Tuesday, January 10, 2017

பாமாலை 355 - கர்த்தாவின் அற்புத (London New)

பாமாலை 355 – கர்த்தாவின் அற்புத செய்கை
God moves in a mysterious way
Tune : London New

’கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்… என்றைக்கும் காப்பார்’. சங்கீதம் 121:8

’உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆகையால் பயப்படாதிருங்கள்’ (லூக்கா 12:7) என்று ஆண்டவராகிய இயேசு திருவுளம் பற்றியிருக்கிறார்.  வாழ்க்கையில் வெறுப்புற்று, மன அமைதி குலைந்து, நாம் அடிக்கடி சொந்த சித்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.  ஆயினும் அது ஆண்டவருடைய சித்தமாயிராவிட்டால் நிறைவேறுவதில்லை என்பதை எப்போதும் காண்கிறோம்.  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அநேக ஏமாற்றங்களையும், மனவேதனையையும் தாங்க முடியாத ஒரு பக்தன், ஆபிரகாமைத் தன் மகனைப் பலியிடக் கடவுள் ஏவினது போல, தன்னையே பலியிடக் கடவுள் ஏவுகிறார் என நம்பி, தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் கடவுள் ஓர் அற்புத செய்கையினால் அவரது திட்டத்தை செயல்படாமல் தடுத்துவிட்டார்.

William Cowper
(Thanks: thegospelcoalition.org)
வில்லியம் கூப்பர் (William Cowper) என்னும் ஆங்கிலக் கவிஞர் சிறந்த கடவுள் பக்தியும் வேத அறிவும் உள்ளவர்.  ஆனால் அவர் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் உண்டானதால், தாங்கமுடியாத மனவேதனையடைந்தார்.  இதன் விளைவாக அவர் மனநிலை மாறி, பைத்தியம் பிடித்தவர் போலானார்.  இவ்வேதனைகளுக்கு முடிவுகாண, தற்கொலை செய்துகொள்வதே நல்லது எனத் தீர்மானித்தார்.  அதற்காக லண்டன்மாநகருக்கருகில் ஓடும் தேம்ஸ் நதியில் விழுந்துவிட எண்ணங்கொண்டு, ஒரு வண்டியில் ஏறி, வண்டியோட்டியை தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட்டச்சொன்னார்.  வண்டியில் ஏறிய சிறிது நேரத்தில் சுற்றுப்புறமெல்லாம் அடர்த்தியான மூடுபனி மூடிக்கொண்டது.  பாதை தெரியாமல் வண்டியோட்டி வண்டியைப் பல வழிகளில் ஓட்டிச் சென்றான்.  வெகுதூரம் சென்றபோதிலும் குறிப்பிட்ட இடம் சேரமுடியாதலால், வண்டியை நிறுத்தி, பிரயாணியைப் பலவந்தமாகக் கீழே இறக்கிவிட்டான்.  கூப்பர் இருள் சூழ்ந்த தெருவில் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் தன் வீட்டு நடையிலேயே வந்து நின்றார்.  வீட்டுக்குள் சென்று, நடந்த சம்பவத்தை சிறிது நேரம் சிந்தித்ததில், தன் உயிரைக் காப்பாற்றவே கடவுள் மூடுபனியை அனுப்பினார் என்பதை உணர்ந்தார்.  உடனே மேஜையில் உட்கார்ந்து, ‘கர்த்தாவின் அற்புத செய்கை புத்திக்கெட்டாததாம்’ என்னும் பாடலை எழுத ஆரம்பித்து, சிறிது நேரத்தில் எழுதி முடித்தார்.  வாழ்க்கையில் சிக்கலான நிலைமைகளை அனுபவிக்கும் மக்களுக்கு மிகுந்த தைரியத்தையும் மனசாந்தியையும் இப்பாடல் அளிக்கிறது.

வில்லியம் கூப்பர் 1731ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இங்கிலாந்தில் பெர்க்காம்ஸ்டெட் நகரில் பிறந்தார்.  அவரது தந்தை இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் அரண்மனை குருவாக இருந்தார்.  இளமைக் கல்வியை முடித்தபின் அவரது விருப்பத்துக்கு மாறாக சட்டப்படிப்புக்கு அனுப்பப்பட்டு, வழக்கறிஞர் ஆனார்.  பின்பு பாராளுமன்றப் பிரபுக்கள் சபையில் எழுத்தாளராக அமர்ந்தார்.  பாராளுமன்றத்தில் அங்கத்தினர் முன் நின்று பேசுவதும், வாசிப்பதும் அவருக்கு அச்சத்தை உண்டாக்கியதால், சிறிது காலம் சுய புத்தியை இழந்து மந்த புத்தியினருக்கான மருத்துவமனையில் வைக்கப்பட்டார்.  இங்கிருக்கும்போது, ஒரு நாள் அங்குள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வேத புத்தகத்தை வாசித்து, லாசருவை உயிரோடெழுப்பின ஆண்டவர், தன்னையும் குணமாக்க முடியும் என்னும் விசுவாசத்தைப் பெற்றார்.  அவரது ஆத்தும நோயைப் போக்கினது மட்டுமல்லாமல் ஆண்டவர் அவரது சரீர நோயையும் குணப்படுத்தினார்.  அவரது சித்தநோய் குணமானது கண்டு மருத்துவர்கள் வியப்புற்றனர்.

மருத்துவமனையிலிருந்து வெளிவந்தபின், முதலில் ஹன்டிங்டன் நகரிலும், பின்னர் ஆல்னே நகரிலும் சில நண்பர்களுடன் வசித்து வந்தார்.  இங்கு ஆன் நியூட்டன் போதகருடன் நட்புகொண்டு, இருவரும் சேர்ந்து, ‘ஆல்னே பாடல்கள்’ என்னும் பாட்டு புத்தகத்தை இயற்றினார்.  இதில் கூப்பர் 67 பாடல்கள் எழுதியுள்ளார்.  இவரது பாடல்கள் ‘கிறிஸ்து சபையின் விலையுயர்ந்த பொக்கிஷங்கள்’ எனப் போற்றப்படுகின்றன.  கிறிஸ்தவப் பாடல்களைத் தவிர, கூப்பர் ஏராளமான ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலையில் உள்ளவை:

பாவி கேள்! உன் ஆண்டவர் – பாமாலை 283
இம்மானுவேலின் ரத்தத்தால் – பாமாலை 331

வில்லியம் கூப்பர் 1800ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக் கெட்டாததாம்;
பொங்கு கடல் கடும் காற்றை
அடக்கி ஆள்வோராம்.

2.    தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்துவைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே

3.    திகில் அடைந்த தாசரே,
மெய் வீரம் கொண்டிடும்
மின் இடியாய்க் கார் மேகமே
விண் மாரி சொரியும்.

4.    உம் அற்ப புத்தி தள்ளிடும்
நம்பிக்கை கொள்வீரே;
கோபமுள்ளோராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே.

5.    மூடர் நம்பிக்கையின்றியே
விண் ஞானம் உணரார்
தெய்வத்தின் ஞானம் தெய்வமே

வெளிப்படுத்துவார்.
God Moves in a mysterious way

Post Comment

No comments:

Post a Comment