Tuesday, March 4, 2014

பாமாலை 315 - அன்போடு எம்மை

பாமாலை 315 – அன்போடு எம்மைப் போஷிக்கும்
(O God of Bethel)

‘நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து… உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை’ ஆதி 28 : 15

Philip Doddridge
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன் நகரில் ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) பிலிப்பு டாட்ரிஜ் (Philip Doddridge) என்னும் போதகர் இருபத்திரெண்டு ஆண்டுகளாக திருப்பணியாற்றி வந்தார்.  ஆலய ஆராதனைகளில் அவர் அருளுரை ஆற்றியபின், அருளுரையின் பொருளைக் குறித்த ஒரு பாடலை வாசிப்பது வழக்கம்.  சபை மக்களில் பெரும்பாலோர் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாயிருந்தபடியால், அவர் அப்பாடலை வரி வரியாக வாசித்து, சபையாரையும் வரி வரியாகச் சொல்ல வைத்தார்.  இப்பாடல்களில் மிகுதியானவை அவராலே எழுதப்பட்டவை.  சபையாரில் எழுத வாசிக்கத் தெரிந்த ஒருவர் இப்பாடல்களை உடனே எழுதி வைத்திருந்தார்.  இவ்விதமாக அவர் சுமார் ஐநூறு பாடல்கள் எழுதியிருந்தார்.

ஓர் ஓய்வுநாளில் போதகர் ஆதி 28: 20-22 வசனங்களில் அருளுரையாற்றினார்.  இது, யாக்கோபு, தன் தகப்பன் வீட்டிலிருந்து தனிமையாகப் பிரயாணம் செய்யும்போது பெத்தேலில் இராத்தங்கி, கடவுளைத் தரிசனமாகக் கண்டதையும், கடவுளோடு அவன் பண்ணின பொருத்தனையையும் குறித்தது.  பிரசங்கம் முடிந்தபின், ஏற்கெனவே அவர் எழுதிவைத்திருந்த, ‘அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே’ என்னும் பாடலை சபையாருக்குப் போதித்தார்.  சபையாரும் அதை மனப்பாடம் பண்ணி, பக்திவிநயத்துடன் பாடினர்.  அந்நாள் முதல் இப்பாடல், தெய்வ நடத்துதலுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு பாடலாகப் பயன்பட்டு வருகிறது.  இப்பாடலுக்கு வில்சன் என்பவர் எழுதிய Martyrdom என்னும் ராகம் மிகப்பொருத்தமானது.  டாட்ரிஜ் போதகர் எழுதிய இப்பாடல், அவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்குப்பின், 1781ல் ஜான் லோகன் என்பவரால் சிறிதளவு மாற்றி எழுதப்பட்டது.

இப்பாடலை எழுதிய பிலிப்பு டாட்ரிஜ் என்பவர் 1702ம் ஆண்டு, ஜூன் மாதம் 26ம் தேதி லண்டன் மாநகரில் தமது பெற்றோருக்கு இருபதாவது குழந்தையாகப் பிறந்தார்.  இவரது தந்தை ஒரு வியாபாரி, பாட்டனார் பொகீமிய லுத்தரன் சபையில் போதகர்.  அவரது தாயார் சிறந்த கிறிஸ்தவ பக்தியுள்ளவராதலால், மகன் இளவயதிலிருந்தே கிறிஸ்தவ பக்தியில் வளர்க்கப்பட்டார்.  ஆனால் இளவயதிலேயே பெற்றோரையிழந்து அனாதையானார்.  அவரை ஆங்கிலச்சபைப் போதகராகப் பயிற்றுவிக்க பெட்போர்டு சீமாட்டி அழைத்தார்.  ஆனால் பிலிப்பு டாட்ரிஜ் அதை ஏற்றுக்கொள்ளாமல், கிப்வர்த் என்னுமிடத்திலுள்ள சபை ஆளுகை முறை (Congregational) திருமறைப் பயிற்சிக்கூடத்தை சேர்ந்து, திருமறைப் பயிற்சி பெற்று, இருபத்தொரு வயதிலேயே பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார்.  1729ம் ஆண்டு நார்தாம்டன் நகரிலுள்ள ஒரு சபை ஆளுகைச் சபையில் போதகராக நியமனம் பெற்று, 22 ஆண்டுகள் திருப்பணியாற்றினார்  மேலும் அங்குள்ள ஒரு திருமறைப் பயிற்சிக் கூடத்தையும் மேற்பார்வையிட்டு வந்தார்.  அவரது சிறந்த வேத அறிவைப் பாராட்டி, ஆபர்டீன் பல்கலைக்கழகம் 1736ல் அவருக்குப் பண்டிதர் பட்டம் (Doctor of Divinity) வழங்கியது.  ஆத்தும வளர்ச்சியைக் குறித்து அவர் எழுதிய ஒரு நூல் ஏழு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அவர் 49 வயதாயிருக்கையில் அவருக்குக் காச நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆகையால் சில நண்பர்களின் உதவியால் அவர் சீதோஷ்ண மாறுதலுக்காக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார்.  ஆனால் வியாதி கடுமையாயிருந்ததால், 1751ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 26ம் தேதி லிஸ்பன் நகரில் தமது 49ம் வயதில் காலமானார்.

இவரால் எழுதப்பட்ட பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

பாமாலை 51 – நற்செய்தி! மேசியா இதோ
என் பாவம் தீர்ந்த நாளையே – s.s. 866

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்டம் இவ்வாழ்விலே.

2.    கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3.    மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப்பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4.    இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5.    இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

Post Comment

3 comments: