பாமாலை 302 – எந்தன் ஜீவன்
இயேசுவே
(Take my life and let it
be)
‘சகோதரரே, நீங்கள் உங்கள்
சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்
என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள்
செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”. ரோமர் 12:1
நாம் பிரியமாக வைத்திருக்கும்
ஒரு பொருளை எப்போதாவது இன்னொருவருக்கு மனதார விட்டுக்கொடுத்திருக்கிறோமா? ஒருவேளை இளவயதாயிருக்கையில்
பெற்றோருடைய வற்புறுத்தலினால் ஒரு விளையாட்டுக்கருவியைத் தம்பி, தங்கைக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால் மேற்காட்டிய வசனத்தின் மூலம், ஆண்டவர் நமது
ஆஸ்தியையோ, நமது தாலந்துகளையோ விரும்புவதைவிட, நம்மையே அவருக்கு அர்ப்பணம் செய்வதையே
விரும்புகிறார் என்று அறிகிறோம்.
இந்தப் பாடலை எழுதிய பிரான்ஸஸ்
ரிட்லே ஹாவர்கல் (Frances Ridley Havergal)
அம்மையார், ஆத்துமாக்களின் பேரில் மிகுந்த வாஞ்சையுள்ளவர்கள். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்று ஐந்து நாட்கள்
அங்கு தங்கியிருக்க நேர்ந்தது. அவ்வீட்டில்
பத்து பேர் உண்டு. அவர்களில் சிலர் கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாதவர்கள். இதையறிந்த ஹாவர்கல்
அம்மையார், இரவு முழுவதும் முழங்காலில் நின்று, ‘ஆண்டவரே இங்குள்ள எல்லோரையும் எனக்குத்
தந்தருளும்’ என மிகவும் ஊக்கமாக ஜெபித்தார்.
அந்த உருக்கமான விண்ணப்பத்தை நமதாண்டவர் கேட்டருளினதால், அம்மையார் அங்கிருந்து
செல்லுமுன், அங்குள்ள பத்து பேரும் கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். அவர் அங்கிருந்த கடைசி இரவில் தூங்காமல், கிறிஸ்துவுக்கு
நம்மைத் தத்தம் செய்தலைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், ‘என்தன் ஜீவன் இயேசுவே’
என்ற பாடல் அவர் மனதில் உருவாயிற்று. அன்றிரவே
அதை எழுதி, ‘என்னையே சமூலமாய், தத்தம் செய்தேன் நித்தமாய்’ என்னும் வரிகளோடு முடித்தார். இந்தப் பாடலை தமது தந்தையார் எழுதிய ‘Patmos’ என்னும்
இராகத்தில் பாடவேண்டும் என அவர் விரும்பினார்.
ஆனால் இப்போது நாம் அதை வேறு பல ராகங்களில் பாடி வருகிறோம்.
இதை நாம் பாடும்போது, ‘என்தன்
ஜீவன் (வாழ்க்கை) இயேசுவே, சொந்தமாக ஆளுமேன்’ என்னும் வரிகளை வேகமாக, யோசனையின்றிப்
பாடிவிடுகிறோம். இந்த வரிகள் நமது சொந்த அனுபவமான
பின்னரே, பின் கவிகளில் குறிப்பிடும் நமது காலம், நேரம், கை, கால், நாவு, ஆஸ்தி, புத்தி,
கல்வி, முதலியவற்றை ஆண்டவருக்குத் தத்தம் செய்யக்கூடும்.
பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல்
அம்மையார் 1836ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் நகரில் பிறந்தார்கள். ஒரு பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு
போதகர். அம்மையார் நான்கு வயதாயிருக்கும்போதே
வேத புத்தகத்தை நன்றாக வாசிப்பார். பின்னர்
புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார். இங்கிலாந்திலும், ஜெர்மனி நாட்டிலும் கல்வி பயின்று,
ஆங்கிலத்தைத் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.
சங்கீதத்தில் அதிக திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், இராகங்கள் எழுதவும், பியானோ
முதலிய சங்கீதக் கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மேலும், ஓய்வுநாட் பள்ளியில் போதிப்பதிலும், ஏழை
மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிக சிரத்தை காட்டினார். ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய ஆயுள் காலத்தில்
அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில, ’அருள்நாதா நம்பி வந்தேன்
(பாமாலை 239), ‘தெய்வ சமாதான இன்ப நதியே’ (பாமாலை 357), ‘நாதா உம் வார்த்தை கூறவே’
(பாமாலை 201) என்பவை.
அவர் 1879ம் ஆண்டு ஜூன் மாதம்,
3ம் தேதி, உவேல்ஸ் நாட்டில், சுவான்ஸீ என்னுமிடத்தில், தமது 42ம் வயதில் காலமானார்.
Unison
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.
2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.
3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.
5. எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.
6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.
Take my Hand and Let it be
No comments:
Post a Comment