Sunday, January 8, 2017

பாமாலை 324 - பாதை காட்டும் (Tune 2)

பாமாலை 324 - பாதை காட்டும், மா யெகோவா
(Guide me, O Thou great Jehovah)

‘உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்’ – சங்கீதம் 73:24

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலையடைந்து, நாற்பது ஆண்டுகளாகப் பாலைவனத்தில் பிரயாணம் செய்து, இறுதியில் கானான் தேசத்தையடைந்தனர்.  பாதை தெரியாத பாலைவனத்தில் அவர்களுக்கு வழி காட்டியது, பகலில் மேக ஸ்தம்பமும், இரவில் தீப ஸ்தம்பமுமே. வழியில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளே ஆச்சரியமானவிதமாக அளித்தார்.  நாமும் நமது சொற்பக் காலப் பூலோக வாழ்க்கையில், பாலைவனத்தில் வழி தெரியாது அலைந்து தெரியும் பரதேசிகள் போலவே இருக்கிறோம்.  கடவுளின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றினால் இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தையடைந்ததுபோல, சாவின் அந்தகாரமாகிய யோர்தானைப் பத்திரமாகக் கடந்து, பரம கானானை அடையலாம்.

Fferm Pantycelyn – The Heritage Board at Pantycelyn, in English and WelshSource : crichbaptist.org
இப்பாடலை எழுதிய வில்லியம்ஸ் போதகர் (William Williams) மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர். அவர் 1717ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் (Welsh) கார்மார்தென்ஷயர் (Carmarthenshire) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் John Williams மற்றும் Dorothy Williams ஆவர். இவரது தந்தை விவசாயத் தொழில் செய்து வந்தவர். இளமைக் கல்வியை முடித்தபின், இவர் வைத்தியத் தொழிலுக்காகப் பயில ஆரம்பித்தார்.  ஆனால் சிறிது காலத்தில் அதைவிட்டு, குருத்துவ ஊழியத்தில் ஈடுபட்டு, 1740ல் டீக்கனாக அபிஷேகம் பெற்று, மூன்று ஆண்டுகள் குருத்துவ ஊழியம் செய்தார்.  சுவிசேஷப் பிரபல்லியத்தில் மிக்க ஆர்வமுடையவராதலால், சபை ஊழியத்தை விட்டு, தனியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.  தமது ஊழியத்தின் ஆரம்பத்தில் அவர் வெஸ்லியின் கொள்கைகளை ஆதரித்து, இறுதியில் கால்வினிஸ்டு மெதடிஸ்டு குழுவினரைப் பின்பற்றினார். தமது தனி ஊழியத்தில், நாற்பது ஆண்டுகளுக்குள் அவர் தொண்ணூற்று ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்தார்.

1785-ஆம் ஆண்டு, ஹண்டிங்டன் (Huntingdon) சீமாட்டியாகிய செலீனா அம்மையார் (Selina), பக்தியுள்ள வாலிபரைக் குருத்துவ ஊழியத்துக்காகப் பயிற்றுவிக்க, தென்வேல்ஸ் நாட்டில் ஒரு வேத சாஸ்திரப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பித்தார்.  கல்லூரியின் ஆரம்ப விழாவில் பாடப்படுவதற்காக ஒரு புதிய பாடலை எழுதித் தருமாறு, ‘வேல்ஸ் நாட்டு இனிய பாடகர்’ (Sweet Singer of Wales) என்றழைக்கப்பட்ட வில்லியம்ஸ் போதகரை ஹண்டிங்டன் சீமாட்டியார் கேட்டார்.  ஆகவே போதகர், ‘பாதை காட்டும் மா யெகோவா’ என்னும் பாடலை எழுதி, அதற்கேற்ற ஒரு ராகமும் அமைத்து, விழாவில் தமது வாத்தியக் குழுவினருடன் முதல்முறையாகப் பாடினார்.  முதலில் இப்பாடல் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும், இப்போது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பாடப்பட்டு வருகிறது.  இப்பாடல் பல்வேறு ராகங்களில் பாடப்பட்டு வந்தாலும், ‘CWM Rhondda’ என்னும் வேல்ஸ் நாட்டு ராகமே அதற்கு மிகப் பொருத்தமானதென்று கருதப்படுகிறது. (இப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகம் அதுவன்று. CWM Rhondda ராகத்தினை இங்கே காணலாம்).

வில்லியம்ஸ் போதகர் வெல்ஷ் மொழியில் எண்ணூற்றுக்கும் அதிகமான பாடல்களும், ஆங்கிலத்தில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய வேறு பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  அவர் 1791ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் பான்டிஸெலின் என்னுமிடத்தில் தமது 74ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            பாதை காட்டும், மாயெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலோகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2.    ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3.    சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன்.

Post Comment

No comments:

Post a Comment