Monday, March 3, 2014

பாமாலை 306 - தூய்மை பெற நாடு

பாமாலை 306 – தூய்மை பெற நாடு
(Take time to be holy)

’நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்’. லேவி 20 : 7

நமது வாழ்க்கை எப்போதும் நெருக்கடியான அலுவல்கள் நிறைந்தது.  காலையில் படுக்கையிலிருந்து எழுந்தபின், ஒன்றன்பின் ஒன்றாக அவசரநிலை உண்டாகிக்கொண்டேயிருக்கின்றன.  தாயார் உணவு தயாரிப்பதிலும், தந்தை தன் அலுவலகத்துக்குத் தேவையான காரியங்களை கவனிப்பதிலும் பிள்ளைகள் பள்ளிப்பாடங்களைப் படிப்பதிலும் அவசரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.  இவ்விதமான நெருக்கடியான நிலைமைகள் நாள்முழுவதும், இரவில் படுக்கைக்குச் செல்லும்வரையிலும் நம்மை நெருக்குகின்றன.  இதற்கிடையில் பரிசுத்த பிதாவுடன் தரித்திருந்து, நம்மை பரிசுத்தப்படுத்திக்கொள்ள நாம் நேரம் செலவிடுவதில்லை.  ஆடையலங்காரங்கள் செய்வதிலும், நண்பர்களுடன் உறவாடுவதிலும், விளையாட்டு அரங்கங்களிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம்.  ஆனால் ஆண்டவருடன் தரித்திருந்து, அவரைப்போலப் பரிசுத்தமடைவதற்காக நாம் செலவிடும் நேரம் எவ்வளவு என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.  ஒருவேளை, அவசரமாக திருமறையைத் தட்டித் திறந்து, கண்ணில்படுகிற ஒரு வசனத்தை வாசித்து, அரை நிமிடத்தில் ஒரு ஜெபத்தைச் சொல்லிக் கடமையை முடிக்கவில்லையா?  தானியேல் தினம் மூன்றுவேளை தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்று வாசிக்கிறோம் (தானி 6:10).  இப்பாடலில் முதல்வரியில் (ஆங்கிலத்தில்) சொல்லியபடி, பரிசுத்தத்தை நாடுவதற்காக நேரம் செலவிட நாம் ஏவப்படுகிறோம்.

இங்கிலாந்து நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த வில்லியம் டன் லாங்ஸ்டார்ப் (William Dunn Longstaff) என்பவர் ஒரு சிறந்த பக்தன்.  ஒழுங்காக ஆலய ஆராதனைக்குச் செல்பவர்.  ஒவ்வொரு ஆராதனையிலும் ஆற்றப்படும் அருளுரையை மிகவும் நுட்பமாகக் கவனித்து, வீட்டுக்கு வந்தவுடன் அதைக்குறித்து வெகுநேரம் சிந்தனை செய்வார்.  ஒரு ஓய்வுநாள் காலை ஆராதனையில், ‘நான் பரிசுத்தர் ; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக’ (லேவி 11:45) என்னும் வசனத்தில் செய்யப்பட்ட ஓர் அரிய அருளுரையைக் கேட்டு, வெகு நேரம் அதைக்குறித்துச் சிந்தனை செய்யவே, ‘தூய்மை பெற நாடு’ என்னும் செய்யுள் அவர் மனதில் உருவாயிற்று.  உடனே அவர் அதை எழுதிவைத்தார்.  இதை அவர் ஓர் பாடலாகக் கருதாமல், ஒரு சாதாரணச் செய்யுளாகவே கருதினார். பின்னர், இச்செய்யுள் சில கிறிஸ்தவ பத்திரிகைகளில் பிரசுரமானது.  மற்றவர்களும் இதை ஒரு முக்கியமான செய்யுளாகக் கருதவில்லை.  அமெரிக்காவில் ட்ரெமான்ட்டெம்பிள் (Tremont Temple) என்னுமிடத்திலுள்ள ஆலயத்தில் ஜியார்ஜ் ஸ்டெபின்ஸ் (George Stebbins) என்னும் சங்கீத நிபுணர் பாடகர் தலைவராயிருந்தார்.  இவர் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கிறிஸ்தவச் செய்யுள்களை வெட்டி எடுத்துச் சேர்த்துவைப்பது வழக்கம்.  லாங்ஸ்டார்ப் எழுதிய ‘தூய்மை பெற நாடு என்னும் செய்யுளும் அவரது சேகரிப்பில் இருந்தது.

George Stebbins
1890’ம் ஆண்டு, ஸ்டெபின்ஸ் இந்தியாவுக்கு வந்து, பல எழுப்புதல் கூட்டங்களில் கலந்துகொண்டார்.  ஒருமுறை ‘பரிசுத்தமாக்குதல்’ என்னும் பொருளில் அமைந்த ஒரு பாடல் தேவைப்பட்டது.  இப்பொருளில் லாங்ஸ்டார்ப் எழுதிய செய்யுள் தன்னிடத்தில் இருப்பது ஞாபகத்துக்கு வரவே, அதைத் தேடி எடுத்து, அதற்கேற்ற ஓர் ராகம் அமைத்தார்.  இது பலராலும் போற்றப்பட்டு, பல இடங்களுக்கும் பரவியது.  ஆகவே இப்பாடல் ஓர் ஆங்கிலேயரால் எழுதப்பட்டு, ஓர் அமெரிக்கரால் ராகம் அமைக்கப்பட்டு, இந்தியாவில்தான் முதன்முதலாகப் பாடப்பட்டது.

இப்பாடலை எழுதிய வில்லியம் டன் லாங்ஸ் டார்ப் என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய அதிகமான குறிப்புகள் எதுவும் இல்லை. அவர் 1822ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.  அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவ பக்தன்.  ஆழ்ந்த ஆத்தும அனுபவம் உள்ளவர்.  இந்த ஒரே பாடல் மூலம் அவர் புகழ் ஓங்கிற்று.  அவர் 1891’ம் ஆண்டு, தமது 72வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2.    தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3.    தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த
என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை

4.    தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.
Take Time to be Holy

Post Comment

No comments:

Post a Comment