பாமாலை 172 – சபையின்
அஸ்திபாரம்
இப்பாடலை தமிழில் மொழிபெயர்த்தவர் அயர்லாந்தில் இருந்து இந்தியா வந்து மிஷினரி பணியில் ஈடுபட்ட பேராயர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) ஆவார். நமது இருநூற்றாண்டு கீதங்கள் புத்தகத்தில் அநேக (பாமாலை) பாடல்கள், இவர் ஆங்கில/ஜெர்மானிய பாடல்களில் இருந்து மொழிபெயர்த்தவை. பேராயர் ராபர்ட் கால்டுவெல் ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து, அவருடைய மகள் மேரி கால்டுவெல் அவர்களால் பாடகருக்குக் கற்பிக்கப்பட்ட பாடலான ‘சபையின் அஸ்திபாரம்’ என்ற பாடல் முதன்முதலில் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி தூய திரித்துவ ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்டது. பேராயர் கால்டுவெல் அவர்களின் அற்புதமான மிஷினரி வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இப்பதிவின் இறுதியில்..!
பேராயர் கால்டுவெல் குறித்த தகவல்கள் நன்றி: திரு. Stanly Samuel.
Unison
The Church’s one foundation
Tune : Aurelia
’அவரே
சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்’ கொலோ 1:18
’ஆதி சபையில் அப்போஸ்தலர்
காலத்திலும், அதற்குப் பின்னாலும் வேதபுத்தகத்துக்கு மாறுபாடான பல புதுக்கொள்கைகள்
தோன்றின. இவற்றை நீக்குவதற்காகவும், கிறிஸ்தவ
அடிப்படைக் கொள்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் சபையின் மூப்பர்கள் அவ்வப்போது கூடி, அப்போஸ்தலர்
விசுவாசப்பிரமாணம், நிசேயா விசுவாசப்பிரமாணம் முதலியவற்றை வகுத்தனர். ஆயினும் திருச்சபையில் கொள்கை வேறுபாடுகள் உண்டாகிக்கொண்டே
வந்தன. தற்காலத்திலும் நம்மிடையில் பரிசுத்த
ஆவியைப் பெற்று வேறு மொழிகளைப் பேசுதலே திருச்சபையின் அஸ்திபாரம் எனக்கூறும் பிரிவினரையும்,
முழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுதலே மிகவும் முக்கியமானது எனப்போதிப்போரையும்,
ஏழாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிப்பதே மிகவும் முக்கியமான கற்பனை எனக்கொள்வோரையும், மற்றும்
அநேக புதுக்கொள்கைகளைத் திருச்சபையின் அஸ்திபாரமாகப் போதிப்போரையும் காண்கிறோம்.
கடந்த நூற்றாண்டின் மத்தியில்
தென் ஆப்பிரிக்காவிலுள்ள நட்டால் மாகாணத்தின் அத்தியட்சராகக் கோலன்ஸோ (John
William Colenso, first Bishop of Natal) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் ரோமர் நிருபத்துக்கு ஒரு வியாக்கியானம் எழுதினார். அதில், பாவப்பரிகாரம் (Atonement), புனித மதச்சடங்குகள்
(Sacraments), முதலியவற்றைக்குறித்து எழுதப்பட்டிருந்தவை புராதனக் கொள்கைகளுக்கு மாறாகக்
காணப்பட்டன. அவரது மத வழிபாடுகளும் புராதன
முறைகளுக்கு மாறாகவே இருந்தன. அவர் ஊழியம்
செய்த இடத்திலுள்ள சூலு என்னும் ஆப்பிரிக்க மரபினரை அதிகமாக நேசித்து, அவர்களுக்கு
சில தவறான முறைகளுக்கும் சம்மதம் கொடுத்தார்.
உதாரணமாக, பலதாரமணத்தைச் சம்மதித்தார்.
கடைசியாக, 1882ல் வேதபுத்தகத்திலுள்ள முதல் ஐந்து ஆகமங்களையும் குறைகூறும் ஒரு
விமர்சனம் எழுதவே, ஆங்கிலத்திருச்சபை அவரை பலமாகக் கண்டித்து ராஜினாமா செய்யும்படி
வற்புறுத்தியது. இவர் இங்கிலாந்துக்குத் திரும்பி
வந்தவுடன், இக்காரணங்களுக்காக பலமாகத் தாக்கப்பட்டு, ஆலயங்களில் பிரசங்கங்கள் செய்யக்கூடாதென
விலக்கப்பட்டார். மேலும் அவர் ஒரு மதபுரட்டர்
(heretic) என்னும் நாமம் சூட்டப்பட்டு திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டார்.
Samuel J Stone |
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
பல மத வைராக்கியர்கள், கிறிஸ்து சபையின் அடிப்படைக் கொள்கைகளைக்குறித்துப் பல கட்டுரைகள்
எழுதிப் பிரசுரித்தனர். அவர்களில் முக்கியமானவர்
கேப்டவுண் மாகாணத்தின் பிரதம அத்தியட்சரான கிரே என்பவர். இவரது பிரசங்கங்களைப் படித்த சாமுவேல் ஜான் ஸ்டோன்
(Samuel J Stone) என்னும் போதகருக்கு, கிறிஸ்து சபையின் உண்மையான அஸ்திபாரம் என்ன என்பதைக்
காட்டும் ஒரு பாடல் எழுதவேண்டும் என்னும் ஆவல் உண்டானது. ஆகவே அவர், ‘சபையின் அஸ்திபாரம்’, எனும் பாடலை எழுதினார். ஒரு சமயப் புரட்டரின் தவறான கொள்கைகளால் தூண்டப்பட்டு
எழுதப்பட்ட இப்பாடலானது, திருச்சபையின் உண்மையான அஸ்திபாரத்தைக் காட்டுகிறது.
இப்பாடலை எழுதிய சாமுவேல்
ஜான் ஸ்டோன் என்பவர், ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு போதகர். அவர் 1839ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ம் தேதி இங்கிலாந்தில்
ஸ்டாபோர்டுஷயர் மாகாணத்தில் உயிட்மோர் நகரில் பிறந்தார். அவரது தந்தையும் ஆங்கிலத் திருச்சபையின் ஒரு குருவானவரே. ஆரம்பத்தில் சாட்டர்ஹவுஸ் (Charterhouse) என்னும்
ஊரிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்திலும் பயின்று, 1862ல் பி.ஏ. பட்டமும்,
1872ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார். 1862 முதல்
எட்டு ஆண்டுகள் வின்ட்சர் என்னுமிடத்தில் திருப்பணியாற்றினார். 1890 முதல் அவர் லண்டன் மாநகரில் அல்ஹாலோஸ் சபையின்
தலைமைக் குருவாக ஊழியம் செய்தார். அவர் ஒரு
சிறந்த கவிஞர். ஏழு செய்யுள் புத்தகங்களும்,
அனேக பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இதர
பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.
ஜான் ஸ்டோன் போதகர் 1900ஆம்
ஆண்டு, நவம்பர் மாதம், 19ம் தேதி தமது 61ஆம் வயதில் காலமானார்.
பேராயர் கால்டுவெல் குறித்த தகவல்கள் நன்றி: திரு. Stanly Samuel.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபைஒன்றே ஒன்றாம்
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.
3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
”எம்மட்டும்” என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.
4. மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்,
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.
5. என்றாலும், கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்,
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்.
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்.
The Church's One Foundation
தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மிஷினரிகளில் மிகவும் கீர்த்திபெற்றவர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell). 14 மே 1814ம் ஆண்டு வட அயர்லாந்து நாட்டின் Antrim என்ற ஊரின் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். அவருடைய தாய் தந்தையின் பூர்வீக நாடு ஸ்காட்லாந்து.. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நம் நாட்டிலேயே செலவிட்ட இவர், அதன்மீது மிகுந்த பற்றுகொண்டதால், தான் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பிரியப்பட்டார். இவருடைய இளம் வயதில் பெற்றோர் க்ளாஸ்கோ நகரம் சென்றனர். தமது பதினாறாம் வயது வரை அங்கே வாழ்க்கை நடத்தி, ஆங்கில நூல்களை மிகவும் ஆர்வத்துடன் கற்றார். பதினாறு வயதில் இவர் ஓவியத்தில் திறமை காட்டியதாக எண்ணி, இவரது மூத்த சகோதரன் டப்ளிங்’கில் உள்ள ஓவிய கலைக்கல்லூரியில் இவரைச் சேர்த்தார். அந்நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற டாக்டர் உர்விச் பிரசங்கியாரின் தொடர்பும், அங்குள்ள சில பக்தியுள்ள கிறிஸ்தவர்களின் நட்பும் கிடைத்தது. கிறிஸ்துவுக்காக உழைக்கவேண்டுமென்ற எண்ணம் அடிக்கடி அவர் மனதில் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்திற்கு மனதில் இடம் கொடுக்க பிரியமில்லாமல், ஓவியக்கலையில் மூழ்கி நாட்களைச் செலவிட்டார். கிறிஸ்தவ சமயப்பணிகளில் ஈடுபடுவதால் பல கஷ்டங்களுக்குட்படவேண்டுமென பயந்தார். எனினும் கடவுள் அவரிடம் ஒருநாள், ‘நீ இவ்வாறு நாட்களைக் கழிப்பது சரியா? கூடாது’ என்று சொல்லியதுபோலிருந்தது. தனது வாழ்க்கையில் ஒரு திருப்புதல் உண்டான நாள் அந்நாள் என்றும், அந்நாள் மட்டுமல்ல, தான் இந்தியாவுக்கு மிஷினரியாகப் புறப்பட முடிவு செய்த நாளையும், புனித நாட்களாகக் கருதியதாக கால்டுவெல் எழுதியுள்ளார்.
இடையன்குடியில் ஒரு அழகிய ஆலயம் கட்டவேண்டுமென்று கால்டுவெல் ஆசைப்பட்டார். எனவே 1847ம் வருடம் அதற்கு ஆயத்தங்கள் செய்வதில் முனைந்தார். லண்டன் நகரத்தில் கட்டிட வேலைகள் செய்பவர்கள் கழகத்தில் இருந்து அழகிய கோயிலின் மாதிரிப்படம் ஒன்றை வரவழைத்தார். அந்த இடையன்குடி ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. கீழ்திசை ஜன்னலை பூர்த்தி செய்து ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டிருக்கும்போது அதைப் பார்வையிட்ட சென்னை கவர்னர் லார்ட் நேப்பியர் அவ்வேலையைப் பாராட்டி, அதற்குச்செலவான ரூபாய் ஐநூறைக் கொடுத்தார். கோயில் கோபுரத்தில் உள்ள நான்கு அழகிய மணிகள், கால்டுவெல் குடும்பத்தாரால் நன்கொடையாக அளிக்கப்பட்டன. 1880ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி தேவாலயப் பிரதிஷ்டையன்று ஐயாயிரம் மக்கள் அங்கு கூடினார்கள்.
1877-1878ம் ஆண்டுகளில் திருநெல்வேலி-ராமநாதபுரம் மாவட்டங்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள், கஷ்டப்பட்ட பொதுமக்களைப் போஷித்துப் பராமரித்தனர். கால்டுவெல் ஊன் உறக்கமின்றி உழைத்தார். ஆங்கிலேயரிடம் காணப்பட்ட தயாள சிந்தையும், கிறிஸ்தவ ஊழியக்குழுக்கள் செய்த சேவையும் இந்து மக்கள் மனதைக் கவர்ந்தன. கிறிஸ்தவ சபையோரின் தொகை அதிகமாயிற்று. 1877ம் வருடம் மார்ச் மாதம் 16ம் தேதி கல்கத்தா அத்தியட்சாதீண ஆலயத்தில், கனம் கால்டுவெல், கனம் சார்ஜென்ட் ஆகிய இருவரும் சென்னை உதவி அத்தியட்சர்களாக அபிஷேகம் செய்யப்பட்டனர். 1868ம் ஆண்டில் சென்னை கவர்னர் இடையன்குடி வந்து அங்கு ஒரு வாரம் செலவிட்டார்.
தகவல்கள் நன்றி: Missionary Robert caldwell, Idayangudi Biography Classic – Tamil (Am Joel, YouTube), Vikatan.com
The Church's One Foundation
பேராயர் ராபர்ட் கால்ட்வெல் – வாழ்க்கை
குறிப்பு
Robert Caldwell |
1833ம் ஆண்டு க்ளாஸ்கோ நகரத்திற்குத் திரும்பி வந்து, பக்திமானான பாதிரியார் க்ரீவைஸ் ஈவிங்’குடன் ஆலயங்களில் பணியாற்றினார். 1834ம் வருடம் இவருடைய பயிற்சி ஆரம்பமாயிற்று. லத்தீன், கிரேக்க மொழிகளை ஆர்வத்துடன் கற்றார். 1837ம் வருடம் பட்டம் பெற்றார். அவ்வருடம் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி இந்தியாவிற்குக் கப்பல் ஏறினார். இவர் பயணப்படும்போது தாயார் நோய்வாய்பட்டுக்கிடந்தார். படுக்கையினருகே முழங்காற்படியிட்டிருந்த தம் மகனை அவர் முத்தமிட்டு, ‘நான் முழுமனதுடன் யாதொரு முறுமுறுப்பும் இல்லாமல் கடவுளின் ஊழியத்திற்கென்று உன்னைக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி தன் மகனை மனதார வாழ்த்தி அனுப்பினார். இதன்பின் தன் பெற்றோரை கால்டுவெல் இவ்வுலகில் பார்க்கவில்லை. கப்பல் பிரயாணத்தில் பல இன்னல்களை சந்தித்தாலும், பிரயாண நாட்களை நல்வழியிலேயே செலவிட்டார். தெலுகும், சமஸ்கிருதமும் கற்ற சி.பி.பிரவுன் என்பவரும் அக்கப்பலில் ஒரு பிரயாணியாக இருந்தார். இவர் மூலம் சமஸ்கிருத மொழியும் கற்று, தென்னாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் தெரிந்துகொண்டார். கால்டுவெல் 1838ம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ம் தேதி சென்னையை அடைந்தார். லண்டன் மிஷினரி சங்கத்தை சேர்ந்த ட்ரூ என்பவருடன் சில காலம் தங்கினார். சென்னையில் சுமார் மூன்றரை வருடங்கள் செலவிட்டபின்னர், 1841ல் திருநெல்வேலி மாவட்டத்திற்குப் புறப்பட்டார். சென்னையிலிருந்து புறப்பட்ட கால்டுவெல், பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி முதலான இடங்களில் தங்கி நீலகிரியை அடைந்தார். கால்நடையாகவும், குதிரையில் சவாரி செய்தும் அவ்விடங்களைப் பார்த்துவரும்பொழுது, குதிரை கால்தவறி விழுந்து காயப்பட்டது. பின்னர் கூலியாள் தன் படுக்கையையும் பெட்டியையும் எடுத்துச்செல்ல, இவர் சிலசமயம் கால்களில் பாதரட்சையுமின்றி நடந்து செல்லலானார். தெற்கே பாளையங்கோட்டையையும், முதலூரையும் கடந்து, இடையன்குடி வந்து சேர்ந்தார்.
Idayankudi Trinity Church |
செம்மண் வறண்டு, நீர்வளமற்று, பாலைவனம் போலிருந்தது இடையன்குடி. சில புளியமரங்கள் அடங்கிய இடத்தில் ஒரு சிறு ஆலயமும், அதனருகில் மிஷினரி எவரேனும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு ஒரு சிறு கட்டிடமும் இருந்தன. இங்குமங்கும் ஒழுங்கற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்ட கிராமமாக அது காணப்பட்டது. முதல்வேலையாக, இடையன்குடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலத்தையும், சுற்றுப்புறத்திலுள்ள இடங்களையும் விலைக்கு வாங்கினார். பின்பு நேரான தெருக்களை அமைத்து, அவைகளின் இருபக்கங்களிலும், தென்னை மரங்களையும், இதர மரங்களையும் நடும்படி செய்தார். ஆண்பிள்ளைகளுக்கென்று ஒரு பாடசாலையைக் கட்டினார். வாரத்தில் அநேக நாட்கள் கிராமத்தில் சுற்றித்திரிந்து அயராது உழைத்தார். இடையன்குடிக்கு அவர் வந்த இரண்டு வருடங்களில் சுமார் 700 மக்கள் சத்திய வசனங்களைக் கற்று வந்தார்கள். அவர்களில் நாற்பதுபேரை வேத அறிவில் தேர்ச்சி பெறச்செய்து, இருபத்தோரு மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். 1844ம் ஆண்டு, நாகர்கோவிலில் ஊழியம் செய்த கனம் மால்ட் என்பவரின் எலிசாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர். ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி, தாம் அக்கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் அக்கிராமமக்கள் அப்பள்ளிக்கட்டிடத்தில் தம்மை சந்திக்குமாறு ஏற்பாடு செய்தார். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கிராமங்களில் இவர் செலவிட்டார். இதர சமய மக்களை அடிக்கடி சந்திக்க அவகாசமும் கிடைத்தது. தாமும் தம் உபதேசியாரும் மட்டுமல்லாமல், புதிதாக கிறிஸ்தவர்களான மக்களையும் ஊழியத்தில் பங்கெடுக்கச்செய்தார். சுவிசேஷ ஊழியக்குழுக்களை ஆங்காங்கே ஏற்படுத்தினார். பெண்களும் இக்குழுக்களில் சேர்ந்து சுவிசேஷப்பணியைச் செய்யலாயினர்.
1877-1878ம் ஆண்டுகளில் திருநெல்வேலி-ராமநாதபுரம் மாவட்டங்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள், கஷ்டப்பட்ட பொதுமக்களைப் போஷித்துப் பராமரித்தனர். கால்டுவெல் ஊன் உறக்கமின்றி உழைத்தார். ஆங்கிலேயரிடம் காணப்பட்ட தயாள சிந்தையும், கிறிஸ்தவ ஊழியக்குழுக்கள் செய்த சேவையும் இந்து மக்கள் மனதைக் கவர்ந்தன. கிறிஸ்தவ சபையோரின் தொகை அதிகமாயிற்று. 1877ம் வருடம் மார்ச் மாதம் 16ம் தேதி கல்கத்தா அத்தியட்சாதீண ஆலயத்தில், கனம் கால்டுவெல், கனம் சார்ஜென்ட் ஆகிய இருவரும் சென்னை உதவி அத்தியட்சர்களாக அபிஷேகம் செய்யப்பட்டனர். 1868ம் ஆண்டில் சென்னை கவர்னர் இடையன்குடி வந்து அங்கு ஒரு வாரம் செலவிட்டார்.
1870ம் ஆண்டில் மூன்றாம் முறையாக பிரதம அத்தியட்சகர், இடையன்குடி விஜயம் செய்தார். அவருடைய ஆலோசனையின்பேரில், சாயர்புரத்தில் இருந்த எஸ்.பி.ஜி. கல்லூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அதை அங்கு மாற்றும் எண்ணம் கால்டுவெல்லின் மனதில் சில காலம் இருந்தபோதிலும், அதைக்குறித்த முடிவு ஒன்றும் செய்யவில்லை. நாற்பது வருடகாலமாக தாம் பணியாற்றின ஊரைவிட்டுப்போக கால்டுவெல்லுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆயினும் கடவுளின் சித்தப்படி தாம் தூத்துக்குடி சென்று முக்கியமான வேலை செய்யக்கூடுமென நம்பி, அவ்வேலையை சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அக்கல்லூரியை சிறந்த முறையில் நடத்தி விருத்தி செய்தார். அதிக வெப்பமுடைய நாட்டில் 53 வருடங்கள் உழைத்தபின், இவரது உடல் தளர்ந்தது. எனவே, நண்பர்கள், உறவினர், இவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கொடைக்கானலில் வாழத்துவங்கினார். அங்கு நோய்வாய்பட்டு, 1891ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார். அவர் விருப்பப்படி அவர் உடல் இடையன்குடிக்குக் கொண்டுபோகப்பட்டு, அங்குள்ள ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் மூன்று முக்கியமான நூல்களை எழுதி வெளியிட்டார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்’ ’திருநெல்வேலி அரசியல் பொது சரித்திர வரலாறு’, ’திருநெல்வேலியில் எஸ்.பி.ஜி. மிஷன் வரலாறு’, இவைகளைத் தவிர ஆங்கிலத்தில் பத்து சிறு நூல்களையும், நான்கு பிரசங்கங்களையும் அச்சிட்டு வெளியிட்டார். தமிழில் எட்டு சிறு நூல்களை எழுதியுள்ளார். தமிழ் ஜெப புத்தக மொழிபெயர்ப்புக்கழகத்தின் அங்கத்தினராக சிறந்த பணியாற்றினார். ‘சபையின் அஸ்திபாரம்’ என்ற அருமையான தமிழ் ஞானப்பாட்டை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டு மக்களுக்கே அம்மொழியின் மேன்மை புலப்படாதிருந்தபொழுது அதன் சிறப்பை எடுத்துக்காட்டியவர் கால்டுவெல். கிறிஸ்துவின் அடியானாக, சுவிசேஷ நற்பணிக்காக அவர் காட்டிய பேருழைப்பு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
1968ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டின் போது, சென்னை கடற்கரை சாலையில் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்கப்பட்டது. 2010 ஜனவரியில்நெல்லைமாவட்டம், இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப் போற்றும் வகையில், அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரிக்க அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்.
“தமிழ் மொழி 'செம்மொழி' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ் மொழி 'செம்மொழி' என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற உயர் பெரும் நூலில் அறிஞர் கால்டுவெல், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்" என்று நிறுவிக் காட்டி இருக்கிறார்.
அந்த சிறப்புக்குரிய ராபர்ட் கால்டுவெல் தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில், இடையன் குடியில் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய்ச் செலவில் அரசுடைமையாக்கப்பட்டு; புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலை அங்கே நிறுவப்பட்டு; அந்த நினைவில்லத்தையும், சிலையினையும் 17.2.2011 அன்று சென்னையில் இருந்து 'காணொலிக் காட்சி' வாயிலாகத் திறந்து வைத்தேன். அந்த நிகழ்ச்சியில் நான், "தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும்" என்று சுட்டிக்காட்டி; "தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிறித்தவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும். தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும், உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதி யைத் தொகுத்து உதவினர் சிலர். தெள்ளுதமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர்" என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி உரையாற்றினேன்”. இவ்வாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி கால்டுவெல்லுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்த சிறப்புக்குரிய ராபர்ட் கால்டுவெல் தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில், இடையன் குடியில் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய்ச் செலவில் அரசுடைமையாக்கப்பட்டு; புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலை அங்கே நிறுவப்பட்டு; அந்த நினைவில்லத்தையும், சிலையினையும் 17.2.2011 அன்று சென்னையில் இருந்து 'காணொலிக் காட்சி' வாயிலாகத் திறந்து வைத்தேன். அந்த நிகழ்ச்சியில் நான், "தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும்" என்று சுட்டிக்காட்டி; "தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிறித்தவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும். தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும், உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதி யைத் தொகுத்து உதவினர் சிலர். தெள்ளுதமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர்" என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி உரையாற்றினேன்”. இவ்வாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி கால்டுவெல்லுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தகவல்கள் நன்றி: Missionary Robert caldwell, Idayangudi Biography Classic – Tamil (Am Joel, YouTube), Vikatan.com
சபையின் அஸ்திபாரம் vara tunes la notes இருதா அனுப்புக
ReplyDeleteஇந்த ஒரு ராகம் மட்டுமே உள்ளது. வேறு ராகம் ஏதேனும் தெரியவந்தால் கண்டிப்பாகப் பகிர்கிறோம்.
Deletehttps://tamilhymnal.blogspot.com/2023/01/172-paradise-weber.html
Delete