பாமாலை 232 - சொற்ப காலம்
பிரிந்தாலும் பார்
(God be with you till we meet again)
’நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக’ ரோமர் 16:20
பொதுவாக நாம் ஒருவரை விட்டுப்
பிரியும்போது, ‘போய் வருகிறேன்’ எனக்கூறி விடைபெற்றுக்கொள்கிறோம். ஆங்கிலத்தில் ‘Good-bye’
எனக்கூறுவது வழக்கம். இதற்கு, ‘God
be with you’ (கடவுள் நம்மோடு
இருப்பாராக) என்பது பொருள். கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும்,
மற்றும் வழிபாடுகளிலும், முடிவில் ஆசீர்வாத ஜெபம் கூறப்படுகிறது. இவ்வாசீர்வாதத்தின் முக்கிய அம்சம் ‘கடவுள் உங்களோடு
இருப்பாராக’ என்பதே.
Jeremiah Eames Rankin |
1882ம் ஆண்டு, அமெரிக்காவில்
நியூ இங்கிலாந்து மாகாணத்தில் சபை ஆளுகைச் சபைப் போதகராயிருந்த ஜெரிமையா ராங்கின் (Jeremiah Eames Rankin), என்பவர், தமது சபை மக்கள் ஒருவரை ஒருவர்
விட்டுப் பிரியும்போது, ‘Good-bye’ என்று சொல்வதை, தங்கள் விசுவாசத்துக்கு
முரண்பாடாக இல்லாத ஒரு பாடலாக எழுத ஆவல்கொண்டு, ‘God be with you till we meet again’ என்னும் பாடலை எழுதினார். தங்களுக்கு அருமையானவர்கள் பயணம் செல்லும்போது,
‘நாம் மீண்டும் சந்திக்கும்வரை கடவுள் உம்மோடு இருப்பாராக’ என வாழ்த்துவது, கிறிஸ்தவக்
கொள்கைக்குப் பொருத்தமான பிரிவு உபசாரம் என ராங்கின் போதகர் கருதினார்.
இப்பாடலை எழுதியபின் ராங்கின்
போதகர், புகழ்பெற்ற ஒரு சங்கீத நிபுணரையும், அதிக சங்கீத அனுபவமில்லாத வில்லியம் டோமர்
(William Tomer) என்பவரையும் அழைத்து, இப்பாடலுக்கு ஓர்
ராகம் அமைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அவர்கள்
எழுதிய ராகங்களில், வில்லியம் டோமர் எழுதிய ராகமே சிறந்ததாகக் காணப்பட்டதால், அதையே
இப்பாடலின் ராகமாக வைத்துக்கொண்டார். இப்பாடல்,
எல்லா கிறிஸ்தவப் பிரிவு உபசாரங்களிலும் பாடப்பட்டு வருகிறது, இதன் பல்லவியில், ‘Till we meet at Jesus’ feet’ என்றிருப்பது, திரும்பவும் இவ்வுலகில் சந்திப்பது
நிச்சயமல்ல’ என்னும் கருத்தைக் கொடுப்பதால் பிரிவு உபசாரத்துக்கு இது ஏற்றதல்ல எனச்
சிலர் ஆட்சேபித்தனர். ராங்கின் போதகர் இப்பல்லவியை
எழுதவில்லை என்றும், ராகம் அமைத்தவரே அதைச் சேர்த்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆதலால் சிலர் இப்பாடலைப் பல்லவி இல்லாமல் பாடுகின்றனர். இப்பாடல் கிறிஸ்தவ உலகில் வெகுவாகப் பாராட்டப்படுவதற்குக்
காரணம் டோமர் அமைத்த ராகமே எனக்கூறலாம்.
இப்பாடலை எழுதிய ஜெரிமையா
ராங்கின் என்பவர் 1828ம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில், தார்ண்டன்
நகரில் பிறந்தார் (Thornton,
New Hampshire). ஆரம்பக் கல்வியை அவ்வூரிலேயே முடித்து, அவரது பெற்றோர்
அவரைத் திருப்பணிக்காக அர்ப்பணித்ததால், மாசாசூசட்ஸ் மாகாணத்திலுள்ள அண்டோவர் நகரில்
(Andover,
Massachusetts) திருமறைப் பயிற்சி
நிலையத்துக்கு அவர் அனுப்பப்பட்டார். இங்கு
திருமறைப் பயிற்சியை முடித்தபின், அவர் சபை ஆளுகை முறைச் சபையைச் சேர்ந்து, ஆயர் பட்டம்
பெற்று, அநேக சபைகளில் பணியாற்றி, 1889ம் ஆண்டு, ஹவ்வார்டு பல்கலைக்கழகத்தின் தலைவரானார்
(President of Howard
University in Washington, D.C.). அருளுரையாற்றுவதில் மிகத் திறமை வாய்ந்தவராதலால்,
அவர் பணியாற்றிய ஆலயங்களில் திரளான மக்கள் கூடி வந்தனர். மாலை வேளைகளில் அவர் திறந்தவெளிச் சுவிசேஷக் கூட்டங்களை
நடத்தினார். மேலும் அவர் பல கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதியதுடன், சுவிசேஷப் பாடல்கள்
அடங்கிய பாட்டு புத்தகங்களும் இயற்றினார்.
ஜெரிமையா ராங்கின் போதகர்
1904ம் ஆண்டு, தமது 76வது வயதில் மறுமைக்குட்பட்டார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
பின்பு ஏகசபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
கூடுவோம் கூடுவோம்
இயேசுவோடு வாழுவோம்
கூடுவோம் கூடுவோம்
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
ஜெயக் கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
God be with you till we meet again
No comments:
Post a Comment