Sunday, October 20, 2013

பாமாலை 71 - மெய் பக்தரே நீர்

பாமாலை 71 – மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்
Christians Awake! Salute the happy morn

இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்’. லூக்கா 2:10

கிறிஸ்மஸ் தினம் மேல்நாடுகளில் முக்கியமாகப் பிள்ளைகளின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்திற்கு முன்னமே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரியமான பொருட்கள் என்ன என்பதைக் கேட்டறிந்து கிறிஸ்மஸ் காலையில் அவற்றை அவர்களுக்கு வெகுமதியாக அளிப்பது வழக்கம்.  பொதுவாகப் பிள்ளைகள் பெற்றோரிடம் விளையாட்டுக்கருவிகள், பொம்மைகள், புதிய ஆடைகள், தின்பண்டங்கள் முதலியவற்றைக் கேட்பார்கள்.

John Byrom (Source : Wiki)
1749ம் ஆண்டு, இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில், டாலி (Dolly) என்றழைக்கப்பட்ட டாரதி பைரம் (Dorothy Byrom) என்னும் சிறு பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள்.  அவள் தந்தையான ஜான் பைரம் (John Byrom) அவ்வாண்டு கிறிஸ்மஸ் தினத்திற்குச் சில நாட்களுக்கு முன், டாலியிடம் கிறிஸ்மஸ் வெகுமதியாக என்ன வேண்டுமெனக் கேட்டார்.  தனது தந்தை செய்யுள்கள் எழுதும் திறமை வாய்ந்தவர் என்பதையறிந்திருந்த அப்பெண், தனக்கு ஒரு கிறிஸ்மஸ் செய்யுள் (Christmas Poem) இயற்றித் தரக் கேட்டாள்.  கிறிஸ்மஸ் தினத்தன்று காலையில் டாலி எழுந்தபோது, அவள் மேஜையில் ஒரு தட்டில் ‘கிறிஸ்மஸ் தினம், டாலிக்கு’ (Christmas Day, for Dolley) என்று குறிப்பெழுதிய ஒரு செய்யுள் இருக்கக் கண்டாள்.  இச்செய்யுள்தான் கிறிஸ்மஸ் தினத்தன்று உலகமுழுவதிலும் பாடப்பட்டுவரும், ‘மெய்பக்தரே, நீர் விழித்தெழும்பும்’ என்னும் பாடலாகும்.  இச்செய்யுளைப் பார்த்த அவ்வூர் சிற்றாலயத்தின் பாடகர் தலைவரான ஜான் உவெயின் றைட் (John Wainwright) என்பவர், ஒரு மணி நேரத்தில் ‘Yorkshire’ என்னும் ஓர் ராகத்தை உருவாக்கி ஆலயப் பாடகருக்குப் பயிற்சி அளித்து, அன்றையதினமே டாலியின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நின்று பாடினர்.  இப்போது இப்பாடல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகமெங்கும் பாடப்படுகிறது.  ஜான் பைரம் எழுதிய முதல் கைப்பிரதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Original manuscript written by John Byrom
Source : willyorwonthe.blogspot.in
     இப்பாடலை எழுதிய ஜான் பைரம் என்பவர் 1691ம் ஆண்டு, இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிறந்தார்.  அவர் பல பள்ளிகளில் பயின்று, பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரித்துவக் கல்லூரியில் 1711ல் பி.ஏ. பட்டமும், 1715ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  பின்னர் பிரான்ஸ் நாட்டில் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து, வைத்தியப் பட்டம் பெற்றார்.  இங்கிலாந்துக்குத் திரும்பியவுடன், வைத்தியத் தொழிலை விரும்பாமல், சுருக்கெழுத்து ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  மேலும் அவர், வேத சம்பந்தமான பல ஆராய்ச்சிகளும், செய்யுள்களும், பல கிறிஸ்தவப் பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

     அவர் 1763ம் ஆண்டு, தமது 72ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்.

2.            இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3.            அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4.            இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5.            கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.

6.            அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப்படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.

Post Comment

No comments:

Post a Comment