Tuesday, October 22, 2013

பாமாலை 59 - ஒப்பில்லா திரு இரா

பாமாலை 59 – ஒப்பில்லா திரு இரா
Silent Night, Holy Night

கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது’. லூக்கா 2 : 9

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு ஆண்டு முழுவதிலும் உள்ள இரவுகளில் மிகவும் முக்கியமானதும், மகிழ்ச்சியானதுமான இரவு, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின நாள் இரவாகும். ஏனெனில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அமைதியான இந்த இரவில்தான், திடீரெனப் பிரகாசமான ஒளியுடன் தெய்வ தூதர் வானத்தில் தோன்றி, பூலோகத்திற்கு ஒளியாயிருக்கிற ஆண்டவரின் பிறப்பை அறிவித்தனர்.  அன்றிரவில் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய ஒளியானது, இன்று உலக முழுவதிலும் பரவி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக்கொண்டிருக்கிறது.  கிறிஸ்மஸ் தினத்தை நாம் பலவிதமாகக் கொண்டாடினாலும், இரவில் நாம் பாடும், ‘Christmas Carols’ என்னும் பாடல்களே நமக்குக் கிறிஸ்மஸ் ஒளியைத் தருகின்றன. இவ்விதமான ஓரிரவில் பாடுவதற்காக எழுதப்பட்ட ஒரு பாடலே, ‘ஒப்பில்லா திரு இரா’ என்னும் பாடலாகும்.

1818ம் ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின நாள், ஆஸ்திரியா நாட்டில், ஓபண்டார்ப் கிராமத்திலுள்ள (Oberndorf bei Salzburg, Austria) தூய நிக்கலாஸ் ரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் (St Nicholas parish church) வாத்தியக் கருவி (Organ) பழுதடைந்துவிட்டது. அவ்வாலயத்தின் உதவிக் குருவாயிருந்த ஜோசப்மோற் (Joseph Mohr) பாதிரியார் இதைக் கண்டு, தனது சபை மக்கள் பாடல்கள் இல்லாமல் கிறிஸ்மஸ் ஆராதனை அனுபவிக்க வேண்டுமே என வருந்தினார். இதை நிவிர்த்தி செய்ய, Organ இல்லாமல் பாடக்கூடிய ஒரு பாடலைத் தாமே எழுதத் தீர்மானித்து, ‘ஒப்பில்லா திரு இரா’ என்ற பாடலை சிறிது நேரத்தில் எழுதினார்.  உடனே, ஆலயப் பாடகர் தலைவரும் அவ்வூர் ஆசிரியருமான ப்ரான்ஸ் க்ரூபர் (Franz Gruber) என்பவர் Guitar வாத்தியத்துடன் அப்பாடலைப் பாடுவதற்கேற்ற ஓர் ராகத்தையும் அமைத்து, அன்றிரவு ஆராதனையில், க்ரூபர் Guitar வாசிக்க, மோற் பாதிரியார் இப்பாடலைப் பாடினார். 
An old photo of St. Nicholas Church
Source: inmozartsfootsteps.com)
சபையார் இதைக் கேட்டு பரவசமடைந்தனர்.  பின்னர், Organ பழுதுபார்க்கப்பட்டவுடன் அதின் தொனியைப் பரீட்சிக்க, க்ரூபர் இந்த ராகத்தை அதில் வாசித்தார்.  பழுதுபார்க்க வந்தவர் இதைக் கேட்டு மிகவும் பாராட்டி, அதின் பிரதி ஒன்றைக் கேட்டு வாங்கித் தனது கிராமமாகிய ஸில்லர்தாலுக்கு (Zillertal) எடுத்துச் சென்றார்.  அவ்வூரிலுள்ள ஒரு மேல் ஜோடு வியாபாரியின் நான்கு பெண் மக்கள் இப்பாடலைப் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று பாடினர்.  அதைக் கேட்டவர்களெல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  இவ்விதமாக இப்பாடல் ஐரோப்பா முழுவதும் பரவியது.  இப்போது இப்பாடல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிறிஸ்மஸ் பாடல்களில் மிகச் சிறந்த பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.  ஆகவே, ஒரு வாத்தியக் கருவி பழுதடைந்ததின் விளைவாக ஓர் அழகிய கிறிஸ்மஸ் பாடல் உருவாகிற்று.


Autograph (c. 1860) of the carol by Franz Gruber
Source : Wiki
இப்பாடலை எழுதிய மோற் பாதிரியார், 1792ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ம் தேதி ஆஸ்திரியா நாட்டில் லால்ஸ்பர்க் (Salzburg) நகரில் பிறந்தார்.  அவரது தந்தையான பிரான்ஸ் மோற் என்பவர் அந்நாட்டு மேற்றிராணியாரின் சேனையில் ஒரு துப்பாக்கி வீரனாக வேலை பார்த்து வந்தார்.  வேலை காரணமாக அவர் அயலூர்களிலேயே சுற்றித் திரிய நேர்ந்ததால், டோம்விகார் ஹின்லே என்னும் பாதிரியார், ஜோசப் சிறுவனின் வளர்ப்புத் தந்தையாக நியமிக்கப்பட்டார்.  அவரது மேற்பார்வையில் ஜோசப் குருத்துவ ஊழியத்திற்காகவே பயிற்றுவிக்கப்பட்டு, கல்வி முடிந்தவுடன், ரோமன் கத்தோலிக்க சபையின் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார்.  பின்பு லால்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள அநேகச் சபைகளில் பணியாற்றி 1828ல் ஹிண்டர்ஸீ நகரத்தின் தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார்.  1837 முதல் 1848 வரை உவாக்ரீன் நகரத்தில் ஊழியம் செய்து, அவ்வாண்டில் டிசம்பர் மாதம் 4ம் தேதி காலமானார்.  1818ல் அவர் ஓபண்டார்ப் கிராமத்தில் தூய நிக்கலஸ் ஆலயத்தில் உதவிக் குருவாக பணியாற்றும்போதுதான், ‘ஒப்பில்லா திரு இரா’ என்னும் பாடலை உருவாக்கி உலகப் பிரசித்தி பெற்றார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.            ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2.            ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;

3.            ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் 
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Silent Night Holy Night

Post Comment

No comments:

Post a Comment