Sunday, January 5, 2014

பாமாலை 87 - விண்மீன் நோக்கி (Dix)

பாமாலை 87 – விண்மீண் நோக்கிக் களிப்பாய்
As with gladness men of old

அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்’. மத்தேயு 2 : 10

ஆண்டவராகிய கிறிஸ்து பிறந்தபோது கீழ்நாடுகளிலிருந்து சில சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தினால் வழிகாட்டப்பெற்று, பெத்லகேமுக்கு வந்து, குழந்தையாகிய இயேசுவைத் தொழுதுகொண்டார்கள்.  பேதைகளாகிய மேய்ப்பரையும், ஞானிகளையும், யூதர்களையும் மட்டுமல்ல; உலகத்திலுள்ள எல்லா மக்களையும், கடவுள் நமதாண்டவரிடம் வழிநடத்தி வருகிறார்.  ‘கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள் (லூக்கா 13:29).  இவ்வுண்மைகளை வலியுறுத்தவே, புறஜாதியாருக்குக் கிறிஸ்து வெளிப்பட்ட நாளாகிய பிரசன்னத்திருநாளை (ஜனவரி 6) திருச்சபை ஆசரிக்கிறது; கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகளைப்போல நாமும் ஆண்டவரின் பாதம் தேடி, நம் சம்பத்து யாவையும் அவருக்குப் படைக்க இப்பாடலில் ஏவப்படுகிறோம்.  மேலும், நட்சத்திரம் அவர்களை வழிநடத்தியதுபோல, நித்திய சூரியனான இயேசு, ஜீவ பாதையில் நம்மை நடத்த அவரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

William Chatterton Dix
(Source : Wiki)
இப்பாடலை எழுதிய வில்லியம் சாட்டர்டன் டிக்ஸ் (William Chatterton Dix) என்பவர் ஒரு மருத்துவரின் மகனாக 1837ம் ஆண்டு, ஜூன் மாதம் 14ம் தேதி, இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரத்தில் பிறந்தார்.  இளவயதில் பிரிஸ்டல் நகரிலேயே கல்வி பயின்று, பின்னர் இன்ஷூரன்ஸ் தொழிலில் சேர்ந்து, சில ஆண்டுகளுக்குப்பின் கிளாஸ்கோ நகரில் ஓர் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் மேலாளராகப் பதவியேற்றார்.  இளவயதிலிருந்தே அவர் பக்தியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் செய்து வந்தார்.

1860ம் ஆண்டு பிரசன்னத்திருநாளன்று (Epiphany Day) அவர் நோய்வாய்ப்பட்டு, ஆலய ஆராதனைக்குச் செல்ல இயலாதவராக வீட்டில் படுத்திருந்தார்.  ஆராதனை நேரத்தில் ஜெப புத்தகத்தை எடுத்து, அந்நாளுக்குரிய சுவிசேஷ வாக்கியத்தை (மத் 2:1-12) வாசித்துக்கொண்டிருந்தார்.  அவ்வசனங்களை ஆழ்ந்து சிந்திக்கவே, கிழக்கிலிருந்து நட்சத்திரத்தை கண்டு எவ்வித இன்னல்களையும் பொருட்படுத்தாது, கிறிஸ்து பாலனைத் தரிசிக்க வந்த நிகழ்ச்சி ஒரு கிறிஸ்தவனுக்கு என்னென்ன போதனைகளைக் கொடுக்கிறதெனச் சிந்தித்து, நாமும் நமது சம்பத்து யாவையும் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று உணர்ந்தார்.  சாஸ்திரிமார்களின் யாத்திரை நாமும் பின்பற்றவேண்டிய முன்மாதிரியாக இருக்கிறதென்று அவருக்குப் புலப்பட்டது.  அன்றிரவு படுத்திருக்கும்போது ‘விண்மீன் நோக்கிக் களிப்பாய்’ என்னும் பாடல் அவர் மனதில் உருவாகி, நித்திரைக்குப் போகுமுன் இந்த அழகிய பாடலை எழுதி முடித்தார்.  ஒவ்வொரு கவியின் ஆரம்பத்திலும் சாஸ்திரிமார்கள் முன்மாதிரியைக் குறிப்பிட்டு, நாம் எவ்விதம் அவர்களைப் பின்பற்றலாம் எனக் காட்டியுள்ளார்.


இவர் ஆங்கில மொழியைத்தவிர, கிரேக்க, எத்தியோப்பிய மொழிகளையும் கற்றிருந்தார்.  ஆகையால் அம்மொழிகளிலிருந்தும் பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  அவர் இயற்றிய வேறு பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  அவர் 1898ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 9ம் தேதி இங்கிலாந்தில், கிளிப்டன் என்னுமிடத்தில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            விண்மீன் நோக்கிக் களிப்பாய்
சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,
பின்சென்றார் அவ்வெள்ளியை
முன்நடத்தும் ஜோதியை
நேச கர்த்தா, நாங்களும்
உம்மைப் பின்செல்வோம் என்றும்.

2.    தாழ்வாம் கொட்டில் நோக்கியே
மகிழ்வோடு விரைந்தே,
விண் மண்ணோரும் வணங்கும்
பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,
மனதார நாங்களும்
தேடிப் பாதம் சேரவும்.

3.    முன்னணையின் முன்னதாய்
பொன் படைத்தார் பணிவாய்
படைப்போமே நாங்களும்
பொன் சம்பத்து யாவையும்
தூய்மை பக்தி பூரிப்பாய்
கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய்.

4.    தூய இயேசு நித்தமும்
ஜீவ பாதை நடத்தும்
பாரின் வாழ்க்கை முடிவில்
ஆவியை நீர் மோட்சத்தில்
சேர்ப்பீர், உந்தன் மாட்சியே
போதும்; வேண்டாம் ஜோதியே.

5.    ஒளிர் மோட்ச நாட்டிலே
வேண்டாம் சிஷ்டி ஜோதியே
நீரே நித்திய சூரியனும்
ஜோதி இன்பம் கிரீடமும்
வேந்தே, என்றும் போற்றுவோம்,
அல்லேலூயா பாடுவோம்.
As with Gladness men of Old

Post Comment

No comments:

Post a Comment