ற வார்த்தைகள் அவள் உள்ளத்தில் தொனித்துக்கொண்டே இருந்தன.  இவ்வார்த்தைகளே, பின்னர் அவள் தனிமையில் தன் படுக்கையறையில் படுத்திருந்தபோது, அவளது தேம்பி அழும் ஜெபமாக மாறியது.

அப்போது, ‘இழந்துபோனதைத் தேடவும், ரட்சிக்கவுமே இயேசு உலகத்தில் வந்தார்’ என்கிற வேத வசனம் (லூக்கா 19:10) அவளுடைய நினைவில் தோன்றியது.  அன்றிரவு தூங்குமுன்பே அவள் இயேசுவையும், அவரது அன்பையும் ஏற்றுக்கொண்டாள். அன்றிரவே கிறிஸ்துவுக்குள் அவளது புதுவாழ்வு மலர்ந்தது.

நன்றி : ‘131 பாடல் பிறந்த கதை’, அமைதிநேர ஊழிய வெளியீடு. இப்புத்தகத்தினைப் பெற 044-22431589, 98412 82627 ஆகிய எண்களிலோ அல்லது comfortccm@gmail.com என்ற முகவரியிலேயோ தொடர்பு கொள்ளுங்கள்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  அருள் மாரி எங்குமாக
பெய்ய அடியேனையும்
கர்த்தரே நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2.  என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்

3.  இயேசுவே நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்

4.  தூய ஆவி கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்

5.  மாறா சுத்த தெய்வ அன்பும்
மீட்பர் தூய ரத்தமும்
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்

மாண்பாய்த் தோன்ற செய்திடும்

Post Comment

No comments:

Post a Comment