Tuesday, May 6, 2014

பாமாலை 331 - இம்மானுவேலின் இரத்தத்தால்

பாமாலை 331 – இம்மானுவேலின் இரத்தத்தால்
(There is a Fountain filled with blood)

”அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்”. சகரியா 13 : 1

     இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெறுமுன், பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து, அதின் ரத்தத்தைக் கதவு நிலைகளில் தெளித்ததினால், சங்கார தூதனால் ஏற்படவிருந்த மரணத்திற்குத் தப்பினார்கள்.  பரிசுத்த நற்கருணையில் நாம் பங்குபெறும்போது நமக்காகச் சிந்தப்பட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நமது சரீரமும் ஆத்துமாவும் நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுகின்றன; ஆகவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம், மனுக்குலத்தின் சகல பாவங்களையும் கழுவி, நம்மைச் சுத்திகரிக்க வல்லது.  ‘இம்மானுவேலின் இரத்தத்தால்’ என்னும் இப்பாடல், மேற்கூறிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

     இப்பாடலை எழுதிய வில்லியம் கூப்பர் (William Cowper), 1731ம் ஆண்டு, நவம்பர் மாதம், 26ம் தேதி இங்கிலாந்தில் பெர்க்கம்ஸ்டெட் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை, இரண்டாம் ஜார்ஜ் மன்னருக்கு அரண்மனை குருவாக (Chaplain) இருந்தவர்.  ஆறு வயதிலேயே கூப்பர் தன் தாயாரை இழந்தார்.  வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் பயின்று, பின்னர் சட்டப்படிப்புக்கு அனுப்பப்பட்டார். இதில் தேறிய பின், மூன்று ஆண்டுகள் ஒரு பிரபல வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று, பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் ஒரு எழுத்தராக அமர்ந்தார். இவ்வேலை அவருக்கு அச்சத்தை உண்டாக்கியதால், புத்தி சுவாதீனத்தை இழந்து, தூய அல்பான்ஸ் மருத்தவ நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

     இங்கு சிகிச்சை பெற்று வரும்போது, 1763ம் ஆண்டு எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் நேரிட்டது. ஒருநாள் அங்குள்ள தோட்டத்தில் அவர் உலாவிக்கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு திறந்த வேதபுத்தகத்தைக் கண்டு, அதில் யோவான் சுவிசேஷம் பதினொன்றாம் அதிகாரத்தை வாசிக்கலானார். மரித்துப்போன லாசருவை உயிரோடெழுப்பிய ஆண்டவர், மனச்சோர்வுடன் இருந்த தம்மையும் உயிர்ப்பிக்கக்கூடும் என்னும் நம்பிக்கை அவர் மனதில் உதித்தது. வேதபுத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கையில், ரோமர் நிருபத்தில், மூன்றாம் அதிகாரத்தில், நாம் கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்படுகிறோம் என்று எழுதப்பட்டிருப்பதை வாசித்து, ஆண்டவரின் பேரில் பூரண விசுவாசமடைந்தார். அவரது ஆத்தும நோயைப் போக்கிய ஆண்டவர், சரீர நோயையும் குணப்படுத்தினார்.  அவரது சித்த நோய் குணமானதைக் கண்டு மருத்துவர்கள் வியப்புற்றனர்.

     மருத்துவ நிலையத்திலிருந்து வெளியேறிய பின், அவர் ஆல்னே நகரத்தில் மேரி அம்மையாரின் வீட்டில் வசிக்கலானார்.  இங்கிருக்கும்போது, ஜான் நியூட்டன் போதகருடன் நட்பு கொண்டு, இருவரும் சேர்ந்து ‘ஆல்னே பாடல்கள்’ என்னும் பாட்டுப்புத்தகத்தை உருவாக்கினர்.  இதில் கூப்பர் அறுபத்தேழு பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடல்கள், ‘கிறிஸ்தவ சபையின் பொக்கிஷங்கள்’ எனப்போற்றப்படுகின்றன. அவர் எழுதிய இதர பாடல்களில் பிரபலமானவை, ‘பாவி கேள் உன் ஆண்டவர்’, ‘கர்த்தாவின் அற்புதச் செய்கை’, O for a closer walk with God’ என்பன. ‘இம்மானுவேலின் இரத்தத்தால்’ என்னும் பாடல் 1770ல் எழுதப்பட்டது.  இரட்சணியச் சேனையார் இப்பாடலுடன், ‘மா மகத்துவ ஊற்றே, எனக்காய்ப் பாய்ந்திடு’ எனப்பொருள் கொள்ளும், O glorious fountain, open now for me’ என்னும் பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர்.

     பிரபல சுவிசேஷப் பிரசங்கியாராகிய மூடி போதகரையும், சுவிசேஷப் பாடகராகிய சாங்கி பாடகரையும் முதல் முதலாக ஒன்றாக இணைத்தது இந்தப் பாடல்தான். அமெரிக்காவில் இண்டியானாப் போலிஸ் நகரத்தில், மூடி போதகர் நடத்திய ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் பாட்டுகள் ஆரம்பிக்கத் தகுந்த ஆட்கள் இல்லாததால், கூட்டத்துக்கு வந்திருந்த சாங்கியை ஒரு பாட்டு ஆரம்பிக்கும்படி ஒரு நண்பர் ஏவவே, அவர், ‘இம்மானுவேல் இரத்தத்தால் ‘என்னும் பாடலை உரத்த சத்தமாய் ஆரம்பிக்க, எல்லோரும் உற்சாகமாகப் பாடினர். கூட்டம் முடிந்தவுடன், மூடி போதகர் பாட்டு ஆரம்பித்தவர் யார் என விசாரித்து, சாங்கியிடம் வந்து, பேசத் துவங்கினார்.  இதன் விளைவாகச் சாங்கி தம் அரசாங்க வேலையை விட்டு, சுவிசேஷப் பாடகராக மூடி போதகருடன் சென்றார்.


     கூப்பர் 1800ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25ம் தேதி தமது 69ம் வயதில் காலமானார். அவர் ஆண்டவரின் அன்பை நன்குணர்ந்த ஒரு பக்தன்; தூய்மையான உள்ளம் படைத்தவர்; கவித்திறனுள்ளவர். அவர் எழுதிய அநேக பாடல்களினால் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத்தீங்கும் அதனால்
நிவிர்த்தியாகுமே.

2.    மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோக்ஷானந்தமும்
அடைந்து பூரித்தான்.

3.    அவ்வாறே நானும் இயேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்.

4.    காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.

5.    விண் வீட்டில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
எந்தனை மீட்ட நேசத்தை
கொண்டாடிப் போற்றுவேன்.

Post Comment

2 comments: