Friday, October 6, 2017

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே

பாமாலை 140 – பரத்துக்கேறு முன்னமே
(Our blest Redeemer ere He breathed)

’பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து.. உங்களுக்கு நினைப்பூட்டுவார்’. யோவான் 14:26

ஆண்டவராகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்களாகப் பூலோகத்தில் சஞ்சரித்துப் பலமுறை தமது சீஷருக்குக் காணப்பட்டார்.  ஆயினும் அவர்கள் உயிர்த்தெழுதலின் மகத்துவத்தையும், அதின் முக்கியத்துவத்தையும் இன்னும் உணரவில்லை.  அவரது சீஷரில் தோமா அவர் உயிர்த்தெழுந்ததை விசுவாசிக்கச் சிறிது தயங்கினான்.  மற்ற சீஷரும் மீன் பிடித்தல் முதலிய தங்கள் பழைய தொழில்களுக்குத் திரும்ப எத்தனித்தனர்.  இதை முன்னறிந்த ஆண்டவர், ‘பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்’ அவர்களை பலப்படுத்தி, அவர்கள் எருசலேமை விட்டுப்போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருக்கும்படிக் கட்டளையிட்டார்.  அந்தப்படியே, பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு, ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.  அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அமர்ந்தன. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள்.  இந்த சம்பவத்தை நினைவுகூர, திருச்சபையில் பரிசுத்த ஆவியின் திருநாள் ஆசரிக்கப்படுகிறது.

1829ம் ஆண்டு, பரிசுத்த ஆவியின் திருநாளன்று, காலை ஆலய ஆராதனைக்குப்பின், இங்கிலாந்தில் ஹோடெஸ்டன் நகரில், 56 வயதுள்ள ஒரு அம்மையார் தன் படுக்கையறையின் ஜன்னலுக்கருகில் உட்கார்ந்து, அன்றையத்தினம் ஆராதனையில் ஆற்றப்பட்ட அருளுரையைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானார்.  அவர் மனதில் ஆண்டவர் பரத்துக்கேறின காட்சியும், பெந்தெகோஸ்தே நாளில் சீஷர்கள் கூடியிருக்கும்போது அக்கினிமயமான நாவுகள் ரூபத்தில் பரிசுத்த ஆவி சீஷர்மேல் இறங்கின காட்சியும் உண்டானது. 
John B. Dykes
இவ்விதமாக அவர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஒரு பாடல் அவர் மனதில் வரிவரியாக உருவானது.  எழுதுவதற்குக் காகிதமோ, பென்சிலோ பக்கத்தில் இல்லாததால், அவர் தமது விரலில் கிடந்த வைர மோதிரத்தினால் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலில் அப்பாடலின் ஏழு கவிகளை எழுதினார்.  அந்த அம்மையார் இறந்தபின்னர் அந்தக் கண்ணாடி திருடிக்கொண்டு போகப்பட்டது.  இப்பாடலின் ஐந்து கவிகள் மட்டுமே நமது பாட்டுப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.  இப்பாடல், அருள்திரு. ஜான் டைக்ஸ் 
(John B. Dykes) என்பவர் எழுதிய St. Cuthbert என்னும் ராகத்தில் கிறிஸ்தவ உலகமெங்கும் பல மொழிகளில் பரிசுத்த ஆவியின் திருநாளன்று பாடப்படுகிறது.

இப்பாடலை எழுதியவர் ஹாரியட் ஆபர் அம்மையார்
(Harriet Auber). 
Harriet Auber
இவர் 1773ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஹெர்ட்போர்ட்ஷயர் மாகாணத்திலுள்ள ஹோடெஸ்டன் நகரில் பிறந்தார் (Hoddesdon, Hertfordshire).  நல்ல கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, அவ்வூரிலுள்ள எல்லா கிறிஸ்தவத் தொண்டுகளிலும் பங்குகொண்டார்.  ஆலய ஆராதனைகளுக்கு ஒழுங்காகச் சென்று, வீடு திரும்பியவுடன், ஆராதனையில் ஆற்றப்பட்ட அருளுரையைக் குறித்து வெகுநேரம் சிந்தனை செய்வார்.  அவற்றை அடிப்படையாகக் கொண்ட அநேக பாடல்கள் எழுதியுள்ளார். ஆயினும் அவர் எழுதிய ‘பரத்துக்கேறுமுன்னமே’ என்னும் ஒரே பாடலின் மூலமே அவர் நினைவுகூரப்படுகிறார்.

ஹாரியட் ஆபர் அம்மையார் 1862ம் ஆண்டு, தமது 80வது வயதில் மறுமைக்குட்பட்டார்.


புகைப்படங்கள் நன்றி: www.hertfordshiremercury.co.uk & hymntime.com
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்

2.    விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேருவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்

3.    அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்

4.    நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்

5.    ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே
நீர் தங்கிடும்
Our blest Redeemer ere He breathed

Post Comment

Sunday, September 17, 2017

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! (Pass me not, O gentle Savior)

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! கெஞ்சிக் கேட்கிறேன்
(Pass me not, O gentle Savior – S.S. 488)

’கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’. யோவேல் 2:32

கடவுள் நம்மெல்லாருக்கும் பலவிதமான தாலந்துகளை அளித்திருக்கிறார். இவற்றை அவரது சேவையில் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ஆனால் அடிக்கடி இத்தாலந்துகளுடன் சில முட்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இம்முட்களைக் காரணமாகக்கொண்டு நமது தாலந்துகளைப் புதைத்து வைப்பது கடவுளின் ஈவுகளை அசட்டை செய்வதாகும்.  ஜான் மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர், 44 வயதாயிருக்கையில் கண்பார்வையை இழந்து, தன் கவித்திறமையைக் கடவுளின் சேவையில் பயன்படுத்தமுடியாதவராய்த் தவித்து, ‘கடவுள் கண் பார்வையை நீக்கிவிட்டுத் தனது சேவையை எதிர்பார்க்கிறாரா?’ என சந்தேகங்கொண்டார்.  இதை அவரது ‘On his blindness’ என்னும் செய்யுளில் குறிப்பிடுகிறார்.  ஆயினும், தீவிரமாகக் கடவுள் சேவையில் ஈடுபடாமல் அமைதியாகத் தரித்திருப்பவர்களும் அவருக்கு நல்ல சேவை செய்யக்கூடும் என்பதை மேற்கூறிய செய்யுளில், ‘They also serve, who only stand and wait’ என்று எழுதுகிறார்.  உலகப் புகழ்பெற்ற, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியத்தை, மில்ட்டன் கண் பார்வை இழந்தபின்னரே எழுதினார்.  கிறிஸ்துவின் நற்செய்தியை அதிகமாகப் பரவச்செய்த அப்போஸ்தலனான பவுல் தன் உடலில் கொடுக்கப்பட்டிருந்த முள்ளைப் பொருட்படுத்தாமல், மரணம் மட்டும் ஓய்வின்றி ஊழியம் செய்தார்.  உலக சரித்திரத்தைப் பார்க்கும்போது உடலில் குறைபாடுள்ள பலர் அரிய சேவை செய்திருப்பதைக் காணலாம்.

இப்பாடலை எழுதிய பானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் பானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார்.  மற்றவர்கள் தன்னை ஒதுக்கி வைத்ததுபோல கடவுளும் தன்னை ஒதுக்கிவிடக்கூடுமோ என அவர் சந்தேகங்கொண்டு, ‘Pass me not, O gentle Saviour’ என்னும் பாடலை அதிக உணர்ச்சியோடு எழுதினார்.  இப்பாடலின் பல்லவியில், ‘While on others Thou art calling, do not pass me by’ (மற்றவர்களை அழைக்கும்போது, என்னை விட்டுவிடாதேயும்) என எழுதித் தன் மனதிலிருந்த வருத்தத்தைக் காட்டியிருக்கிறார்.

பானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

பானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் (S.S. 873)

பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசு ஸ்வாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

     இயேசு ஸ்வாமி
     கெஞ்சிக் கேட்கிறேன்
     பாவியேனைக் கைவிடாமல்
     சேர்த்துக் கொள்ளுமேன்

2.    கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசர் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3.    தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்.

4.    தூய இரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்.

Pass me not, O gentle Savior 

Post Comment

Friday, September 1, 2017

மேலோக வரலாறு (I love to tell the Story)

மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
(I love to tell the story)

அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங் 66:16

ஆண்டவர் பரத்துக்கேறுமுன் தமது சீஷருக்குக் கொடுத்த கட்டளை, ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்பதாகும்.  அந்நாள் முதல் கடந்த சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சுவிசேஷகர்கள் உலகமெங்கும் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் அன்பைக் குறித்துப் போதித்ததால், லட்சக்கணக்கான மக்கள் அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.  ஆண்டவரின் அன்பை நமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அதைக்கூறுவதும், வெறுமனே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் வேறு.  ஆண்டவரின் அன்பைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து, அதின் விளைவாக அந்த அன்பைக் கூறி அறிவிக்கிற சுவிசேஷகர்கள் எத்தனைபேர் என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.

Katherine Hankey
இப்பாடலை எழுதிய காத்ரீன் ஹாங்கி (Katherine Hankey), இளவயதிலேயே ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பள்ளியில் மாணவியாக இருக்கும்போதே, சிறுவர்களுக்க்கு ஓய்வுநாட்பள்ளியில் போதிக்க ஆரம்பித்தார்.  இரட்சகரின் அன்பைப் பூரணமாக உணர்ந்திருந்தவராதலால், அதைப் பிறருக்குச் சொல்ல மிகவும் ஆவலாயிருந்தார்.  ஆதலால், முதலில் தான் பிறந்த ஊரிலும், பின்பு இருண்ட கண்டமென அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவிலும், அதன் பின்னர் இங்கிலாந்திலும் ஆண்டவரின் அன்பை ஆவலோடு கூறினார்.  நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அங்கிருந்த நோயாளிகளுக்குப் போதித்தார். 
William G. Fischer
அவர் முப்பத்திரண்டு வயதாயிருக்கையில் வாழ்க்கையில் தனக்கிருந்த ஒரே ஆவலை, ‘மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்’ என்னும் பாடலாக எழுதினார். இப்பாடல் முழுவதிலும் அவரது ஒரே ஆவலை மீண்டும் மீண்டும் கூறி, ‘என் ஆசை, ஆவல் இதே, வேறொன்றும் ஆசியேன்’ என்று எழுதுகிறார். (சில மொழிபெயர்ப்புகளில் ”மேலோக தெய்வ செய்தி ஆவலாய் கூறுவேன்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது).
William G. Fischer (1835-1912) என்பவர் இப்பாடலுக்கான ராகத்தை இயற்றினார்.

காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1834ம் ஆண்டு இங்கிலாந்தில் கிலாபம் என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தை செல்வந்தரான ஒரு வங்கி முதலாளி.  அவர், ‘கிலாபம் நற்செய்திக் குழு’ என்னும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த நற்பணியாளர்.  தன் மகளை இளவயதிலேயே கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பயில அனுப்பி, நல்ல ஆவிக்குரிய அனுபவம் பெறச் செய்தார்.  பள்ளியில் மாணவியாயிருக்கும் காலத்திலேயே இளஞ்சிறுவர்களுக்கான ஓய்வுநாட் பள்ளிகளில் போதித்தார்.  மேலும், தன் உடன் மாணவிகளிடையே வேதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து வேத ஆராய்ச்சிக்குழு ஒன்றை ஏற்படுத்தினார்.  தன் ஊரில் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு வேதம் போதிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.  ஒருமுறை, நோய்வாய்ப்பட்ட தன் சகோதரனை அழைத்து வருவதற்காக ஆப்பிரிக்கா செல்ல நேரிட்டது.  அங்கிருந்த மக்களின் பரிதாபமான ஆத்தும நிலையைக் கண்டவுடன் அம்மையாருக்கிருந்த சுவிசேஷ வாஞ்சை பன்மடங்கு அதிகரித்தது.  சிலகாலம் அங்கேயே உழைத்தபின், தன் தாய்நாடு திரும்பி, மிகவும் ஆர்வத்தோடு ஆண்டவரின் அன்பைக் கூறி அறிவித்தார்.  மேலும், பல பாடல்களும், கிறிஸ்தவ நூல்களும் எழுதி, அவற்றின்மூலம் கிடைத்த வருமானத்தை சுவிசேஷ ஊழியத்துக்காகவே செலவிட்டார்.  தன் வாழ்க்கையின் இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு ஆண்டவரின் அன்பைக் கூறினார்.


காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1911ம் ஆண்டு, தனது 77வது வயதில் லண்டன் மாநகரில் மறுமைக்குட்பட்டார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
இயேசுவும் மகிமையும் கிறிஸ்துவும் உள்ளன்பும்
மெய்யென்று அறிவேன் நான் சொல்ல ஆசிக்கின்றேன்
என் ஆவல் பூர்த்தியாகும் நேசர் மா அன்பினால்

     மண்ணில் என் வாஞ்சை இயேசு, வரலாறு சொல்வதே
     விண்ணில் இயேசுவும் அன்பும், பாடும் பொருள் என்றும்

2.    அற்புத தெய்வ செய்தி சொல்ல வாஞ்சிக்கிறேன்
கனவு நினைவிற்கும் எட்டா அதிசயம்
நான் பெற்ற நன்மை பல, சொல்ல ஆசிக்கின்றேன்
இந்த நன்மைக்காகவே, இதொன்றே உன் தேவை.

3.    சொல்ல சொல்ல இன்பமே, தெவிட்டாத வாஞ்சை,
சொல்லும் போதெல்லாம் இன்பம் அதிசய அன்பு;
ஆத்ம ரட்சிப்பின் செய்தி பலர் கேட்டதில்லை
வேத தூய சத்தியம் சொல்ல வாஞ்சிக்கிறேன்

I love to tell the Story

Post Comment

Thursday, August 24, 2017

தட்டித் தட்டி (Knocking Knocking)

தட்டி, தட்டி நிற்கிறார்
(Knocking, Knocking, who is there?)

‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்’. வெளி 3 : 20

அநேகக் கிறிஸ்தவ வீடுகளில் ஆண்டவராகிய இயேசுவைக் குறித்த பல படங்கள் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணலாம்.  ஒரு படத்தில் கிறிஸ்து கதவண்டையில் நின்று தட்டிகொண்டிருப்பதையும், ஒரு படத்தில் கிறிஸ்து நல்ல மேய்ப்பனாகவும், இன்னொரு படத்தில் முள்முடியுடன் ஆண்டவர் சிலுவையில் தொங்குவதையும் காணலாம்.  ஆகவே, கிறிஸ்துநாதரைக் குறித்த படம் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறையிலும் கிறிஸ்து இயேசு இருப்பதாகக் கருதப்படுகிறது.  ஆயினும் சுவர்களில் தவிர, நம் வீடுகளில் ஆண்டவருக்கு இடமிருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.  நமது வீடுகளில் நாம் நடப்பிக்கும் எல்லாக் காரியங்களிலும் ஆண்டவருக்குப் பங்கு உண்டா?  அவர் எப்போதும் கதவண்டையில் நின்று, உள்ளே வருவதற்காக அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இப்பாடலின் கடைசிக் கவியில் சொல்லப்பட்டிருப்பதுபோல,

     ’உள்ளே வாரும்! இயேசுவே
     எந்தன் நெஞ்சில் தங்குமே’

என்று அவரை நம் உள்ளத்தில் எப்போதும் வைத்துக்கொள்வோமாக.

Harriet Elizabeth Beecher Stowe
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவில் மக்கள், செல்வம் தேடுவதிலேயே அதிகக் கவனம் செலுத்திவந்தனர்.  அங்குள்ள தென்பகுதிகளில் ஏராளமான பருத்தித் தோட்டங்களுண்டு.  இவற்றில் ஆயிரக்கணக்கான கறுப்பின அடிமைகளைப் பலவந்தமாக உழைக்கச்செய்து, தோட்ட முதலாளிகள் திரண்ட செல்வத்தைச் சம்பாதித்தனர்.  பெயரளவில் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அவர்களது வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குச் சிறிதளவும் இடமில்லாதிருந்தது.  அவர்கள் மத்தியில் வசித்த ஹாரியட் பீக்கர் ஸ்டோ அம்மையார் (Harriet Elizabeth Beecher Stowe) இதைக்கண்டு மிகவும் மனம்வருந்தி, கடவுளின் அழைப்பு மக்களுக்கு எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது, என்பதை உணர்த்துவதற்காக, ‘தட்டித் தட்டி நிற்கிறார்” என்னும் பாடலை எழுதினார்.  இப்பாடல், எழுப்புதல் கூட்டங்களில் ஒரு ‘தெய்வ அழைப்பு’ பாடலாகவும், சிறுவர் பாடலாகவும் வெகுவாகப் பாடப்பட்டு வருகிறது.

ஸ்டோ அம்மையார் இப்பாடலுக்கு மூன்று கவிகள் மட்டும் எழுதினார். மூன்றாவது கவி,

     ’நேசப் பார்வையுற்ற மீட்பர்
     இன்னும் காத்து நிற்கிறார்’

என முடிவடைகிறது.  அநேக ஆண்டுகளுக்குப்பின், அமெரிக்காவில் நடந்த ஒரு நற்செய்திக் கூட்டத்தின் முடிவில் இப்பாடல் பாடப்பட்டது.  அக்கூட்டத்துக்கு ஒரு தாயாரும் அவரது எட்டு வயதுள்ள பெண்குழந்தையும் சென்றிருந்தனர். கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது, குழந்தை தாயாரைப் பார்த்து, ‘அம்மா, அந்தப் பாடலின் முடிவு சரியல்ல; ஏனெனில் இரட்சகர் இன்னும் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்’ என்று கூறினாள்.  ஆனால் தாயார் அதை முக்கியமாகக் கருதவில்லை.  வீடு சேர்ந்தவுடன் குழந்தை தன் அறைக்குச் சென்று, சிறிது நேரத்துக்குப்பின் தாயாரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து, ‘அம்மா, அப்பாடலுக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவு அல்லவா இருக்கவேண்டும்?’ என்று வினவினாள்.  அக்காகிதத்தில்,

     ’உள்ளே வாரும்! இயேசுவே!
     எந்தன் நெஞ்சில் தங்குமே
     திவ்ய அன்பை உணராமல்
     முன்னே வாசல் பூட்டினேன்
     இப்போதோ! என் நேச நாதா!
     உள்ளே வாரும்! வாருமேன்’

என்னும் ஒரு கவியைக் கண்டு, தாயார் வியப்படைந்தார். பின்னர் அக்கவியையும், அது எழுதப்பட்ட சந்தர்ப்பத்தையும் ஒரு கிறிஸ்தவப் பத்திரிகைக்குத் தாயார் அனுப்பினார். இதைப் பார்த்த ஹே அட்கின் போதகர், அக்கவியையும் தனது சபைப் பாட்டுப் புத்தகத்திலுள்ள ‘தட்டித் தட்டி நிற்கிறார்’ என்னும் பாடலுடன் சேர்த்துக்கொண்டார். இக்கவி அப்பாடலுகு மிகவும் அவசியமானதென்று எல்லோரும் பாராட்டினதால் அநேகப் பாட்டுப் புத்தகங்களில் இப்பாடல் இக்கவியுடன் நான்கு கவிகளாகக் காணப்படுகிறது.

இப்பாடலை எழுதிய ஹாரியட் பீக்கர் அம்மையார் 1812ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமெரிக்காவில் லிச்பீல்டு நகரில் பிறந்தார்.  நான்கு வயதாயிருக்கையில் தாயாரை இழந்ததால், தன் பாட்டியோடு கில்போர்ட் நகரில் வசிக்கலானார்.  சில ஆண்டுகளுக்குப்பின் லிச்பீல்ட் நகருக்குத் திரும்பிவந்து, அங்குள்ள ஒரு கல்வி நிலையத்தில் கல்வி பயின்றார். இங்கிருக்கும்போது, ஆத்துமாவின் அழியாமையைக் குறித்த ஒரு கட்டுரை எழுதி, அந்நிலையத்திலுள்ள எல்லாருடைய மதிப்பையும் பெற்றார்.  1832ல் அவரது குடும்பத்தினர் யாவரும் சின்சினாட்டி நகரில் வசிக்கச் சென்றனர்.   இங்கிருக்கும்போதுதான் அவர், ‘Uncle Tom’s Cabin’ என்னும் கதை புத்தகத்தை எழுதி உலகப்புகழ் பெற்றார்.  இக்கதை அமெரிக்காவில் அடிமைகளின் பரிதாப வாழ்க்கையை விவரிப்பதாகும். அவர் அநேக பாடல்களும் எழுதியுள்ளார்.


ஹாரியட் பீக்கர் ஸ்டோ, 1896ம் ஆண்டு, ஜூலை மாதம் 1ம் தேதி, தமது 84வது வயதில் ஹார்ட்ஃபோர்ட் நாரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
பரதேசி போல வந்தும்
ராஜனாய் இருக்கிறார்
உள்ளமே இவ்வன்புணர்ந்து
கதவைத் திறக்கப்பார்!

2.    தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
நிலையோரம் புல்முளைத்துக்
கீலும் துருப் பட்டது
கதவசையாமல் தங்கித்
திறவாமற் போயிற்று!

3.    தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக்கொண்டிருக்கிறார்
சூட்டப்பட்ட சிரசுள்ளார்!
காயப்பட்ட கைகள் பார்!
நேச பார்வையுற்ற மீட்பர்
இன்னும் காத்து நிற்கிறார்.

4.    உள்ளே வாரும்! யேசுவே
எந்தன் நெஞ்சில் தங்குமே
திவ்ய அன்பை உணராமல்
முன்னே வாசல் பூட்டினேன்
இப்போதோ என் நேச நாதா

உள்ளே வாரும்! வாருமேன்!

Post Comment

Tuesday, July 25, 2017

பாமாலை 20 - கர்த்தாவே மாந்தர் (Nicolaus Lobt Gott)

பாமாலை 20 – கர்த்தாவே மாந்தர் தந்தையே
(Dear Lord and Father of mankind)

‘அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று’. 1 இராஜாக்கள் 19 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் பல வித்தியாசமான முறைகளை அனுசரித்து வருகிறோம்.  சில கிறிஸ்தவ வழிபாடுகளில் பாடப்படும் பாடல்களும், ஏறெடுக்கப்படும் ஜெபங்களும் மிகவும் அமைதியான முறையில் செய்யப்படுகின்றன.  சிலரது வழிபாடுகளில் கொட்டு முழக்கங்களும், கைதட்டுகளும் ஒலிக்கின்றன.  இன்னும் சில பகுதியினர் ஜெபம் செய்யும்போது இடையிடையே ‘ஆமென்’, ‘அல்லேலூயா’ என உரத்த சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர்.  வேறு சில பிரிவினர் தங்கள் ஆராதனைகளில், பரிசுத்த ஆவியைப் பெற்று வேறு மொழிகளில் பேசுவதாக நம்பி, பலவிதமான சத்தங்களை உண்டுபண்ணுகின்றனர்.  ஆனால் 1 இராஜாக்கள் 19:11,12 வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல, பர்வதங்களைப் பிளக்கிறதும், கன்மலைகளை உடைக்கிறதுமான பெருங்காற்றிலும், காற்றுக்குப்பின் உண்டான பூமியதிர்ச்சியிலும், அதற்குப்பின் உண்டான அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை.  அக்கினிக்குப் பின் உண்டான அமர்ந்த மெல்லிய சத்தத்திலேயே கர்த்தர் காணப்பட்டார்.  ஆகவே நமது ஆராதனைகள் அமைதியானதாகவும், ஆரவாரங்களில்லாமலும் இருப்பதே சிறந்தது.

John Greenleaf Whittier
இப்பாடலை எழுதிய விட்டியர் (John G. Whittier) என்பவர் அமெரிக்காவில் நியூஹாம்ப்ஷயர் என்னுமிடத்தில் வசித்துவந்தார்.  அவரது ஊருக்கருகில் அடிக்கடிப் பல எழுப்புதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  இக்கூட்டங்களில் அதிகமான சத்தமும், சந்தடியும், ஆரவாரமும் உண்டாயின.  இக்கூட்டங்களை நடத்தியவர்கள், ஆரவாரத்துடன் நடக்கும் கூட்டங்களில்தான் உண்மையான இறையுணர்வு உண்டாகும் என நம்பினர்.  விட்டியர், Quakers என்னும் நண்பர் குழுவைச் (Society of Friends) சேர்ந்தவர்.  இக்குழுவினர், வாழ்க்கையில் ஆடம்பரமும் சொகுசும் இல்லாமல் ஜீவிப்பதே கடவுளுக்குப் பிரியமானது என நம்பினர்.  மேற்கூறிய எழுப்புதல் கூட்டங்களைப் பார்த்த விட்டியர், இதை ஆப்பிரிக்கர் இறையுணர்வு உண்டாவதற்காக ‘சோமா’ என்னும் மதுபானத்தைத் தயாரித்து அருந்துவதற்கு ஒப்பிட்டார்.  இதை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடியான நிலைமைகளை மேற்கொள்ளத் தினம் சிறிதுநேரம் அமைதியாகக் கடவுளுடன் தரித்திருப்பது மிக அவசியம் என்பதை உணர்த்துவதற்காக, ‘The Brewing of Soma’ (சோமா மதுபானம் வடித்தல்) என்னும் தலைப்பைக் கொண்ட ஓர் ஆங்கிலச் செய்யுளை விட்டியர் 1872’ல் எழுதினார்.  இச்செய்யுளிலுள்ள சில கவிகளை 1884ல் காரட் ஹாடர் என்னும் ஆங்கிலப் பாடகர் ஒரு பாடலாகத் தொகுத்தார்.  இதுவே, ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலாகும்.

இப்பாடலை எழுதிய ஜான் கிரீன்லீப் விட்டியர் (John Greenleaf Whittier), 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஹேவர்ஹில் (Haverhill, Massachusetts) என்னுமிடத்தில் பிறந்தார்.  இவரது தந்தை, ‘உவேக்கர்’ பிரிவைச் சேர்ந்த ஒரு விவசாயி.  விட்டியர் இளவயதில் கடுமையான வேலை செய்யவேண்டியிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் குன்றியது.  ஓய்வு நேரங்களில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொண்டு, பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார்.  பத்தொன்பதாவது வயதில் அவ்வூரிலுள்ள ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகள் கல்வி கற்றார்.  இங்கிருக்கையில் ஆங்கிலக்கவிஞரான, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ என்பவரின் செய்யுள்களால் கவரப்பட்டுத், தாமும் பல செய்யுள்கள் எழுதினார். மேலும், அடிமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து அதைக்குறித்துப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதினார்.  சில ஆண்டுகள் தமது சொந்த மாகாணத்தில் சட்டசபை அங்கத்தினராகவும் பணியாற்றினார்.

விட்டியர் சங்கீதத் திறமையில்லாதவராதலால், தமது செய்யுள்களை அவர் பாடல்களாகக் கருதவில்லை.  ஆனால் 1893ல் சிக்காகோ நகரில் நடந்த மதசம்பந்தமான மாநாட்டில் (Parliament of Religions) எல்லா மதத்தினரும் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட பாட்டுப் புத்தகத்தில், விட்டியர் எழுதிய அநேக செய்யுள்கள் பாடல்களாகச் சேர்க்கப்பட்டன.  இவற்றில், ‘கர்த்தாவே மாந்தர் தந்தையே’ என்னும் பாடலும் ஒன்று.

விட்டியர் 1802ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹாம்ப்டன் பால்ஸ் என்னுமிடத்தில் தமது 85வது வயதில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட

2.    நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே.

3.    மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.

4.    உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.

5.    அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.

Post Comment

Friday, July 14, 2017

பாமாலை 314 - வாழ்க சிலுவையே (Ad Inferno)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            வாழ்க, சிலுவையே; வாழ்க!
பாரமற்ற பாரமே
உன்னை முழுமனதார
தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.

2.    இந்த நிந்தை லச்சை அல்ல,
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே.

3.    உலகத்தின் ஜோதியான
இயேசு தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி, ஈனமான
சிலுவையில் மாண்டாரே.

4.    சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

5.    நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப் போகச் செய்யுமே.

6.    சாகும்போது, திறவுண்ட
வானத்தையும், அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே.

7.    வாழ்க, சிலுவையே! வாழ்க;
மோட்சத்தின் முன் தூதனே;
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!



Post Comment

Thursday, June 22, 2017

கர்த்தரின் வேலை செய்வீர் (Work, for the night)

கர்த்தரின் வேலை செய்வீர்
(Work for the night is coming)

’ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ யோவான் 9 : 4

மானிடவர்க்கத்துக்கு உழைப்பு மிகவும் இன்றியமையாதது.  ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் வெளியேற்றப்பட்டபின், வியர்வை சிந்தி வேலை செய்யவேண்டியவனாயிருந்தான்.  உழைப்பின் மகிமையையும், சோம்பேறித்தனத்தின் தீமையையும் குறித்து, திருமறையின் அநேகப் பகுதிகளில் காணலாம்.  சோம்பேறித்தனத்தைக் கண்டித்து, எறும்புகளின் வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்ளும்படி சாலொமோன் ஞானி போதித்திருக்கிறார் (நீதி 5:6).  ஆண்டவரும் வேலை செய்பவர்களைக் குறித்துப் பல உண்மைகளைக் கூறி, வேலை செய்தவனே கூலிக்குப் பாத்திரனாவான் எனக்காட்டிருக்கிறார் (மத் 10:10; லூக் 10:7).  கடினமாக உழைத்தவன் தகுந்த ஊழியத்தைப் பெறுவதை நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம்.  புதிய உலகம் என்றழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தில் முதலில் குடியேறியவர்கள் அதிகக் கஷ்டப்பட்டு உழைத்ததின் பயனாக, அக்கண்டம் இன்று தலைசிறந்து விளங்குகிறது.

கடவுளுக்கடுத்த வேலைகளிலும் இவ்விதச் சிரத்தை காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ’கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என எரேமியா தீர்க்கதரிசி எச்சரித்திருக்கிறார்.  தமது மூன்றரையாண்டு ஊழியத்தில், நமது ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்தார்.  அப்போஸ்தலர் நடபடிகளிலும், நிருபங்களிலும், ராஜ்ஜியத்தின் பிரபல்லியத்திற்காக அப்போஸ்தலர் ஓயாது உழைத்ததைக் காணலாம்.  ஆகவே நாமும் ஆண்டவரின் ஊழியத்தைத் தளராது செய்ய ஏவப்படுகிறோம்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த அன்னா லூயிசா அம்மையார் (Annie Louisa), 1854ம் ஆண்டு, தன் பெற்றோரோடு கனடா நாட்டுக்குச் சென்று குடியேறினார்.  அக்காலத்தில் கனடா ஆங்கில அரசின் ஒரு குடியேற்ற நாடாக (Colony) இருந்தது.  அங்கு முதலில் குடியேறிய மக்கள் மிகவும் கடினமாக வேலை செய்து நாட்டை சீர்படுத்தவேண்டியிருந்தது.  ஏனெனில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கனடா நாடு ஆள் சஞ்சாரமற்றுக் காடு மேடாக இருந்தது.  அன்னா லூயிசாவின் குடும்பத்தினர் அங்கு சென்றபோதும், மக்களின் கடின உழைப்பு மிகவும் அவசியமாயிருந்தது.  இதைக் கவனித்த அம்மையார், உழைப்பின் தேவையை உணர்ந்தார்.  ஒருநாள் இரவு அவர்கள் திருமறையைப் படித்துக்கொண்டிருக்கும்போது, யோவான் 9:4-ல் ‘ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ என்னும் வசனத்தைக்கொண்டு, உழைப்பின் அவசியத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், ’கர்த்தரின் வேலை செய்வீர்’ என்னும் பாடல் அவர் மனதில் உருவானது.  உடனே அதை அவர் எழுதிவைத்தார்.  இப்பாடலை எழுதும்போது அவருக்கு வயது பதினெட்டு.  சங்கீதப் பண்டிதரான லவ்வல் மேசன் (Lowell Mason) இதற்கு ஓர் அழகிய ராகத்தை அமைத்துள்ளார்.

Lowell Mason
இப்பாடலை எழுதிய அன்னா லூயிசா அம்மையார் 1836ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்டாபர்டுஷயர் (Kiddermore, Stafford­shire) என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது தந்தையான ராபர்ட் வாக்கர் (Robert Walker) என்பவர் ஒரு பொறியாளராக வேலைபார்த்தவர்.  அவரது மூன்று பெண் மக்களில் ‘அன்னா லூயிசா’தான் கடைசி பிள்ளை.  அன்னா லூயிசா பதினெட்டு வயதாயிருக்கையில், வாக்கர் குடும்பம் கனடா நாட்டில் குடியேறினர்.  அங்கு மூன்று சகோதரிகளும் சேர்ந்து பெண்களுக்கான ஒரு சிறிய பள்ளி ஆரம்பித்தனர்.  சில காலத்துக்குப்பின், இரு மூத்த சகோதரிகளும் இறந்துபோனதால், பள்ளியை மூடவேண்டியதாயிற்று.  1863’ல் அன்னா லூயிசா இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து, அங்கு ஒரு மாணவிகள் இல்லத்தில் மேற்பார்வையாளராகவும், புத்தக மதிப்புரை எழுதுபவராகவும் பணியாற்றினார்.  1883’ல் அவர் ஹாரி காக்ஹில் (Harry Coghill) என்னும் ஒரு செல்வந்தரை மணந்து, ஹேஸ்டிங்க்ஸ் நகரில் வசிக்கலானர்.

அன்னா காக்ஹில் அம்மையார் 1907’ம் ஆண்டு தமது 71வது வயதில் பாத் நகரில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    கர்த்தரின் வேலை செய்வீர்
விடியற் காலத்தில்
வைகறை சுகமான
நல்ல நேரத்தில்
சூரியன் வானில் ஏறி
கிரணம் வீசவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

2.    கர்த்தரின் வேலை செய்வீர்
மா உஷ்ண வேளையும்
வெயிலும் எரித்தாலும்
ஒளியாதிரும்
ஊழியம் செய்து வாரும்
இடைவிடாமலும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

3.    கர்த்தரின் வேலை செய்வீர்
பொழுது போகுமே
சிவந்த வானம் பாரும்
ஒளி நீங்குமே
சந்திய காலமாகி
இருள் உண்டாகவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்
*******************************************************

1.         Work, for the night is coming,
Work thro' the morning hours;
Work while the dew is sparkling,
Work 'mid springing flow'rs.
Work when the day grows brighter,
Under the glowing sun;
Work, for the night is coming,
When man's work is done.

2.         Work for the night is coming,
Work thro' the sunny noon;
Fill brightest hours with labor--
Rest comes sure and soon.
Give every flying minute
Something to keep in store;
Work, for the night is coming,
When man works no more.

3.         Work for the night is coming,
Under the sunset skies:
While their bright tints are glowing,
Work, for daylight flies.
Work till the last beam fadeth,
Fadeth to shine no more;
Work, while the night is dark'ning,
When man's work is o'er.




Post Comment