Monday, January 7, 2013

பாமாலை 284-வா பாவி இளைப்பாற (Vox Dilecti)

பாமாலை 284 – வா, பாவி, இளைப்பாற வா

(I heard the voice of Jesus say)

Tune : Vox Dilecti

 

‘என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’. மத்தேயு 11:28

     பாவ பாரச் சுமையால் வருந்துகிற யாவருக்கும் நமது இரட்சகராகிய கிறிஸ்து திருவுளம் பற்றுகிற ஆறுதலான வார்த்தைகளில் ஒன்று மேற்காட்டிய வசனமாகும்.  இரட்சகர் பேசும்போது, அவரது சத்தம் நமது காதுகளுக்குக் கேட்பதில்லை.  ஆயினும் நாம் கருத்தாய்க் கவனித்தால், அவரது செய்தியை நமது இதயங்களில் உணருவோம்.  அடிக்கடி அவரது செய்தி தனிப்பட்ட நபர்களுக்குத் தரப்படுவதால், மற்றவர்கள் அதை உணரமுடியாது.  ஒவ்வொருவர் இதயத்திலும் அவர் தட்டி இடம் கேட்கிறார்.  நாம் சோர்ந்துபோகும் நேரங்களில் அவர், ‘இளைப்பாறுதலுக்காக என்னிடம் வந்து ஒரு குழந்தை செய்வதுபோல, உன் தலையை என் மார்பில் வைத்து, உன் மனச்சோர்வையும், துக்கத்தையும், உன்னைக் கவலைக்குட்படுத்தும் எல்லாவற்றையும் என்மேல் வைத்துவிடு’ என்று ஆறுதலளிக்கிறார்.  நாம் ஆத்துமத் தாகமாயிருந்தால், நமக்கு ஜீவ தண்ணீர் அளிக்கிறார்.  நமது வாழ்க்கை இருளடைந்ததாகக் காணப்பட்டால், அவரே உலகத்துக்கு ஒளியாயிருக்கிறார், என்பதை நினைவுகூருவோமாக.  ஆகவே, இரட்சகர் அழைக்கும்போது, இளைப்பாறுதலும், ஜீவ தண்ணீரும், ஒளியும் பெறும்படியாக அவரிடத்தில் செல்லுவோமாக.  ‘வா பாவி, இளைப்பாற வா’ என்னும் பாடலின் முதற்கவியில் இளைப்பாறுதலும், இரண்டாம் கவியில் ஜீவதண்ணீரும், மூன்றாம் கவியில் ஜீவ ஒளியும் ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்.

Horatius Bonar
இப்பாடலை எழுதிய ஹோரேஷியஸ் போனர் (Horatius Bonar) 1808ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் தேதி ஸ்காட்லண்ட் நாட்டில் எடின்பரோ நகரில் (Edinburgh, Scotland) பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் போதகர்களாகப் பணியாற்றியவர்கள். அவரது தாயார் சிறந்த தெய்வபக்தியும் தூய்மையான வாழ்க்கையும் உள்ளவராதலால், அவர்களது மூன்று பிள்ளைகளான ஜான், ஹோரேஷியஸ், ஆன்ட்ரூ என்பவர்கள் கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில் போதகர்களாகப் பணியாற்றினர்.  ஹோரேஷியஸ், எடின்பரோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் தாமஸ் சால்மர்ஸ் என்னும் புகழ்பெற்ற தலைமை ஆசிரியரின் கீழ் கல்வி பயின்றார். இவ்வாசிரியரின் மிகச்சிறந்த போதனை, ஹோரேஷியஸின் ஆத்தும வளர்ச்சிக்கு மிகவும் தூண்டுதலாயிருந்தது.  பின்னர், அவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கல்லூரிப்படிப்பை முடித்து, லீத் நகரத்தில் தூய யோவான் ஆலயத்தில் தம் திருப்பணியை ஆரம்பித்தார்.  ஓய்வுநாட்பள்ளி ஊழியத்தில் விசேஷக் கவனம் செலுத்தி, சிறுவர்களுக்கேற்ற பாடல்கள் எழுதி, அவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 1837ல் தமது முப்பதாவது வயதில் குரு அபிஷேகம் பெற்று, கெல்ஸோ (Kelso) என்னுமிடத்தில் சபைக் குருவாகப் பணியாற்றினார். சுமார் முப்பது ஆண்டுகள் கெல்ஸோவில் பணியாற்றியபின், எடின்பரோ நகருக்கு மாற்றப்பட்டு, ஸ்காட்லாண்டிலுள்ள சுய ஆளுகைச் சபைகளின் (Free Church of Scotland) ஐக்கியத்திற்காக வெகுவாக உழைத்தார்.  இச்சேவைக்காக 1883ல் அவர் அச்சபையின் பிரதம குரு (Moderator) என்னும் உயர் பதவியைப் பெற்றார். அவரது வாழ்க்கையில் அவருக்குப் பல துன்பங்கள் நேர்ந்தன. அவரது பிள்ளைகளில் ஐந்துபேர் இளவயதிலேயே இறந்தனர்.  அவர் மரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னமே அவரது மனைவியும் மறுமைக்குள் சென்றார்.

John Bacchus Dykes
ஹோரேஷியஸ் போனர் போதகரது நீண்ட கால குருத்துவப் பணியில், அவரது சபை மக்களில் ஏராளமானபேர் தங்கள் அன்றாடக வாழ்கையில் நேர்ந்த பல இன்னல்களை அவரிடத்தில் சொல்லி ஆறுதல் கோரினர். மேலும், உலகத்தின் நாலா பக்கங்களிலும் வசித்த ஸ்காட்லண்ட் நாட்டினர் தங்கள் வாழ்க்கையின் பலவிதப் பிரச்சனைகளைக் குறித்து அவருக்குக் கடிதங்கள் எழுதுவதுண்டு. போதகரும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் வசனத்திலிருந்து ஏற்ற ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தேற்றினார்.  இவற்றையெல்லாம் அவர் ஆழமாகச் சிந்தித்து, பாவிக்கு உண்மையான ஆறுதலும், இளைப்பாறுதலும் அளிப்பவர் நமதாண்டவர் ஒருவரே என்பதை உணர்த்துமாறு, ‘வா பாவி, இளைப்பாற வா’ என்னும் பாடலை 1846ல் எழுதினார். John Bacchus Dykes இப்பாடலுக்கான ராகத்தை எழுதினார்.

இப்பாடலைத் தவிர அவர், ஏராளமான பாடல்களும், ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் புகழ்பெற்றவை:

‘நல் மீட்பரே, உம்மேல் என் பாரம் வைக்கிறேன்’ – பாமாலை 307
‘மயங்கும் தாசனை தேவா, நீர் நடத்தும்’ – பாமாலை 325
’நிரப்பும் என்னைத் துதியால்’ – பாமாலை 374


அவர் 1889ம் ஆண்டு, ஜூலை மாதம் 31ம் தேதி தமது 81வது வயதில் எடின்பரோ நகரில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ”வா, பாவி, இளைப்பாற வா,
என் திவ்விய மார்பிலே
நீ சாய்ந்து சுகி,” என்பதாய்
நல் மீட்பர் கூறவே;
இளைத்துப்போன நீசனாய்
வந்தாறித் தேறினேன்;
என் பாரம் நீங்கி, இயேசுவால்
சந்தோஷமாயினேன்.

2.    ”வா, பாவி, தாகந்தீர வா,
தாராளமாகவே
நான் ஜீவ தண்ணீர் தருவேன்,”
என்றார் என் நாதரே;
அவ்வாறு ஜீவ ஊற்றிலே
நான் பானம்பண்ணினேன்;
என் தாகம் தீர்ந்து பலமும்
பேர் வாழ்வும் அடைந்தேன்.

3.    ”வா, பாவி, இருள் நீங்க வா;
நான் லோக ஜோதியே,
உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,”
என்றார் என் நேசரே;
மெய்ஞான அருணோதயம்
அவ்வாறு நான் கண்டேன்
அஜ்ஜோதியில் சந்தோஷமாய்

நான் என்றும் ஜீவிப்பேன்.

Post Comment

No comments:

Post a Comment