Sunday, August 12, 2018

கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே,

”கிறிஸ்தவப் பாமாலைகளுடன் கீர்த்தனைகளையும் பதிவேற்றுங்கள்” என்று பலரிடமிருந்து தொடர்ச்சியாக வந்த அன்பு வேண்டுகோளைத் தொடர்ந்து கீர்த்தனைகளைப் பற்றியும் பதிவிடலாம் என்று எண்ணினேன்.

எங்கள் ஆலயத்தில் நாங்கள் பாடும் கீர்த்தனைகளை சிலவற்றைப் பதிவு செய்து YouTube பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளேன்.

துவக்கத்தில், ஆலயத்தில் ஆராதனையின்போது பாடப்படும் பாடல்களை என் அலைபேசியில் பதிவு செய்து வந்தேன். அப்பாடல்களின் ஒலித்தரம் ஒழுங்கற்று இருந்த காரணத்தால் இப்போது Audio Mixer'ல் இருந்து பதிவு செய்து அப்பாடல்களைத் தரவேற்றுகிறேன்.  இப்படிப் பதிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளைக் கேட்க விரும்புவோர் இந்தத் ⇉ தளத்தில் அவற்றைக் கேட்கலாம்.  இதுவரை 94 கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் தரவேற்றம் செய்ய ஆண்டவர் கிருபை செய்தார்.  Audio Mixer'ல் இருந்து நல்ல ஒலித்தரத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட கீர்த்தனைகளின் முன்னால் "HQ" என்று Prefix செய்துள்ளேன்.

ஆண்டவரின் அடியார்கள் ஜெபித்து, உபவாசித்து, தங்கள் வாழ்வனுபவங்களில் இருந்து இயற்றிய பொருள் நிறைந்த பாமாலைகள் மற்றும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் சிறப்புகளை அறிய ஆவல் கொண்டிருக்கும் நம் சகோதரருடன் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிருங்கள். பொருளற்ற வார்த்தைகள், இரைச்சலான இசையுடன் கூடிய பாடல்களின்பால் ஈர்க்கப்பட்டுள்ள, நம் ஆலயங்களின் இளம் தலைமுறையினர்க்கும், அடுத்த சந்ததியர்க்கும் இந்த பொக்கிஷங்களைக் கொண்டு சேர்ப்பது நம் கடமை. இந்த வலைத்தளத்தைத் தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்போருடன் பகிர்ந்து, தங்கள் ஆதரவைத் தொடர்ந்து நல்குங்கள் !
  

இப்பக்கத்தை மேலும் மெருகூட்ட, பொருள் நிறைந்ததாக்க, இன்னும் அநேகர்க்குப் பயனுள்ளதாக்கத், தங்களின் மேலான கருத்துகள் / ஆலோசனைகளை எதிர்நோக்குகிறேன்.

மேலும் பல கிறிஸ்தவக் கீர்த்தனைகளை https://christiankeerthanaigal.blogspot.com/ என்ற தளத்தில் நீங்கள் காணலாம்.

கர்த்தர் ஒருவருக்கே எல்லா மகிமையும் !
***********************************************

கிறிஸ்தவக் கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

’திருச்சபை’ / ‘தேவார்ச்சனை’ எனும் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இக்கீர்த்தனையை எழுதியவர் திரு. ஜி.சே.வேதநாயகம் என்று நம் கீர்த்தனை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனந்தபைரவி ராகத்தில், ஆதிதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடல் நம் ஆலயங்களில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. 

இப்பதிவில் நாங்கள் பாடியிருக்கும் ராகம்தான் இதன் மூல ராகமா அல்லது பின்னர் உருவாக்கப்பட்ட வேறேதும் ராகமா என்பது குறித்தத் தகவல் இல்லை. இங்கே இப்பாடல் பாடப்பட்டுள்ள ராகத்தை எங்கள் ஆலயத்தின் பாடகர் குழு தலைவர், ஒரு இசைப்பேழையில் கேட்டு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இப்பாடலுக்கான இசையை நாங்கள் பாடியவண்ணமே எழுதி கீழே கொடுத்துள்ளேன்.

’திருச்சபை’ ‘ஆலயம்’ ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய ஞாயிறு ஆராதனைகளில் தியானிக்கவும், ஆலயப் பிரதிஷ்டை போன்ற சமயங்களில் பாடவும், இக்கீர்த்தனை உகந்தது.




ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி
ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில்

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்

1.    பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்‌ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே

2.    பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி

3.    தனித்தியானத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோடர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலங்கு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார் சுதன் சிந்தையில் வளர்ந்தென்றும் அன்பதில் ஒன்றவே திரு

Post Comment

No comments:

Post a Comment