பாமாலை 221 – கர்த்தா
நீர் வசிக்கும்
(We love the
place O God)
Tune : (Quam Dilecta)
‘கர்த்தாவே, உமது ஆலயமாகிய
வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்’ சங் 26 : 8
இஸ்ரவேல் புத்திரர் வாக்குப்பண்ணப்பட்ட
கானான் நாட்டில் குடியேறிய பின்பு, எருசலேம் நகரம் அவர்களது தெய்வ வழிபாட்டுக்கு மையமான
இடமாக விளங்கியது. தாவீதரசன் காலத்தில் தேவாலயம் கட்டப்படாவிடினும், ஆசரிப்புக் கூடாரமே
(Tabernacle) தேவாலயமாகக் கருதப்பட்டது. ஆண்டுதோறும் இஸ்ரவேலர் பஸ்கா முதலிய முக்கியமான
பண்டிகைகளுக்கு எருசலேம் செல்லுவது வழக்கமாயிருந்தது. மேற்காட்டிய வசனத்தைத் தாவீதரசன் எழுதும்போது, கடவுளின்
உறைவிடமாகக் கருதப்பட்ட எருசலேமின்பேரிலும், அதிலிருந்த ஆசரிப்புக்கூடாரத்தின்பேரிலும்,
தமக்கும் தம் ஜனத்தாருக்கும் இருந்த வாஞ்சையைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாமும், ஓய்வு நாட்களிலும், மற்றும்
நாட்களிலும் ஆலயத்துக்குச் செல்லுகிறோம். நாமும்
நமது ஆலயங்களை நேசிக்கிறோம். ஆனால் நாம் எவ்வித
வாஞ்சையுடன் ஆலயத்துக்குச் செல்லுகிறோம்? சிந்தித்துப் பார்ப்போமாக.
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
மத்தியில் ஆங்கிலக் கப்பற்படையைச் சேர்ந்த வில்லியம் புல்லக் (William Bullock) என்பவர்,
ஒரு நில அளவைக் குழுவுடன் (Survey Party) கனடா நாட்டுக்கருகிலுள்ள நியூஃபவுண்ட்லாண்ட்
(Newfoundland) என்னும் தீவுக்கு அனுப்பப்பட்டார். இக்குழு அத்தீவின் கடற்கரையை அளந்து கணிக்கவேண்டியிருந்தது. அத்தீவில் குடியிருந்த மக்களின் ஆத்தும நிலையைக்
கண்டு, பக்தியுள்ள கிறிஸ்தவரான புல்லக் மிகவும் மனவேதனையடைந்தார். கடவுள் வழிபாட்டுக்கு ஏதுவான எவ்வித வசதியும் அவ்விடத்தில்
இல்லாதிருந்தது. தெய்வாராதனைக்கேற்ற ஆலயங்களோ,
வேத போதனைக்கேற்ற ஏற்பாடுகளோ சற்றேனும் அங்கில்லை. இதைக் கண்டு அவர் கப்பற்படையில் தமது உத்தியோகத்தை
வேலையொழிப்புச் செய்து, இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு திருமறைப் பயிற்சியடைந்து, குருப்பட்டமும்
பெற்று, எஸ்.பி.ஜி. சங்கத்தாரின் ஆதரவில் திரும்பவும் நியூஃபவுண்ட்லாண்ட் தீவுக்கு மிஷனரியாக
வ்ந்தார். அங்கு இரவுபகலாக உழைத்து, அநேகரை
ஆண்டவரண்டை திருப்பினார். மேலும், கடவுள் வழிபாட்டுக்காக
அங்கு ஆலயங்கள் கட்டத் தீர்மானித்து, திரித்துவக்குடா (Trinity
Bay) என்னுமிடத்தில் தமது
முதல் ஆலயத்தைக் கட்டி முடித்தார். இவ்வாலயத்தின்
மங்கலப்படைப்பு ஆராதனையில் பாடுவதற்காக, ‘கர்த்தா, நீர் வசிக்கும் ஸ்தலத்தை நேசிப்போம்’
என்னும் பாடலை அவரே எழுதினார். மிகவும் எளிமையான
சூழ்நிலையில் எழுதப்பட்ட இப்பாடலானது கிறிஸ்தவ உலகமெங்கும் ஒரு சிறந்த பாடலாகக் கருதப்பட்டு
ஆலய மங்கலைப்படைப்பு விழாக்களிலும், மற்றும் ஆலய ஆண்டு விழாக்களிலும் தவறாமல் பாடப்படுகிறது.
அநேக ஆண்டுகளுக்குப்பின்,
வில்லியம் புல்லக் போதகர் நோவா ஸ்கோஷியாவிலுள்ள (Nova Scotia) ஹாலிபாக்ஸ் (Halifax) நகரின்
பிரதமகுருவாகத் திருப்பணியாற்றும்போது, இப்பாடலுக்கு, மேலும் இரண்டு கவிகள் எழுதினார். இவை நமது பாட்டுப்புத்தகங்களில் சேர்க்கப்படவில்லை. அவற்றில் ஒன்று கர்த்தா, உம் வசனத்தையும், இரக்கத்தையும்
பிரஸ்தாபப்படுத்தும் பக்தர்களை நேசிக்க்கிறோம்’ என்னும் பொருள் கொண்டது. ‘Hymns Ancient and Modern’ என்னும் ஆங்கிலப் பாட்டுப்
புத்தகத்தைப் புதுப்பிக்கும் குழுவிலுள்ள ஸர் ஹென்றி பேக்கர், இக்கவியைச் சேர்க்க விரும்பாமல்,
நமது பாடலிலுள்ள ஐந்தாவது கவியாகிய, ‘மெய் ஜீவனுள்ளதாம் உம் வார்த்தை நேசிப்போம்’ என்னும்
கவியைத் தாமே எழுதிச் சேர்த்துக்கொண்டார்.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. கர்த்தா, நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்;
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்.
2. உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட, நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்.
3. மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்
4. மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்.
5. மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம், ஆறுதல்
அதில் கண்டடைவோம்.
6. உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்?
7. கர்த்தா, உம் முகத்தை
கண்ணாரக் காணவே,
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே.We Love the Place, O God
No comments:
Post a Comment