Thursday, August 16, 2018

Have Thine own way (உம் சித்தம் தேவா)

உம் சித்தம் தேவா
(Have Thine own way Lord)

‘ஆண்டவரே எந்நிலையிலும் எப்படியாகிலும் எங்கள் வாழ்வில் உம் சித்தம் மட்டுமே நிறைவேறச் செய்திடும்’

ஒரு வயதான மூதாட்டியார் ஓர் இரவு ஜெபக்கூட்டத்தில் ஏறெடுத்த இந்த எளிமையான ஜெபமே, உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, இந்தப் பிரபல அர்ப்பணப் பாடல் எழுதப்பட மூலகாரணமாயிற்று.  அன்று முதல் இந்நாள்வரை தனி நபர்கள் தங்கள் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்து, கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்பட இப்பாடல் உற்சாகப்படுத்தி வருகிறது.

Adelaide-A.-Pollard
இப்பாடலின் ஆசிரியர் சகோதரி அடிலெய்ட் பொல்லார்ட் (Adelaide A. Pollard) (1862-1934) அமெரிக்காவின் லோவா (Lowa) மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர்.  தனது படிப்பை முடித்தவுடன் ஒரு பெண்கள் பள்ளியில் அவர் ஆசிரியையாகப் பணிபுரியத் துவங்கினார்.  கூடவே பல்வேறு இடங்களுக்குச் சென்று வேதாகம ஆராய்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கினார்.

ஆப்பிரிக்காவிற்கு ஓர் மிஷினெரியாகச் சென்று ஊழியம் செய்யவேண்டும் என்ற ஆத்தும தாகம் அவருக்கு மிகுந்திருந்தது.  இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக அவர் பணம் திரட்டும் பணியில் இருந்தபோது அவர் நினைத்த அளவு பணம் திரட்டமுடியாத காரணத்தால் மிகுந்த மனவேதனைக்குட்பட்டார். அப்படி ஒரு நாள் வேதனையின் மத்தியில் இரவு ஜெபக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது, முழங்காற்படியிட்டு "It really doesn't matter what you do with us, Lord -- just have your way with our lives . . .." என்ற முதல் பத்தியில் உள்ள ஜெபத்தை ஏறெடுத்து, வீட்டிற்குத் திரும்பியவுடன் ஒரு காகிதத்தை எடுத்து நாம் இன்று பாடும் “Have Thine own way Lord” பாடலை எழுதி முடித்தார்.  பொல்லார்ட், இப்பாடலை எழுதும்போது, எரேமியா 18ம் அதிகாரத்தில் உள்ள நான்காம் வசனமாகிய ”தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்” என்பதன் அடிப்படையில் சரணங்களை அமைத்தார்.

‘ஒரு சிறந்த பரிசுத்தப் பெண்மணி’ என்று பெயர்பெற்ற அடிலெய்டு அடிசன் பொல்லார்டு துறவறத்தை மேற்கொண்டவர்.  அவர் அயோவாவின் ப்ளூம்பீல்ட் என்ற இடத்தில் 27.11.1862 அன்று பிறந்தார்.  தனது பெற்றோரால் சாராள் என்று பெயரிடப்பட்டார்.  ஆனால், அப்பெயரை விரும்பாததால், பிற்காலத்தில் அடிலெய்டு என்ற பெயரைத் தனக்கெனத் தெரிந்துகொண்டார்.  பொல்லார்டு தன் வாழ்நாள் முழுவதும் பல பாடல்களை இயற்றினார்.  ஆயினும் தனக்கெனப் பேரும் புகழும் விரும்பாத இவர், இப்பாமாலைகளில் தன் பெயரை A.A.P எனச் சுருக்கமாகக் கையெழுத்திட்டார்.  எனவே இப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை விபரம் உலகிற்குத் தெரிய வாய்ப்பில்லை.  இவரது பாடல்களில், இப்பாடல் ஒன்றே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


George Coles Stebbins
1902ம் ஆண்டில் அடிலெய்ட் இப்பாடலை எழுதிமுடித்த ஐந்து வருடங்கள் கழித்து, ஜார்ஜ் ஸ்டெப்பின்ஸ் (George Stebbins) இப்பாடலுக்கு ”Adelaide” என்ற ராகத்தை எழுதினார்.  அவரது பாடல் தொகுப்பான ‘Northfield Hymns” என்ற பாடல் புத்தகத்தில் 1907ம் ஆண்டு முதன்முறையாக இப்பாடல் அறிமுகமானது.  ’தூய்மை பெற நாடு” போன்ற பல பாமாலைகளுக்கும் இசையமைத்த பெருமை ஸ்டெப்பின்ஸையே சேரும்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. உம் சித்தம் தேவா என் பாக்கியம்
குயவன் நீர்தாமே களிமண் நானே
உம் சித்தம் போலே ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே  பூரணமாய்

2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாழ்ந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்

3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
நோக்குமே எந்தன் காயங்களை
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்

4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவை என்னில் நான் காட்டவும்
என்னை உம் ஆவியால் நிரப்பும்!

நன்றி: ”131 பாடல் பிறந்த கதை”

Post Comment

No comments:

Post a Comment