‘நீர் எங்களுடனே தங்கியிரும்,
சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று’. லூக்கா 24:29
‘இயேசுபெருமான்
உயிர்த்தெழுந்த தினத்தன்று மாலையில், எம்மாவூருக்குச் சென்ற இரு சீஷர்கள் ஆண்டவரிடத்தில்
சொன்ன இவ்வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பாடலே, ‘என்னோடிரும் மா நேச
கர்த்தரே’ என்னும் பாடலாகும். எல்லாப் பாட்டுப்
புத்தகங்களிலும் இது தவறாமல் காணப்படுகிறது. ஆண்டவர் நம்மோடு தங்கியிருந்தால், நம் வாழ்க்கையின் அந்தியகாலம்வரை நமக்கு ஒரு
சஞ்சலமும் ஏற்படாது.
இப்பாடலை எழுதியவர் ஹென்றி பிரான்ஸிஸ் லைட் (Henry Francis Lyte 1793
– 1847). லைட் போதகர் 27 வயதாயிருக்கையில், வியாதியாயிருந்த ஒரு நண்பரை அடிக்கடி
பார்க்கச் சென்றார் நோயாளி எப்போதும், “ஆண்டவரே
என்னோடிரும்” என்று கூறுவார். சில நாட்களில்,
அவர் இறந்துபோகவே, போதகருக்கு, ‘என்னோடிரும்’ என ஆரம்பிக்கும் ஒரு பாடல் எழுதும் எண்ணம்
உதித்தது. 1847ம் ஆண்டு, தமது 54ம் வயதில் லைட் போதகர் காச நோயினால் பீடிக்கப்பட்டு,
குளிர்காலத்தை உஷ்ணமான இத்தாலி நாட்டில் கழிக்கத் தீர்மானித்தார். பிரயாணம் புறப்படுமுன், தமது சபையாருக்குப் பிரசங்கம்
செய்யவேண்டுமென விரும்பினார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால்
அவரது குடும்பத்தினர் அதை ஆட்சேபித்தனர்.
ஆயினும் அவர் ஆலயத்துக்குச்சென்று, நற்கருணையைக் குறித்த ஓர் அரிய பிரசங்கம்
செய்து, நற்கருணை கொடுப்பதிலும் பங்கெடுத்துக்கொண்டார். ஆராதனைக்குப்பின் களைப்படைந்தவராகக் காணப்பட்டாலும்,
உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.
அன்று மாலையில் அவர் கடற்கரையில் உலாவிக்கொண்டிருக்கையில், பல ஆண்டுகளுக்குமுன்
அவர் எழுத ஆரம்பித்த “என்னோடிரும்” என்னும் பாடலை எழுதி முடிப்பதைக்குறித்து தீவிரமாய்
ஆலோசிக்கலானார். ஆனால் அதிகக் களைப்படைந்திருந்தமையால், இவ்வேலையை இத்தாலி சென்று திரும்பியபின்
முடிக்கலாம் என எண்ணினார். ஆயினும் அதை உடனே
முடிக்கும்படி மனதில் ஏவப்பட்டு, அதை எழுதி முடித்து, பாடலையும் அதற்குத் தாம் எழுதிய
ஓர் ராகத்தையும் தம் இனத்தவர் ஒருவரிடம் கொடுத்தார். இது நாம் வழக்கமாகப் பாடும் ராகம் அல்ல. பின்பு, முன் தீர்மானித்தபடியே, தம் குடும்பத்தாருடன்
இத்தாலி நாட்டுக்குப் பயணமானார். சுமார் இரண்டு
மாதங்களுக்குப்பின், நவம்பர் மாதம், 20ம் தேதி அவர் இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரில்
காலமானார். அவர் முதலில் எண்ணியபடி, இப்பாடலை
முடிப்பதை ஒத்தி வைத்திருந்தால், இப்பாடலை கிறிஸ்தவ உலகம் இழந்திருக்கக்கூடும்.
நமது பாட்டுப்புத்தகங்களில் இப்பாடல், மாலைக் கீதங்கள் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் லைட் போதகர் வாழ்க்கையின் அந்தி நேரத்தைக்
குறித்து எழுதினாரேயொழிய ஒரு நாளின் அந்தி நேரத்தைக் குறிக்கவில்லை என்பதை இப்பாடலின்
இரண்டாவது கவியும், ஆறாவது கவியும் தெளிவாகக் காட்டும். மேலும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், தன் வாழ்க்கையின்
அந்திய காலம் நெருங்கி வருவதை எண்ணி இப்பாடலை எழுதலானார். அவர் எழுதிய இதர பாடல்களில் முக்கியமானவை:
·
பாமாலை
1 - ஆத்மமே உன் ஆண்டவரின்
·
பாமாலை
220 – ஆண்டவா ! மேலோகில் உம்
·
பாமாலை
311 – சிலுவை சுமந்தோனாக
‘என்னோடிரும்
மா நேச கர்த்தரே’
பாடலுக்கான இசையை வில்லியம் ஹெச். மாங்க் (William H. Monk) என்பவர் எழுதி, ஹென்றியின்
நினைவு ஸ்தோத்திர ஜெபக்கூட்டத்தில் இசைத்தார்.
அன்று
முதல் இப்பாடல் பல கிறிஸ்தவ சபைகளில் பிரபலமாகத் துவங்கியது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்,
மகாத்மா காந்தியடிகள் ஆகியோருக்கும் இப்பாடல் மிகவும் விருப்பத்திற்குரிய பாடலாகும்.
ஆறாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணி போன்ற அரச குடும்பத்தினரின் திருமணங்களிலும்
இப்பாடல் பாடப்பட்டது. ஒவ்வொரு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் துவக்கத்திலும்
இப்பாடல் பாடப்படுகிறது. மேலும், ஆஸ்திரியா,
நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து தேசங்களின் பல்வேறு வருடாந்திர கொண்டாட்டங்களிலும்
இப்பாடல் இசைக்கப்படுகிறது.
இப்பாடல்
எழுதப்பட்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின், 1947ல் ஒரு பத்திரிக்கை நிருபர் லைட் போதகர்
குடியிருந்த வீட்டுக்குச் சென்று, அவரது பேத்தியாகிய ஹாக் அம்மையாரைப் பேட்டிகண்டார். அவ்வம்மையார் தம் பாட்டனார் நூறு ஆண்டுகளுக்கு முன்
வழக்கமாகப் படுக்கும் அறையிலேயே வியாதியாகப் படுத்திருந்தார்கள். அவர்கள் லைட் போதகர் தம் கையால் எழுதிய ‘என்னோடிரும்’
என்னும் பாடலின் முதல் பிரதியைக் காட்டினார்கள்.
போதகர் இப்பாடலுக்கு எட்டுக் கவிகள் எழுதி உள்ளார். ஆனால் நமது பாட்டுப் புத்தகங்களில் ஐந்து அல்லது
ஆறு கவிகள்தான் காணப்படுகின்றன. விடப்பட்ட
கவிகளில் கடைசிக் கவியை பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்.
‘இளமையில்
என்மேல் பிரகாசித்தீர்
பின் வீம்பு
கொண்டும்மை விட்டோடினும்,
நீர் என்னைக்
கைவிடாதிருக்கிறீர்
முடிவு மட்டும்
நீர் என்னோடிரும்’
கடவுளின் மிகவும் எளிய ஊழியக்காரர்
ஒருவர் எழுதிய பாடல் இன்று உலகெங்கும் ஒலிக்கிறதென்றால், அது, அவர் ஆண்டவரிடம் ஜெபித்து,
தியானித்து பெற்ற பாடல் என்ற காரணமேயன்றி வேறென்ன!
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. என்னோடிரும் மா நேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்.
2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்.
3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
4. நீர் கூட நின்று அருள் புரியும்
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணைநீர், என் தஞ்சமாயிரும்
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
வாழ்நாள் சாங்காலிலும்
என்னோடிரும்.
Abide with me
No comments:
Post a Comment