Thursday, April 20, 2017

பாமாலை 86 - விடியற்காலத்து வெள்ளியே

பாமாலை 86 – விடியற்காலத்து வெள்ளியே
(Brightest and best of the sons of the morning)

”விடியற்காலத்து வெள்ளியே தோன்றி” எனும் இப்பாடலை எழுதியவர் ரெஜினால்ட் ஹீபர் (Reginald Heber) என்னும் போதகராவார்.  ஹீபர் இப்பாடலை 1811ம் ஆண்டு Feast of Epiphany’க்காக எழுதினார். Christian Observer எனும் பத்திரிக்கையில் இப்பாடல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. எனினும், ஹீபரின் இறப்புக்குப் பின்னரே இப்பாடல் மற்ற பாடல் புத்தகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Reginald Heber (1783-1826)
இப்பாடலை எழுதிய ரெஜினால்டு ஹீபர் 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் தேதி இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில், மால்பாஸ் (Malpas, Cheshire) என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது ஏழாம் வயதுவரை அவரது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, பதினேழு வயதுவரை அவரது ஊரிலேயே கிராமப்பள்ளியில் கல்வி கற்றார்.  பின்பு ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்தில் பிரேஸ்னாஸ் கல்லூரியில் (Brasenose College) பட்டப்படிப்பு பெற்றார்.  இங்கு கல்வி கற்கையில், கவிகள் எழுதுவதிலும், கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்த திறமை காட்டியதால் அநேக பரிசுகள் பெற்றார்.  கல்லூரியை விட்டபின்னர், 1806, 1807ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார்.  தாய்நாடு திரும்பியதும் 1807ல் குருப்பட்டம்பெற்று, பதினாறு ஆண்டுகள் ஹாட்நெட் நகரில் திருப்பணியாற்றினார்.  இக்காலத்தில் அவர் அநேக பாடல்கள் எழுதினார்.  ‘தூய, தூய, தூயா’ என்ற பாடல் முன்கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் 1819ம் ஆண்டு எழுதப்பட்டது.

அவர் போதகராகப் பணியாற்றும்போது, கிறிஸ்துவையறியாத அயல்நாடுகளைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதுண்டு.  இந்தியா தேசப்படத்தைக் கையில் வைத்து, சுவிசேஷத்தைப் போதிப்பதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்வதாகக் கனவு கண்டார்.  கடைசியாக 1823ம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா அத்தியட்சராக (Bishop of Calcutta) நியமனம்பெற்று, அவ்வாண்டு அக்டோபர் மாதம், 11ம் தேதி கல்கத்தாவில் வந்திறங்கித் தமது பணியை ஆரம்பித்தார்.  அவர் ஊழியத்தில் அதிகமாகப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது.  வடஇந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து, இலங்கைக்கும் சென்று, 1825ல் கல்கத்தா திரும்பினார்.  மறு ஆண்டு அவர் சென்னை மாகாணத்தில் பிரயாணம் செய்து, சென்னை, கடலூர், தஞ்சாவூர் சென்று, கடைசியாகத் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்.  இங்கு பல சபைகளில் திடப்படுத்தல் ஆராதனைகள் நடத்தி, 1826ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி திருச்சிக்கோட்டையிலுள்ள ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை முடித்து, பின்பு குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அதிகக் களைப்பினால் திடீரென மயக்கம் உண்டானதால் தண்ணீர்த்தொட்டியில் விழுந்து காலமானார்.  அவர் கடைசியாக நின்று பிரசங்கம் செய்த மேடையை, திருச்சி கோட்டை ஆலயத்திலுள்ள குருமனையில் இன்றும் காணலாம்.  அவரது ஞாபகார்த்தமாக திருச்சியில் ஒரு முதல்தரக் கல்லூரியும் (Bishop Heber College), இரு உயர்நிலைப் பள்ளிகளும் (Bishop Heber School, Teppakulam Trichy & Bishop Heber School, Puthur Trichy), சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் இல்லமும் (Bishop Heber Hall, Madras Christian College, Chennai) செயல்பட்டு வருகின்றன.

ஹீபர் அத்தியட்சர், அநேக பாடல்கள் எழுதியுள்ளார்.  அவற்றில் பிரபலமான இதர பாடல்கள்:

‘ஞானநாதா, வானம் பூமி நீர் படைத்தீர்’ – பாமாலை 37
’விண்கிரீடம் பெறப்போருக்கு’ – பாமாலை 385
’தூய, தூய, தூயா!’ - பாமாலை 22

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நக்‌ஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2.    தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3.    ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4.    எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.

5.    விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நக்‌ஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

Post Comment

No comments:

Post a Comment