பாமாலை 235 – தனி மாந்தன்,
தேசத்தாரும்
(Once to every man and nation)
’யாரைச்
சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்’. யோசுவா 24:15
ஆபிரகாமின் காலமுதல் அவன்
சந்ததியாரைக் கடவுள் பராமரித்து, அவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்து, மோசே, யோசுவா
முதலிய சிறந்த தலைவர்கள் மூலம் அவர்களை எகிப்து நாட்டிலிருந்து பாலைவனத்தின் வழியாக
நாற்பது ஆண்டுகளாக வழிநடத்திக் கடைசியில் கானான் நாட்டில் குடியேறச் செய்தார். ஆயினும் காலாகாலங்களில் இஸ்ரவேல் புத்திரர் எகோவாவை
மறந்து, அந்நிய தேவர்களைச் சேவித்தனர். அவர்களுக்கு
அடிக்கடி எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும், அவர்களில் பலர் அந்நிய தேவர்களையே
சேவித்துக்கொண்டிருந்தனர். ஆகையால் யோசுவா இஸ்ரவேலரின் எல்லாக் கோத்திரத்தாரையும் சீகேமிலே
கூடிவரச் செய்து, (யோசுவா 24:1) கடவுள் இதுகாரும் அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்
அவர்களுக்குக் காட்டின எல்லா இரக்கங்களையும் விவரித்துச் சொல்லி ‘யாரை சேவிப்பீர்கள்
என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்’ எனக் கூறினார்.
மானிட வாழ்க்கையில், எதைத்
தெரிந்து கொள்ளுவோம் என்று தீர்மானிக்கும் ஒரு சந்தர்ப்பம் எல்லா மனிதருக்கும் ஏற்படுவது
நிச்சயம். உண்மையையா பொய்யையா; நீதியையா அநீதியையா;
தாழ்மையையா மேட்டிமையையா – எதைத் தெரிந்துகொள்ளலாம் என அடிக்கடித் தீர்மானிக்கவேண்டிவருகிறது. இதைப்போலவே, உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும்
அரசியல் காரியங்களில் இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. யுத்தமா சமாதானமா; பிறநாட்டுப்பகுதிகளை ஆக்ரமிப்பதா
அல்லது தனக்குள்ள பகுதிகளில் திருப்தியாயிருப்பதா, முதலிய பல பிரச்சனைகள் ஏற்படும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின்
வரலாற்றில் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இப்படிப்பட்ட பல பிரச்சனைகள்
ஏற்பட்டன. 1845ம் ஆண்டில் அமெரிக்கச் சட்டசபையில்,
அருகிலிருந்த மெக்ஸிகோ நாட்டுடன் போர் தொடுக்கவேண்டுமென ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இது அடிமைகள் வைத்திருந்த தென்பகுதியினர் தங்கள்
பகுதியை விரிவாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தை அச்சமயம் சட்டசபை அங்கத்தினராயிருந்த
ஆபிரகாம் லிங்கன் கடுமையாக எதிர்த்தார். மேலும்,
அடிமைகள் வைக்கலாமா கூடாதா என்ற பிரச்சனையும், அடிமைகள் வைத்திருந்த தென் பகுதியினர்
தனி நாடாகப் பிரிந்துவிடவேண்டும் என்ற அபிப்பிராயமும் அமெரிக்க மக்களை வெகுவாகக் கலங்க
வைத்தது. அச்சமயத்தில் அந்நாட்டிலிருந்த ஜேம்ஸ் லோயல் என்னும் கவிஞர் (James Russell Lowell) நாட்டில் உண்மையும், நீதியும், நேர்மையுமே
மேலானவை என்பதை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகட்டுமாறு 1845ல், 90 வரிகளைக்
கொண்ட ஒரு செய்யுள் எழுதினார். இதில் எவ்விதக்
கஷ்டமும் நஷ்டமும் வந்தாலும், நீதியும் உண்மையுமே மேலானது என்று சுட்டிக்காட்டினார். இச்செய்யுளின் முப்பத்திரண்டு வரிகள் மட்டும் நான்கு
கவிகளுள்ள ஒரு பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலே, ‘தனிமாந்தன், தேசத்தாரும்’
என்னும் பாடலாகும். இப்பாடலுக்கு ‘Ton-y-botel’ என்னும் ராகம் அமைக்கப்பட்டது. இது
வேல்ஸ் நாட்டின் கடற்கரையில் ஒதுங்கிய ஒரு கண்ணாடிப் புட்டியுனுள் எழுதிவைக்கப்பட்டிருந்த
ராகம் எனக் கூறப்படுகிறது. ஆதலால் அதற்கு ‘Ton-y-botel’ (புட்டியுலுள்ள ராகம்) எனப்
பெயர் வந்தது (இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும்
ராகம் அல்ல. இப்பதிவில் “hyfrydol” எனும் ராகம் கொடுக்கப்பட்டிருகிறது).
James Russell Lowell |
இப்பாடலை எழுதிய ஜேம்ஸ் ரஸ்ஸல்
லோயல் என்பவர் 1819ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22ம் தேதி, அமெரிக்காவில் மாசாசூசட்ஸ்
மாகாணத்தில் கேம்ப்ரிட்ஜ் நகரில் பிறந்தார்.
1838ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். அவர் ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்று அவரது பெற்றோர்
விரும்பியதால், அவர் சட்டப்படிப்பும் முடித்து, 1840ல் வழக்கறிஞராகப் பயிற்சி ஆரம்பித்தார். இவ்வேலையை அவர் திறமையுடன் செய்ய இயலாததால், சில
காலத்துக்குப்பின் அதை விட்டு இலக்கியத்துறையில் புகுந்து, அநேக செய்யுள்களும், கட்டுரைகளும்
எழுதிப் பத்திரிகைகளில் வெளியிட்டார்.
1855ல் அவர் பல உபந்நியாசங்கள் செய்ததால், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நவீனமொழி
மேற்பார்வையாளராக அமர்த்தப்பட்டார். 1877 முதல்
1880 வரை ஸ்பெயின் நாட்டில் அமெரிக்க ஸ்தானாதிபதியாகவும், 1880 முதல் 1885 வரை இங்கிலாந்தில்
ஸ்தானாதிபதியாகவும் பணியாற்றினார். அவரது இலக்கியத்
திறமையைப் பாராட்டி ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ், எடின்பெரோ பல்கலைக்கழகங்களில்
அவருக்குக் கௌரவப் பண்டிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
ஜேம்ஸ் லோயல் 1891ம் ஆண்டு,
ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மறுமைக்குட்பட்டார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தனி மாந்தன் தேசத்தாரும்,
நீதிப் போரில் சேர்ந்துமே
நன்மை நாட்ட தீமை ஓய்க்க
ஓர் தருணம் நேருமே;
ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
ஏற்று அன்றேல் தள்ளியே
தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
ஆயுள்காலம் ஓடுமே.
2. சத்திய நெறி மா கடினம்
பயன் பேரும் அற்றதாம்
சித்தி எய்தாதாயினுமே
நீதியே மேலானதாம்
நீதி வீரன் நீதி பற்ற
கோழை நிற்பான் தூரமே
நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
நிற்பர் நீதி பற்றியே.
3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்
கோர நோவு நிந்தை சாவு
சிலுவையும் சகிப்போம்
காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
புதிதாய் விளங்குமே
மேலும் முன்னும் ஏறவேண்டும்
சத்திய பாதை செல்வோரே.
4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும்,
சத்தியம் நிலைத்தோங்கிடும்
வாய்மை வீரன் தூக்குமேடை
தீ வாள்வாய்ப் படுகினும்
வீரன் அவன், லோகம் ஆள்வான்
நீதி வாழ்க்கை வெல்லுமே
சாரும் பக்தனையே நாதர்
காப்பார் காணா நின்றுமே.
Once to every man and nation
Nyz
ReplyDeleteNeed notes
ReplyDelete