Monday, January 28, 2013

பாமாலை 46-இம்மானுவேலே வாரும்

பாமாலை 46 – இம்மானுவேலே வாரும் வாருமே
O come, O come Emmanuel

’மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலை விட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ ஏசாயா 59:20

திருச்சபையின் ஆண்டு வெவ்வேறு காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இவற்றில் முக்கியமானவை, ‘அட்வெந்து’ (கிறிஸ்துவின் வருகை) காலமும், ‘லெந்து’ (கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும்) காலமுமாகும்.  இவற்றைத் தவிர பல பண்டிகை நாட்களும், திருநாட்களும் உண்டு.  ஆதித் திருச்சபையிலும், இக்காலத்தில் ஆங்கிலத் திருச்சபை போன்ற சில சபைகளிலும் பண்டிகை நாட்களுக்கு முந்தின நாள் மாலை ஆராதனை, ‘விழிப்பு ஆராதனை’ என்னப்படும். கிறிஸ்து பிறப்புத் தினத்திற்கு முந்தின நான்கு வாரங்கள் அட்வெந்து நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன.  இந்த நாட்களில், மாலை ஆராதனைகளில், பரிசுத்த கன்னிமரியாளின் கீதத்துக்கு முன்னும் பின்னும், அந்தந்தப் பண்டிகை காலத்துக்குப் பொருத்தமான ஒரு சிறிய வாக்கியம் பாடப்படுவது வழக்கம்.  சபையார் இரு பகுதியாக, அல்லது குருவானவரும் சபையாருமாக இதை மாறி மாறிப் பாடுவார்கள். இப்பாடலுக்கு ஆங்கிலத்தில் ‘Antiphon’ என்று பெயர்.

ஆதி சபையில் அட்வெந்து நாட்களில் பாடப்படும் ‘அந்திபன்’ (Antiphon), ‘ஓ’ என்னும் ஒரே எழுத்தாகும். இதைச் சில விநாடிகள் இழுத்துப் பாடுவர்.  இந்த ‘ஓ’ என்பது வேதனையைக் குறிக்கும் ஒரு தொனியாகும்.  திருச்சபையானது ஆண்டவரின் வருகைக்காக வாஞ்சையுடன் காத்திருக்கும் தவிப்பை இந்த ‘ஓ’ என்னும் தொனி குறிப்பிடும்.  சில காலங்களுக்குப் பின், இந்த ‘ஓ’ என்னும் தொனியுடன் வேதபுத்தகத்தில் நமது ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர்களாகிய ‘இம்மானுவேலே’, ‘ஈசாயின் வேர்த்துளிரே’, ‘அருணோதயமே’, ‘தாவீதின் திறவுகோலே’, ‘வல்லமை பொருந்தியவரே’ என்பவைகளும் சேர்த்துப் பாடப்பட்டன.  இன்னும் சில காலங்களுக்குப் பின், இந்த அந்திபன்களுடன் ஒரு சிறிய ஜெபமும் சேர்த்துப் பாடப்பட்டது.  கிறிஸ்துபிறப்புக்கு முந்தின ஏழு நாட்களில் மாலை ஆராதனைகளில், ஒவ்வொரு நாளும் ஓர் அந்திபன் பாடல் மட்டும் பாடப்பட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒரு பக்தன் இந்த ஐந்து அந்திபன்களையும், ஐந்து கவிகளுள்ள ஓர் அட்வெந்துப் பாடலாக எழுதினார்.  இது லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்ததால் லத்தீன் சபைகளில் மட்டும் பாடப்பட்டு வந்தது, இப்பாடல் அட்வெந்து நாட்களுக்கேற்ற ஒரு பாடலாக இருந்ததால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜான் மேசன் நீல் பண்டிதர் (John Mason Neale) அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  இப்போது இது பல பிறமொழிகளில் ஓர் அட்வெந்துகாலப் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

John Mason Neale
இப்பாடலை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலகமெங்கும் பாடப்படுவதற்குக் காரணமாயிருந்த ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.  ஜான் மேசன் நீல் பண்டிதர் 1866ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 6ம் தேதி ஈஸ்ட்டு கிரின்ஸ்டெட் என்னுமிடத்தில் தமது 48ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இம்மானுவேலே வாரும், வாருமே,
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
இம்மானுவேலின் நாள் சமீபமே.

2.    ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.

3.    அருணோதயமே, ஆ, வாருமே,
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.

4.    தாவீதின் திறவுகோலே, வாருமே,
விண் வாசலைத் திறந்து தாருமே;
ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.

5.    மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

O come, O come Emmanuel

Post Comment

1 comment:

  1. Beautiful song with great meamings
    Love it very much. Thanks for posting it. Praise The Lord Almighty.

    ReplyDelete