Thursday, May 29, 2014

பாமாலை 249 - நல் மீட்பர் பட்சம் (Morning Light)

பாமாலை 249 – நல் மீட்பர் பட்சம் நில்லும்
(Stand up, Stand up for Jesus)
Tune : Morning Light

‘விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்’. 1 கொரி 16:13

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன், அமெரிக்க ஐக்கிய நாட்டில், பில்டெல்பியா நகரில், டட்லி டைங் (Rev. Dudley Tyng) என்னும் குருவானவர், பிரசன்னத் தேவாலயத்தில் (Church of the Epiphany) திருப்பணியாற்றி வந்தார்.  அக்காலத்தில், ஐக்கிய நாடுகளிலுள்ள தோட்ட முதலாளிகள் ஏராளமான அடிமைகளைப் பயன்படுத்தி, திரண்ட பணம் சம்பாதித்து வந்தனர். டைங் போதகர் இம்முறையை வெறுத்ததுமன்றி, அடிமைகள் வைப்பது பெரும் பாவமென்று தனது பிரசங்கங்களில் சுட்டிக்காட்டினார்.  சபையாரில் பலர் அடிமைகள் வைத்திருந்ததால், அவர்கள் போதகரைப் பகைத்தனர். இதன் விளைவாக, குருவானவர் அந்த ஆலயத்தைவிட்டு விலகவேண்டி வந்தது. ஆனால் அவரது கொள்கையை ஆதரித்த சில நண்பர்கள் அந்நகரிலேயே ஒரு பெரிய அறையை வாடகைக்கு அமர்த்தி, குருவானவர் தன் ஊழியத்தைத் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தனர்.

ஓர் ஓய்வுநாளில் அவர், ஐயாயிரம் பேருக்கதிகமான சபையாருக்கு, ‘புருஷராகிய நீங்கள் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் (யாத் 10:11) என்னும் வசனத்தின் பேரில் ஓர் எழுப்புதலான அருளுரையாற்றினார்.  ஆராதனைக்குப்பின், சபையாரில் சுமார் ஆயிரம் பேர் மனமாறுதலடைந்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவைசெய்ய வாக்களித்தனர்.

மூன்று நாட்களுக்குப்பின், புதன்கிழமையன்று, டைங் போதகர் அந்நகரிலுள்ள ஒரு விவசாயப் பண்ணையைப் பார்க்கச் சென்றார்.  அங்கு ஓர் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த குதிரையைப் போதகர் தட்டிக்கொடுக்கும்போது அவரது சட்டையின் கை ஒரு சக்கரத்தால் இழுக்கப்பட்டுக் கை துண்டிக்கப்பட்டது.  மறு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் மரணத்தருவாயிலிருக்கும்போது, தமது சபையாருக்கு ஏதாவது செய்தி கொடுக்க விருப்பமுண்டா என்று அவரைக்கேட்டபோது, ‘கிறிஸ்துவுக்காக எழுந்து நிற்கச் சொல்லுங்கள்” (Tell them to stand up for Jesus) என்றார்.  இதுவே அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.  குருவானவரின் நண்பரான ஜியார்ஜ் டப்பீல்டு (George Duffield) பண்டிதர் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், உணர்ச்சிவசப்பட்டு, ‘நல்மீட்பர் பட்சம் நில்லும்’ என்னும் பாடலை எழுதினார்.  டைங் போதகரின் அடக்க ஆராதனையில், டப்பீல்டு பண்டிதர், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுதலைக் குறித்து (எபேசியர் 6:13) ஓர் எழுப்புதலான பிரசங்கம் செய்து, இறுதியில் தாம் எழுதிய, ‘நல்மீட்பர் பட்சம் நில்லும்’ என்னும் பாடலையும் வாசித்தார்.  பின்னர் இப்பாடல் வெப் (George J. Webb) என்பவரால் அமைக்கப்பட, ‘Morning Light’ என்னும் இராகத்துடன், வாலிபர் கூட்டங்களிலும், திடப்படுத்தல் ஆராதனைகளிலும், பற்பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.

இதை எழுதிய ஜியார்ஜ் டப்பீல்டு பண்டிதர் 1818ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 12ம் தேதி, அமெரிககவில் பென்சில்வேனியா மாகாணத்தில் கார்லைல் நகரில் பிறாந்தார்.  யேல் பல்கலைக்கழகத்திலும், பின்னர் வேதசாஸ்திரக் கல்லூரியிலும் பயின்று, 1840ம் ஆண்டு, நியூயார்க் நகரில் தமது குருத்துவ ஊழியத்தை ஆரம்பித்தார்.  அவரது முன்னோர்களில் பலர் குருத்துவ ஊழியம் செய்திருந்தனர்.  பின்னர் வேறு பல சபைகளில் தொடர்ந்து ஊழியம் செய்து, 1884ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.  அவரது சிறந்த வேத அறிவைப் பாராட்டி, நாக்ஸ் கல்லூரி அவருக்கு கௌரவ பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.  அவர் 1888ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி, புளூம்பீல்டு நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            நல் மீட்பர் பட்சம் நில்லும்!
ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்.

2.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்!
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்!
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்.

4.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி
பாட்டாக மாறுமே!
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.

STAND UP STAND UP FOR JESUS

Post Comment

No comments:

Post a Comment